KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813–1823)

1813 ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் பிரபு தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். ஆதிக்கக் கொள்கையை தீவிரமாக பின்பற்றிய அவர் பல போர்களில் ஈடுபட்டார். அவரது தீவிர மற்றும் பேரரசுக்கொள்கைகள் பிரிட்டிஷ் பேரரசின் விரிவாக்கத்திற்கு வித்திட்டன. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர் இவரேயாகும். ஹேஸ்டிங்ஸ் பதவியேற்றபோது இந்தியாவின் நிலைமை பிரிட்டிஷ் ஆட்சிக்கு பெரும் அச்சத்தை அளிப்பதாகவே இருந்தது. மத்திய இந்தியாவில் குழப்பம் நீடித்தது. பிண்டாரிகள் அப்பகுதியை கொள்ளையடித்த வண்ணம் இருந்தனர். மராட்டியரால் அவர்களை ஒடுக்க முடியவில்லை. மராட்டிய தலைவர்களுக்குள் உட்பூசல்கள் தொடர்ந்தன. இருப்பினும், அவர்கள் பிரிட்டிஷாரை இந்தியாவைவிட்டு விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். பேஷ்வா பிரிட்டிஷாருக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டார். கூர்க்காக்களின் ஆக்ரமிப்பு ஹேஸ்டிங்சுக்கு கவலையளிப்பதாக இருந்தது. எனவே, பிண்டாரிகளை ஒடுக்கி அமைதியை நிலை நாட்டவும், மராட்டியருடனும் கூர்க்காக்களுடனும் போரிட்டு பிரிட்டிஷ் அரசுக்கு இருந்த அச்சத்தைப் போக்கவும் அவர் உறுதி பூண்டார்.

கூர்க்காவினருக்கு எதிரான போர் (1814 – 1816):


1768ல் நேபாளம் ஒரு வலிமை மிக்க கூர்க்கா அரசாக எழுச்சி பெற்றது. இந்தியாவின் வடக்கிலிருந்த நேபாளம் சீனாவை வடக்கிலும் வங்காளத்தை கிழக்கிலும் அயோத்தியை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. 1801 ஆம் ஆண்டு அயோத்தி நவாப்பிடமிருந்து கோரக்பூர், பாஸ்தி மாவட்டங்களை பிரிட்டிஷார் பெற்றனர். இதனால், பிரிட்டிஷ் ஆட்சியின் எல்லை நேபாளம் வரை விரிவடைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியில் கூர்க்காக்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் போருக்கு இட்டுச் சென்றது. 1814 ஆம் ஆண்டு மே மாதம், கூர்க்காக்கள் பிரிட்டிஷ் காவல் நிலையத்தை தாக்கி அங்கிருந்த அதிகாரியையும் 18 காவலர்களையும் கொன்றனர். எனவே, ஹேஸ்டிங்ஸ் நேபாளத்தின்மீது போர் தொடுத்தார். 1814ல் பிரிட்டிஷாருக்கும் கூர்க்காக்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. இறுதியில் நேபாளப் படையின் திறமைமிக்க படைத்தளபதியான அமர் சிங் தாபா சரணடைந்தார்.1816 மார்ச்சில், செகௌலி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. தராய் பகுதியில் தாங்கள் கோரிய உரிமையை கூர்க்காக்கள் விட்டுக் கொடுத்தனர். மேலும், குமான், கார்வால் பகுதிகளையும் பிரிட்டிஷாருக்கு அளித்தனர். இதனால், சிம்லாவைச் சுற்றியிருந்த பகுதிகள் பிரிட்டிஷாருக்கு கிடைத்தன.அவர்களது வடமேற்கு எல்லை இமாலயப் பகுதிகளைத் தொட்டது. சிக்கிமிலிருந்து வெளியேறிய கூர்க்காக்கள், காத்மண்டுவில் ஒரு பிரிட்டிஷ் தூதரை வைத்திருக்கவும் ஒப்புக்கொண்டனர். ஆங்கிலேயரைத்தவிர வேறு எந்த அயல்நாட்டவரையும் பணியில் அமர்த்துவதில்லை என்றும் அவர்கள் உறுதியளித்தனர். மலைவாழிடங்களான சிம்லா, முசூரி, நைனிடால், ராணிகட் போன்றவை பிரிட்டிஷார் வசமாகியது. அவற்றை சுற்றுலாத் தலங்களாகவும் நலவாழ்வு ஓய்விடங்களாகவும் பிரிட்டிஷார் மாற்றியமைத்தனர். கூர்க்காப் போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்சுக்கு மார்குயிஸ் பட்டம் வழங்கப்பட்டது.

பிண்டாரிகளை ஒடுக்குதல் :


பிண்டாரிகளின் தோற்றம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. மராட்டியப் பகுதியில் படையெடுத்தபோதுதான் பிண்டாரி குறித்த தகவல் கிடைக்கிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பையோ அல்லது சமயத்தையோ சார்ந்தவர்களல்லர். ஊதியம் ஏதுமின்றி அவர்கள் ராணுவத்திலும் பணியாற்றுவதுண்டு. அதற்கு ஈடாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். முதலாம் பாஜிராவ் காலத்தில் மராத்திய ராணுவத்தில் குதிரை வீரர்களாக அவர்கள் பணிபுரிந்தனர். ஆனால், அவர்கள் ஒருபோதும் ஆங்கிலேயருக்கு உதவியதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ராஜபுதனப் பகுதிகள், மத்திய மாகாணங்கள் ஆகியன பிண்டாரிகளின் முக்கிய இருப்பிடங்களாகும். கொள்ளையடிப்பதே அவர்களது அடிப்படைத் தொழிலாகும். பிண்டாரிகளின் தலைவர்கள் இந்து மற்றும் முஸ்லிம் என்ற இரு இனத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில், வாசில் முகமது, சிட்டு, கரிம் கான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இவர்களது தலைமையை ஏற்று செயல்பட்டனர். 1812 பிண்டாரிகள் மீர்சாபூர், ஷாஹாபாத் மாவட்டங்களைத் தாக்கி கொள்ளையடித்தனர். 1815ல் நிசாமின் ஆட்சிப் பகுதிகளை சூரையாடினர். 1816ல் வடசர்க்கார் மாவட்டங்களில் புகுந்து கொள்ளயடித்தனர். எனவே, ஹேஸ்டிங்ஸ் பிரபு பிண்டாரிகளை ஒடுக்குவது என உறுதிபூண்டார். இதற்கென, 1,13,000 வீரர்கள், 300 துப்பாக்கிகள் கொண்ட ஒரு பெரும்படையைத் திரட்டினார். நாற்புறமிருந்தும் இப்படை பிண்டாரிகளைத் தாக்கியது. வடக்கில் இப்படைக்கு ஹேஸ்டிங்சே தலைமை வகித்தார். தெற்கில் சர் தாமஸ் வாஸ்லாப் படை நடத்தினார். 1818 ஆம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகள் முழுதும் ஒடுக்கப்பட்டனர். அவர்களது கூட்டங்கள் கலைக்கப்பட்டன. உத்திரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் கரீம்கானுக்கு ஒரு சிறிய பண்ணை கொடுக்கப்பட்டது. வாசில் முகமது சிந்தியாவிடம் தஞ்சமடைந்தார். ஆனால்,சிந்தியா அவரை பின்னர் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். வாசில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சித்து பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து காடுகளுக்கு தப்பியோடினார். அங்கு புலிக்கு இரையானார். 1824ம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகளின் தொல்லை முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

மராட்டியக் கூட்டிணைவின் வீழ்ச்சி :


மராட்டியக் கூட்டிணைவை முறியடித்தது ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் மூன்றாவது முக்கிய சாதனையாகும். மூன்றாம் பானிப்பட்டுப் போர் (1761), அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஆங்கிலேய-மராட்டியப் போர்களினால் மராட்டியர்கள் வலிமை குன்றியிருந்தனர். ஆனால், முற்றிலும் அழிக்கப்படவில்லை. தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டிருந்த அவர்கள், வலிமையும் திறமையும் குன்றிய வாரிசுகளால் மேலும் பலம் இழந்தனர். மராட்டியத் தலைவர்களிலேயே சக்திமிக்கவர்களான போன்ஸ்லே, கெயிக்வார், சிந்தியா, ஹோல்கர் மற்றும் பேஷ்வா ஆகியோருக்கிடையே ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் பூசல்கள் நிறைந்து காணப்பட்டனர்.பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மராட்டியக் கூட்டிணைவின் தலைவராக விரும்பினார். அதே சமயம், பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலை பெற முயற்சித்தார். அவரது முதலமைச்சரான திரிம்பக்ஜியும் இதனை ஊக்குவித்தார்.வணிகக் குழுவின் ஆலோசனையின்படி, கெயிக்வார் தனது பிரதம அமைச்சர் கங்காதர் சாஸ்திரியை பேஷ்வாவுடன் சமரசம் பேச அனுப்பிவைத்தார். திரும்பும் வழியில் கங்காதர் சாஸ்திரி 1815 ஜுலையில் நாசிக்கில் திரிம்பக்ஜியின் ஆட்களால் கொல்லப்பட்டார்.இது மராட்டியரிடையே மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரையும் வருத்தப்பட வைத்தது. திரிம்பக்ஜியை ஒப்படைக்குமாறு பேஷ்வாவை பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது. பேஷ்வாவும் இதற்கு உடன்பட்டார். பிரிட்டிஷார் திரிம்பக்ஜியை தானா சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், 1817 ஜூன் 3ல் பிரிட்டிஷ் தூதுவர் எல்பின்ஸ்டன் பேஷ்வாவை வற்புறுத்தி பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு செய்தார். மராட்டியர்களின் தலைவராகும் ஆசையை பேஷ்வா துறக்கவேண்டியதாயிற்று.


மூன்றாம் மராட்டியப் போர் (1817 – 1818) :


சிறிது நாட்களிலேயே இந்த உடன்படிக்கையை பேஷ்வா ரத்து செய்துவிட்டு 1817 நவம்பர் 5ல் பிரிட்டிஷ் தூதரகத்தின்மீது தாக்குதல் தொடுத்தார். ஆனால், கிர்கே என்னுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதேபோல், போன்ஸ்லே தலைவர் அப்பாசாகிப் தாம் 1817 மே 17ல் கையெழுத்திட்ட நாக்பூர் உடன்படிக்கையை ஏற்க மறுத்தார். இவ்வுடன்படிக்கைப்படி நாக்பூர் வணிகக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்பாசாகிப் 1817 நவம்பரில் பிரிட்டிஷாருடன் நடைபெற்ற சிதாபல்தி போரில் முறியடிக்கப்பட்டார். பேஷ்வா இச்சமயத்தில் ஹோல்கரின் உதவியை நாடினார். ஆனால், பிரிட்டிஷார் 1817 டிசம்பர் 21ல் பரோடாவில் ஹோல்கரை முறியடித்தனர். இவ்வாறு, 1817 டிசம்பரில் மிகப்பெரும் மராட்டியக் கூட்டிணைவு என்ற கனவு தவிடுபொடியாகியது.1818ல் சிந்தியா பிரிட்டிஷாருடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. இதன்படி, பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்த போபால் நவாப்புக்கு ஆஜ்மீரை விட்டுக் கொடுத்தார். பரோடாவின் கெயிக்வார் துணைப்படை ஒப்பந்தத்தை ஏற்று, அகமதாபாத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷாருக்கு வழங்கினார். பிண்டாரிகளின் ஒடுக்குதலுக்குப் பிறகு இராஜபுத்திர அரசுகள் சுதந்திரமாக செயல்பட்டன.பல்வேறு அரசியல் சாதனைகள் 1818ல் நடத்தப்பட்டதால், பிரிட்டிஷாருக்கு அந்த ஆண்டு முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க நினைத்த மராட்டியரின் திட்டம் முற்றிலும் தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் தலைமைக்கு தடையாக இருந்த மராட்டியர்கள் வீழ்த்தப்பட்டனர்.

மராட்டியரின் வீழ்ச்சிக்கான காரணங்கள் :


  • திறமையான தலைமை இல்லாதது
  • படைவலிமை இல்லாதது
  • அவர்களுக்கிடையே நிலவிய உட்பூசல்கள் மற்றும் ஒற்றுமையின்மை
  • தாங்கள் வென்ற பகுதிகளின் ஆதரவைப் பெறத் தவறியது.
  • இந்தியாவில் ஆட்சிசெய்த மற்ற அரசர்கள், நவாபுகளுடன் நட்புடன் இல்லை.
  • பிரிட்டிஷார் அரசியல் மற்றும் ராஜதந்திரத்தை சரியாக மதிப்பிடத் தவறியது.

ஹேஸ்டிங்சின் சீர்திருத்தங்கள் :


ஹேஸ்டிங்சின் பதவிக்காலத்தில் ஆட்சிப் பரப்பின் எல்லை பெருகியது மட்டுமல்லாமல் ஆட்சித் துறையிலும் முன்னேற்றம் காணப்பட்டது. சென்னை மாகாணத்தில் சர்தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய ரயத்துவாரி முறையை அவர் அங்கீகரித்தார். நீதித்துறையைப் பொறுத்தவரை காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பு சீரமைக்கப்பட்டது. வங்காளத்திலிருந்த காவல் அமைப்பு பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் இந்திய முன்சீப்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. வருவாய் மற்றும் நீதித் துறைக்கு இடையே நிலவிய பகிர்வு கட்டாயமாக பின்பற்றப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் நீதிபதியாகவும் கடமையாற்றினார். சமயப்பரப்பாளர்களாலும், பிறராலும் தாய்மொழிக் கல்விக் கூடங்கள் அமைக்கப்படுவதை ஹேஸ்டிங்ஸ் பிரபு ஊக்குவித்தார். ஆங்கிலம் மற்றும் மேலை நாட்டு அறிவியல் கல்விக்காக கல்கத்தாவில் பொது மக்களால் இந்துக் கல்லூரி 1817ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் புரவலராக ஹேஸ்டிங்ஸ் பிரபு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை சுதந்திரத்தை அவர் ஊக்குவித்தார். 1799ல் கொண்டுவரப்பட்ட தணிக்கை முறையை அவர் ரத்துசெய்தார். 1818ல் சீராம்பூர் சமயப்பரப்பாளரான மார்ஷ்மேன் என்பவரால் ‘சமாச்சார் தர்பன்' என்ற வங்காளமொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்டது.

மதிப்பீடு :


ஹேஸ்டிங்ஸ் பிரபு சிறந்த படைவீரராகவும் திறமைமிக்க ஆட்சியாளராகவும் திகழ்ந்தார். கல்வி, பத்திரிக்கை போன்ற துறைகளில் அவரது தாராளக்கொள்கை பாராட்டத்தக்கது. அவர், பிண்டாரிகளை ஒடுக்கினார். மராட்டியரை வீழ்த்தினார், கூர்க்காக்களின் கொட்டத்தை நசுக்கினார்.அவர் கைப்பற்றிய நிலப்பகுதிகளால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மேலும் வலுவடைந்தது. பம்பாய் மாகாணத்தை உருவாக்கியவர் என்று அவர் போற்றப்பட்டார். வெல்லெஸ்லி பெற்ற வெற்றிகளை ஒன்றிணைத்து முழுமைப்படுத்தியவர் ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றால் மிகையாகாது.


ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்குப்பின் ஆம்ஹர்ஸ்ட் பிரபு (1823–28) ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். அப்போது முதல் ஆங்கிலேய பர்மியப் போர் நடைபெற்றது.

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...