KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772 – 1785)

ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு :


1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. இதற்கான அரச பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார். 1608 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவரை வணிகக்குழு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு அனுப்பி சூரத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அனுமதியைக் கோரியது. முதலில் இதனை நிராகரித்தாலும், ஆங்கிலேயர் தங்களது முதலாவது வணிக நிலையத்தை சூரத்தில் நிறுவ ஜஹாங்கீர் 1613ல் ஆணை வழங்கினார். பின்னர், சர் தாமஸ் ரோ என்பவர் மேலும் பல சலுகைகளையும் உரிமைகளையும் வணிகக் குழுவிற்கு பெற்றுத் தந்தார். இதனால், ஆங்கிலேயர் ஆக்ரா, அகமதாபாத், புரோச் ஆகிய இடங்களில் தமது வாணிப மையங்களை அமைத்தனர். இவ்வாறு ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவினர் படிப்படியாக தங்களது வாணிப எல்லையை விரிவுபடுத்தி வந்தனர். 1639ல் பிரான்சிஸ் டே என்பவர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார். மேற்குக் கடற்கரையில், 1668ம் ஆண்டு அரசர் இரண்டாம் சார்லசிடமிருந்து ஆண்டுக்கு பத்து பவுன் வாடகைக்கு வணிகக்குழு பம்பாய் தீவைப் பெற்றது. 

1690 ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் என்ற வணிகக் குழுவின் முகவர் சுதநூதி, கோவிந்தபூர். காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார். இவை பின்னர் கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட கோட்டைக்கு ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியத்தின் நினைவாக வில்லியம் கோட்டை என்று ஜாப் சார்னாக் பெயரிட்டார். இந்தியக் கடற்கரை ஓரங்களில் நிறுவப்பட்ட ஆங்கில வணிக நிலையங்கள் அனைத்தும் பம்பாய், சென்னை, கல்கத்தா மாகாணங்களாக பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டன.1757 ஆம் ஆண்டு பிளாசிப் போர், 1764 ஆம் ஆண்டு பக்சார் போர் ஆகியவற்றின் விளைவாக வணிகக் குழு ஒரு அரசியல் சக்தியாக மாறியது.1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய நிலப்பகுதிகளை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை, இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியே நடைபெற்றது. வணிகக்குழு ஆட்சியின் போது வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக ராபர்ட் கிளைவ் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து வெர்ல்ஸ், கார்ட்டியர் இருவரும் அப்பதவியில் இருந்தனர். 1772 ஆம் ஆண்டு வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸை நியமித்தது.

வாரன் ஹேஸ்டிங்சின் சீர்திருத்தங்கள் :


1772 ஆம் ஆண்டு வங்காளத்தின் ஆட்சிப் பொறுப்பை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்றபோது அங்கு குழப்பமே நிலவியது. வணிகக் குழுவின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. அப்போது நிலவிய பஞ்சம் மேலும் பற்றாக்குறைக்கே வித்திட்டது. ஆகவே, பெருவாரியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் கட்டாயத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் உணர்ந்தார்.

இரட்டையாட்சியை ஒழித்தல் :


கிழக்கிந்திய வணிகக் குழு தாமே ‘திவானி’ பொறுப்பையும் ஏற்று தமது முகவர்கள் மூலமாக நேரடியாக நிலவரி வசூலிக்க தீர்மானித்தது. எனவே, ராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டது. வணிகக்குழுவின் நிதிநிலைமையை சீரமைப்பதற்காக, வாரன் ஹேஸ்டிங்ஸ் நவாபிற்கு அளிக்கப்பட்டுவந்த நிதியுதவி 32 லட்ச ரூபாயை பாதியாகக் குறைத்தார். முகலாயப் பேரரசருக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு ஓய்வூதியம் 26 லட்ச ரூபாயையும் நிறுத்தினார்.

வருவாய் சீர்திருத்தங்கள் :


இரட்டையாட்சி ஒழிக்கப்பட்டபிறகு வரிவசூல் செய்யும் பொறுப்பை வணிகக்குழுவே ஏற்றது. அதற்காக, கல்கத்தாவில் ஒரு வருவாய் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. வரிவசூலை இது மேற்பார்வை செய்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்கிலேய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.கருவூலம் மூர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. ஒரு தலைமைக் கணக்கரும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு, கல்கத்தா 1772ல் வங்காளத்தின் தலைநகராகியது. பின்னர், அது பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் தலைநகராயிற்று.வருவாய் வாரியம் நிலங்களை அவற்றின் உண்மை மதிப்பை அறிந்து கொள்வதற்காக, ஓராண்டுக்குப்பதில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏலத்துக்கு விட்டது. ஏலத்தில் ஜமீன்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இருப்பினும், குடியானவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஒரு சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தன்னிச்சையான மேல்வரிகளும் அநியாயமான அபராதங்களும் ஒழிக்கப்பட்டன. மேலும் குத்தகையை உயர்த்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் இந்த வருவாய்த் திட்டம் தோல்வியில் முடிந்தது. பல ஜமீன்தார்கள் வரிகட்டத் தவறினார்கள். வருவாய் நிலுவை அதிகரித்தது. 

நீதித் துறையை சீரமைத்தல் :


வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவியேற்றபோது, நீதித்துறையில் முறைகேடுகள் மலிந்து காணப்பட்டன. அதுவரை நீதி நிர்வாகத்தை நடத்திவந்த நவாப் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வந்தார். அவரது பல தீர்ப்புகள் கொடுமையானதாக இருந்தன. ஜமீன்தார்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நீதிபதிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதுடன், ஊழல் மிக்கவர்களாகவும் இருந்தனர். மொத்தத்தில், நீதித்துறை ஊழலின் உறைவிடமாகவே காணப்பட்டது.நீதி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் உணர்ந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரின் கீழ் ஒரு உரிமையியல் நீதிமன்றமும், இந்திய நீதிபதியின் கீழ் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் செயல்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டன. மாவட்ட நீதி மன்றங்களிலிருந்து வரும் வழக்குகளை விசாரிக்க, உரிமையியல் வழக்குகளுக்கு ஒன்றும், குற்றவியல் வழக்குகளுக்கு ஒன்றும், ஆக இரண்டு மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டன. உரிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் திவானி அதலத் என்று அழைக்கப்பட்டது. இதற்கு, ஆளுநரும், ஆலோசனைக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் தலைமை வகிப்பர். அதேபோல், குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது. இதற்கு ஆளுநரும் அவரது ஆலோசனைக் குழுவால் நியமிக்கப்பட்ட இந்திய நீதிபதி ஒருவரும் தலைமை வகிப்பர்.நீதிபதிகளுக்கு உதவியாக இந்து மற்றும் முஸ்லீம் சட்டங்களின் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டனர். கற்றறிந்த பண்டிதர்களால் இந்து சட்டத்தொகுப்பு ஒன்று வடமொழியில் உருவாக்கப்பட்டது. இது பாரசீக மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் ஆங்கில வடிவம் – இந்து சட்டங்களின் தொகுப்பு என்ற பெயரில் ஹால்ஹெட் என்பவரால் உருவாக்கப்பட்டது.

வணிக விதிமுறைகளும் பிற சீர்திருத்தங்களும் :


தஸ்தக்குகள் எனப்பட்ட இலவச அனுமதிச் சீட்டுகளை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒழித்தார். உள்நாட்டு வாணிபத்தை முறைப்படுத்தினார். சுங்கவரி நிலையங்களின் எண்ணிக்கையை குறைத்தார். இந்திய மற்றும் அயல்நாட்டு பொருட்கள் அனைத்துக்கும் 2.5 விழுக்காடு என ஒரே சீரான சுங்கவரி வசூலிக்கப்பட்டது. வணிகக் குழு பணியாளர்கள் தொடர்ந்து தனிப்பட்ட வாணிகத்தில் ஈடுபட்டபோதிலும் அவை ஒரு வரம்புக்குட்பட்டே நடைபெற்றன. நெசவாளர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான முன் கட்டண அஞ்சல் முறையை அவர் அறிமுகப்படுத்தினார். கல்கத்தாவில் ஒரு வங்கி தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவின் காவல்துறை மேம்படுத்தப்பட்டு கொள்ளையர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒழுங்குமுறை சட்டம் (1773) :


1773 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒழுங்குமுறை சட்டம் வணிகக் குழுவின் அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும். இதற்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்த இயக்குநர்கள் குழுவும், வணிகர்கள் மன்றமும் வணிகக்குழுவை நிர்வகித்து வந்தன. ஆண்டு தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட இயக்குநர்கள் குழுவே வணிகக் குழுவின் அலுவல்களை நிர்வகித்து வந்தது. இந்தியாவிலிருந்த மூன்று மாகாணங்களும் தனித்தனியாக செயல்பட்டன. அவை ஒவ்வொன்றும் தாய்நாட்டு அரசுக்கே நேரடி பொறுப்பானதாகும். மாகாண அரசின் நிர்வாகம் ஆளுநர் மற்றும் அவரது ஆலோசனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. வணிகக் குழுவின் அலுவல்களில் நாடாளுமன்றம் தலையிடுவதற்கான. சூழ்நிலைகள் அப்போது உருவாயின. ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு, இந்தியாவின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதோடு திவானி உரிமைகளையும் பெற்றதன் மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெற்றது. அதன் ஆரம்பகால ஆட்சி ஊழல் மலிந்ததாகவும் கொடுமையானதாகவும் இருந்தது. வணிகக்குழு நிதிப்பற்றாக்குறையால் தவித்தபோது, அதன் பணியாளர்கள் செல்வத்தில் கொழித்தனர். 1770 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சம் குடியானவர்களை பெரிதும் பாதித்தது. இதனால், வரிவசூல் மந்தமாயிற்று. வணிகக்குழு திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 1773 ஆம் ஆண்டு வணிகக்குழு அவசரக் கடனுதவி கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை நாடியது. இத்தகைய பின்னணியில்தான் வணிகக்குழுவின் அலுவல்களை ஒழுங்குபடுத்துவது என இங்கிலாந்து நாடாளுமன்றம் முடிவு செய்தது. இங்கிலாந்தில் பிரதமராக இருந்த நார்த் பிரபு வணிக்குழுவின் விவகாரங்களை விசாரித்து அறிய ஒரு தேர்வுக்குழுவை நியமித்தார். அக்குழு அளித்த அறிக்கையே ஒழுங்கு முறைச் சட்டம் இயற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகள் :


ஒழுங்குமுறை சட்டம் வணிக குழுவின் அரசை இந்தியாவிலும், தாய்நாட்டிலும் மாற்றியமைத்தது. அதில் இடம்பெற்றிருந்த முக்கிய விதிமுறைகள்;

1. இயக்குநர்கள் குழுவிலுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுவர். ஓய்வு பெற்றவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்தவர்களாவர்.

2. வங்காள ஆளுநர் இனி வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என

அழைக்கப்படுவார். அவரது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும்.

3. தலைமை ஆளுநருக்கு உதவியாக நான்கு பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்பட்டது. பெரும்பான்மை முடிவுப்படியே அரசு செயல்படவேண்டும். தலைமை ஆளுநருக்கு முடிவுசெய்யும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

4. தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக்குழுவிற்கு போர், அமைதி, உடன்பாடு போன்ற விவகாரங்களில் மற்ற மாகாணங்களை கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.

5. கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் ஏற்படுத்த இச்சட்டம் வகை செய்தது. இதில் ஒரு தலைமை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளும் இருப்பர். இது, தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக் குழுவிற்கு அப்பாற்பட்டு தனித்து இயங்கும். 1774 ஆம் ஆண்டு அரச பட்டயத்தின்படி உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.

6. தலைமை ஆளுநர், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட வணிகக்குழுவின் பணியாளர்கள் எவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரிசுப் பொருட்கள், நிதி வெகுமதிகள் போன்றவற்றை பெறுவதற்கு இச்சட்டம் தடைவிதித்தது. சட்டத்தின் நிறைகுறைகள்

வணிகக் குழுவின் அலுவல்களை நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமையே ஒழுங்குமுறை சட்டத்தின் முக்கியத்துவமாகும். மேலும் இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இச்சட்டம் வெளிப்படுத்தியது. வணிகக் குழுவின் தன்னிச்சையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தமையே இச்சட்டத்தின் மிகப்பெரிய நிறையாகும். இந்தியாவின் எதிர்கால நிர்வாகத்திற்கும் சட்டங்களுக்கும் ஒரு வரைச்சட்டமாக இது விளங்கியது.

தலைமை ஆளுநருக்கு போதிய அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பது இச்சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகும். ஆலோசனைக் குழுவிற்கு உச்ச அதிகாரம் அளிக்கப்பட்டமையால், தலைமை ஆளுநரின் முடிவுகளை இது அவ்வப்போது தடை செய்து நிர்வாக முடக்கத்துக்கு வித்திட்டது. இருப்பினும், இச்சட்டத்தின் பெரும்பாலான குறைகள் 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டத்தின்மூலம் சரி செய்யப்பட்டன.

வாரன் ஹேஸ்டிங்சின் விரிவாக்கக் கொள்கை :


வாரன் ஹேஸ்டிங்ஸ் தமது விரிவாக்கக் கொள்கைக்கு புகழ் பெற்றவராவார். இவரது ஆட்சிக் காலத்தில் ரோகில்லாப் போர், முதல் ஆங்கிலேய - மராட்டியப் போர், இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப்போர் ஆகிய போர்கள் நடைபெற்றன.

ரோகில்லாப் போர் (1774) :

மராட்டியப் பகுதிகளுக்கும் அயோத்திக்கும் இடையே இருந்த ஒரு சிறு அரசு ரோகில்கண்ட். இதன் ஆட்சியாளர் ஹபிஸ் ரகமத் கான். மராட்டியப் படையெடுப்பின் அச்சம் காரணமாக, ரகமத்கான் 1772ல் அயோத்தி நவாப்புடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் அத்தகைய படையெடுப்பு ஏதும் நடைபெறவில்லை. ஆனால், நவாப் அதற்கான கட்டணத்தை தருமாறு வற்புறுத்தினார். ரகமத் கான் காலதாமதம் செய்யவே, பிரிட்டிஷார் உதவியுடன் நவாப் ரோகில்கண்ட் மீது படையெடுத்தார். ரோகில்கண்டுக்கு எதிராக பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பிய வாரன் ஹேஸ்டிங்ஸ் அத்தகைய செயலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

முதல் ஆங்கிலேய - மராட்டியப் போர் (1775 – 82) :


1761 ஆம் ஆண்டு மூன்றாம் பானிப்பட்டுப் போருக்குப் பின்பு மராட்டியர்கள் பெரும்பாலும் ஒற்றுமை குன்றி காணப்பட்டனர். பிரிட்டிஷார் தங்களது விரிவாக்கக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இதனை தகுந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.1775 ஆம் ஆண்டு மாதவ ராவ் மற்றும் அவரது சித்தப்பா ரகுநாத ராவ் இருவருக்கிடையே பேஷ்வா பதவிக்காக போட்டி நிலவியது. 1775 மார்ச் திங்களில் பம்பாயிலிருந்த பிரிட்டிஷ் அரசு ரகுநாத ராவுடன் சூரத் உடன்படிக்கையை செய்து கொண்டது. இதன்படி சால்செட், பசீன் பகுதிகளை பிரிட்டிஷாருக்குக் கொடுப்பதாக அவர் வாக்களித்தார். பின்னர், அவர் அதற்குத் தயக்கம் காட்டவே, பிரிட்டிஷார் அப்பகுதிகளைக் கைப்பற்றினர். பம்பாய் அரசின் இந்த நடவடிக்கையை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்கவில்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக வாரன் ஹேஸ்டிங்கஸ் 1776 இல் கர்னல் அப்டன் என்பவரை அனுப்பி வைத்தார் சூரத் உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டு மற்றொரு மராட்டியத் தலைவரான நானா பட்னாவிஸ் என்பவருடன் புரந்தர் உடன்படிக்கையை அவர் செய்து கொண்டார். இந்த உடன்படிக்கைப்படி இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். பிரிட்டிஷார் சால் செட்டை தக்க வைத்துக்கொண்டதுடன், பெரும்தொகையை போர் இழப்பீடாகப் பெற்றனர்.ஆனால், தாய்நாட்டு அரசாங்கம் புரந்தர் உடன்படிக்கையை நிராகரித்தது. வாரன் ஹேஸ்டிங்சும் புரந்தர் உடன்படிக்கையை வெற்றுக்காகிதம் எனக் கருதினார். மராட்டியருக்கெதிராக படையெடுக்கவும் அனுமதியளித்தார். இதற்கிடையில் மராட்டியர்கள் பம்பாய் அரசின் துருப்புக்களை முறியடித்தனர்.1781ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கேப்டன் பாப்ஹாம் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பினார். இப்படை மராட்டிய தலைவர் மகாதாஜி சிந்தியாவை பல இடங்களில் முறியடித்து குவாலியரைக் கைப்பற்றியது. 1782 மே திங்களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் மகாதாஜி சிந்தியா இருவருக்குமிடையே சால்பாய் உடன்படிக்கை கையெழுத்தாயிற்று. இதன்படி, சால்செட், பசீன் பகுதிகள் பிரிட்டிஷாருக்கு கிடைத்தன. ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இரண்டாம் மாதவராவ் பேஷ்வா என ஏற்றுக்கொள்ளப்பட்டார்.இந்திய அரசியலில் சால்பாய் உடன்படிக்கை பிரிட்டிஷ் செல்வாக்கை உறுதிப்படுத்தியது. மராட்டியருடன் அடுத்த இருபது ஆண்டுகால அமைதிக்கும் வழிவகுத்தது. மராட்டியர் உதவியுடன் மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியிடமிருந்து இழந்த பகுதிகளைப் பெறுவதற்கு இவ்வுடன்படிக்கை உதவியாகவும் இருந்தது. இந்திய அரசுகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டதுடன், அவர்களை பிரித்து வைப்பதிலும் பிரிட்டிஷார் வெற்றி கண்டனர் என்று கூறலாம்.

இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போர் (1780 – 84) :


முதல் ஆங்கிலேய - மைசூர் போர் 1767 - 69 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. பிரிட்டிஷாருக்கு எதிராக ஹைதர் அலி பெரும் வெற்றி பெற்றார். போரின் முடிவில் ஹைதர் அலி மற்றும் பிரிட்டிஷாருக்கிடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் மைசூர் போர் தொடங்கியது. இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போருக்கான முக்கிய காரணங்களாவன.

1. 1771ல் மராட்டியர் மைசூரைத் தாக்கியபோது, பிரிட்டிஷார் ஹைதர் அலியுடன்

செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மதிக்கத் தவறினர்.

2. அமெரிக்க சுதந்திரப் போரின்போது, ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலியின் கூட்டாளிகளான பிரஞ்சுக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

3. ஹைதர் அலியின் ஆட்சிப் பகுதிக்குள்ளிருந்த பிரெஞ்சு குடியேற்றமான மாஹி என்ற இடத்தை பிரிட்டிஷார் கைப்பற்றினர். 

4. 1779ல் மராட்டியர் மற்றும் ஹைதராபாத் நிசாம் ஆகியோருடன் ஹைதர் அலி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒரு பெரும்கூட்டிணைவை ஏற்படுத்திக் கொண்டார். வடசர்க்கார் மாவட்டங்களிலிருந்த குண்டூரைக் கைப்பற்றுவதற்காக பிரிட்டிஷார் ஹைதர் அலியின் ஆட்சிப்பகுதி வழியாக தமது துருப்புக்களை அனுப்பியதால் போர் தொடங்கியது. 1780ல் ஹைதர் அலி கர்னல் பெய்லி என்பவரை முறியடித்து ஆற்காட்டை கைப்பற்றினார். அதற்கடுத்த ஆண்டில், வாரன் ஹேஸ்டிங்ஸ் தனது அரசியல் திறமையால் கூட்டிணைவை சிதறடித்தார். அவர் நிசாமுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார். மராட்டியத் தலைவர்களான பான்ஸ்லே மற்றும் சிந்தியா ஆகியோருடனும் சமரசம் செய்து கொண்டு ஹைதர் அலியை தனிமைப்படுத்தினார். 1781 மார்ச் திங்களில் சர் அயர் கூட் பரங்கிப் பேட்டையில் ஹைதர் அலியை முறியடித்தார். 1782 டிசம்பரில் தனது அறுபதாவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹைதர் அலி இறந்தார். அவரது புதல்வர் திப்பு சுல்தான் பதவியேற்கும் வரை இச்செய்தி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கைப்படி இரண்டாம் மைசூர்போர் முடிவுக்கு வந்தது. இருதரப்பிலும் கைப்பற்றப்பட்ட பகுதிகள் திரும்ப அவரவரிடமே ஒப்படைக்கப்பட்டது. இருதரப்பிலும் போர்க்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

பிட் இந்திய சட்டம் (1784) :


ஒழுங்கு முறைச் சட்டம் சில குறைபாடுகளைக் கொண்டிருந்தது எனக் கண்டோம். 1784 ஜனவரித் திங்களில் இளையபிட் (பொதுத் தேர்தல்களுக்குப் பின் இங்கிலாந்து பிரதமரானார்) என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான வரைவு மசோதாவைக் கொண்டு வந்தார். இரு அவைகளிலும் கடும் வாக்குவாதம் நடைபெற்றபோதிலும், ஏழு மாதங்களுக்குப் பிறகு அது நிறைவேற்றப்பட்டது. 1784 ஆகஸ்டில் அரச ஒப்புதலும் வழங்கப்பட்டது. இச்சட்டமே, பிட் இந்திய சட்டம் என புகழ் பெற்றது.

முக்கிய விதிமுறைகள் :

1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் இங்கிலாந்து அரசரால் நியமிக்கப்பட்டனர்.

2. இயக்குநர்கள் குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

3. இந்திய நிர்வாகத்தில் இச்சட்டம் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தலைமை ஆளுநரின் அவை உறுப்பினர் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டது. இதில் படைத் தளபதியும் அடங்குவார்.

4. அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை பிட் இந்திய சட்டம் சிறப்புமிக்கதாகும். இச்சட்டத்தை நுணுகி ஆய்வு செய்தால், வணிகக் குழுவின் நிர்வாகத்தில் ஒருவிதமான இரட்டைத்தன்மை ஏற்படுத்தப்பட்டதை உணரலாம். இயக்குநர் குழுவின் கட்டுப்பாட்டில் வணிக நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் அரசியல் நடவடிக்கைகளும் விடப்பட்டன. அரசரின் பிரதிநிதியாக கட்டுப்பாட்டு வாரியமும், வணிகக் குழுவின் அடையாளமாக இயக்குநர் குழுவும் திகழ்ந்தன.

வாரன் ஹேஸ்டிங்ஸ் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு :


1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் வாரன் ஹேஸ்டிங்ஸ்சைப் பொறுத்தவரை அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.வங்காள அரசின் கொள்கையைக் கண்டித்து பிரதமர் ஆற்றிய உரை தனது தனிப்பட்ட ஆளுமையை குறை கூறுவதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கருதினார். இங்கிலாந்தில் அவரது புகழும் நற்பெயரும் களங்கப்படுத்தப்பட்டது. எனவே, 1785 ஜுன் திங்களில் தமது பதவியைத் துறந்துவிட்டு இந்தியாவிலிருந்து திரும்பினார்.1787 ஆம் ஆண்டு, எட்மண்ட் பர்க் மற்றும் விக் கட்சியினரால், அதிகார வரம்பு மீறல்களைக் காரணமாகக் காட்டி வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. எட்மண்ட் பர்க் அவர்மீது 22 குற்றங்களைச் சுமத்தினார். அவற்றில் ரோகில்லாப் போர், நந்தகுமார் விவகாரம், செயித் சிங் பதவியிறக்கம் செய்யப்பட்டது. அயோத்தி பேகம்கள் துன்புறுத்தப்பட்டது போன்றவை முக்கியமானவையாகும். 1795 ஆம் ஆண்டு வரை விசாரணை நீடித்தது. இறுதியில் வாரன் ஹேஸ்டிங்ஸ் குற்றச் சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். வணிகக் குழுவிடமிருந்து ஓய்வூதியம் பெற்று, 1818 வரை உயிர் வாழ்ந்தார்.


நந்தகுமார் என்பவர் வங்காளத்தில் செல்வாக்கு பெற்ற அதிகாரியாவார், பொய் கையெழுத்து என்ற குற்றத்திற்காக கல்கத்தா உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இத்தீர்ப்பில் ஆங்கிலேயச் சட்டம் பின்பற்றப் பட்டது. நந்தகுமாருக்கு எதிராக வாரன் ஹேஸ்டிங்ஸ்சும் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே என்பவரும் சதி செய்தனர் என்று கூறப்பட்டது.காசி அரசர் செயித் சிங் மீது வாரன் ஹேஸ்டிங்ஸ் கப்பம் கட்டத் தவறியதற்காக அதிகப்படியான அபராதம் விதித்தார். பின்னர், அவரை முறையற்ற வகையில் பதவி நீக்கம் செய்தார்.வங்காள நவாப்பின் அன்னையும் பாட்டியும் அயோத்தி பேகம்கள் எனப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயன்ற நவாப்பிற்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் படையுதவி அளித்தார். இது அதிகார வரம்பை மீறிய செயலாகும்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றிய மதிப்பீடு :


மனத்திட்பம், பேராற்றல், கடும் உழைப்பு போன்ற குணங்களைக் கொண்ட சிறந்த மனிதராக வாரன் ஹேஸ்டிங்ஸ் திகழ்ந்தார். முகலாயர் காலப் பண்பாட்டில் திளைத்திருந்த வங்காளத்தில் நீண்டகாலம் தங்கியிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளம், பாரசீகம் போன்ற கீழ்த்திசை மொழிகளைக் கற்றதோடு, கீழை நாட்டு பழக்க வழக்கங்களையும் வளர்த்துக் கொண்டார். திறமையான நிர்வாகத்தை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு இந்தியப் பண்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவனமாக இருந்தார். எனவே, இந்திய மொழிகளைக் கற்பதையும், கலைகளைப் பேணுவதையும் ஆதரித்தார். எதிர்ப்புகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் மேற்கொண்ட பணிகள் சவால்கள் நிறைந்தவையாகும். புற எதிரிகளை அசாத்திய துணிச்சலுடனும், வற்றாத வலிமையுடனும் எதிர்கொண்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் உடனிருந்த எதிரிகளை அசாதாரண பொறுமையுடனும் திடமனதுடனும் கையாண்டார். வாரன் ஹேஸ்டிங்ஸ் விட்டுச் சென்ற அடித்தளத்தின்மீது தான் அவருக்குப் பின் வந்தோர் பிரிட்டிஷ் ஆட்சியை நிறுவினர்.

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...