KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

வில்லியம் பெண்டிங் பிரபு (1828 – 1835)

1828 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு தலைமை ஆளுநராக பதவி ஏற்றார். 1774ல் பிறந்த அவர் ஒரு போர்வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 22வது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். 1803 ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது, சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார். 1806 ஆம் ஆண்டு வேலூர்க்கலகம் காரணமாக அவர் திருப்பியழைக்கப்பட்டார். இருப்பினும், மீண்டும் அவரை தலைமை ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்தது அவரது புகழுக்கு தக்க சான்றாகும். தலைமை ஆளுநராக, பெண்டிங் ஒரு முற்போக்கு சீர்திருத்த சகாப்தத்தையே தொடங்கி வைத்தார் எனலாம். இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவில் ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கடமை செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.


இந்திய அரசுகள் மீதான கொள்கை :


வில்லியம் பெண்டிங் இந்திய அரசுகளைப் பொறுத்தவரை, ஆக்ரமிப்பு அற்ற, தலையிடாக் கொள்கையையே பின்பற்றினார். அப்படி அவர் இந்திய அரசுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டிருப்பாரானால், அது அங்கு நிலவிய முறைகேடான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே தவிர, எந்த நிலப் பகுதியையும் இணைக்கும் எண்ணத்தில் அல்ல.

மைசூர் :
மைசூரில், வெல்லெஸ்லியால் இந்து அரசர் மூன்றாம் கிருஷ்ணராஜா பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார். தொடக்கத்தில் மைசூர் அரசர் அவரது திறமையான அமைச்சர் பூரணய்யாவின் வழிகாட்டுதலுடன் நன்கு ஆட்சி புரிந்தார். ஆனால், முழு ஆட்சிப் பொறுப்பையும் அவர் மேற்கொண்ட போதுதான் அவரது திறமையின்மை வெளிப்பட்டது. அந்த அரசில் வாழ்ந்த குடியானவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தனர். அவற்றுக்கான தீர்வுகள் காணப்படவில்லை. எனவே, 1830ல் குடியானவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். சென்னை ராணுவத்தின் துணை கொண்டு அக்கலகம் ஒடுக்கப்பட்டது. பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மைசூரின் ஆட்சிப் பொறுப்பை தாமே மேற்கொண்டனர். மைசூரில் ஒரு ஆணையாளர் நியமிக்கப்பட்டார். அரசருக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது.


சர் மார்க் கப்பன் என்பவர் 1834 முதல் 1861 வரை ஆணையாளராக இருந்தபோது மைசூர் மக்கள் பல்வேறு பயன்களைப் பெற்றனர். பெங்களூரிலுள்ள கப்பன் பூங்கா இன்றும் மைசூருக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவூட்டுவதாக உள்ளது.


கச்சார், ஜெயிந்தியா :
வடகிழக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கச்சார் அரசு முதல் பர்மியப்போரின் இறுதியில் செய்து கொள்ளப்பட்ட யாண்டபூ உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பாதுகாப்பில் விடப்பட்டது. இந்த சிறிய நாட்டின் அரசர் 1832ல் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வாரிசுகள் இல்லாமையால், அந்த நாட்டு மக்களின் விருப்பப்படி பெண்டிங் கச்சார் ஆட்சியை இணைத்துக் கொண்டார்.முதல் பர்மியர் போரின் முடிவில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட மற்றொரு நாடு ஜெயிந்தியா. இச்சிறிய நாட்டின் ஆட்சியாளர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். காளி தேவதைக்கு பலிகொடுக்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷார் சிலரை இவர் கடத்தினார். இத்தகைய கொடுஞ்செயலை தவிர்க்கும் பொருட்டு தலைமை ஆளுநர் பெண்டிங் இந்நாட்டையும் இணைத்துக்கொண்டார்.

குடகு :
குடகை ஆட்சிப்புரிந்த அரசர் வீரராஜா கொடுங்கோலராகத் திகழ்ந்தார். மக்களை காட்டு மிராண்டித்தனமாக நடத்தியதுடன், தனது உறவினர்களில் ஆண்பாலர் அனைவரையும் கொன்றார். வில்லியம் பெண்டிங் கர்னல் லிண்ட்சே என்பவரை குடகு தலைநகரான மெர்க்காராவுக்கு அனுப்பினார். 1834ல் அரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு குடகு இணைத்துக் கொள்ளப்பட்டது.

இரஞ்சித் சிங்குடன் உறவு :


இந்தியாவுக்கு ரஷ்ய படையெடுப்பு என்ற அச்சம் இருப்பதை முதலில் ஊகம் செய்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு. எனவே, பஞ்சாப் அரசர் மகாராஜா இரஞ்சித் சிங் மற்றும் சிந்துப் பகுதியின் அமீர்கள் ஆகியோருடன் நட்புறவு மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார். இந்தியாவிற்கும் எந்தவொரு படையெடுப்பாளருக்கும் நடுவே ஆப்கானிஸ்தான் இடைப்படு நாடாக இருக்க வேண்டும் என்றும் பெண்டிங் விரும்பினார். பஞ்சாபின் தலைநகர் லாகூர். தலைமை ஆளுநரின் இருப்பிடம் கல்கத்தா. நல்லதொரு தொடக்கமாக இவ்விருவருக்கும் இடையே பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து 1831 அக்டோபர் 25ல் பெண்டிங் பிரபுவும் இரஞ்சித் சிங்கும் சட்லஜ் நதிக்கரையிலிருந்த ரூபார் என்ற இடத்தில் முதன் முதலாக சந்தித்தனர். மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பின்போது பெண்டிங்க் இரங்சித் சிங்குடன் தனது நட்பை உறுதி செய்து கொண்டார். இருவருக்குமிடையே சிந்து நதி படகுப் போக்குவரத்து உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இதன்படி, சட்லஜ் நதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.மேலும், வணிகத் தொடர்புடைய உடன்படிக்கை ஒன்றுக்கும் இரஞ்சித் சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சிந்துவின் அமீர்களிடமும் இத்தகைய நட்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.


1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் :


1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தில் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு வணிகக் குழுவின் பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வணிகக் குழுவின் ஆயுட்காலத்தை மேலும் இருபது ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்த இச்சட்டம் ஆட்சியில் சில சிறு மாறுதல்களையும் செய்தது. 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக் குழு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கவேண்டும் என்று விதித்தது. மேலும் இருபது ஆண்டுகளுக்கு வணிகக் குழுவின் பட்டயம் புதுப்பிக்கப்பட்டது.1833 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பட்டயச் சட்டம் முக்கியத்துவம் பெற்றதாகும். கிழக்கிந்திய வணிகக் குழுவின் அதிகார வரம்பெல்லையை இது வரையறை செய்தது. இச்சட்டத்தின் விதிகள் பெந்தாம் என்பவரின் தாராள மற்றும் பயன்பாட்டு தத்துவங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
இதன் முக்கிய பிரிவுகளாவன
1. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு இந்தியாவில் தனது வாணிகத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. இனி, அது பிரிட்டிஷ் அரசரின் அரசியல் முகவராக மட்டும் செயல்படும் என்று தெளிவாக்கப்பட்டது.
2. வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் இனிமேல் இந்தியாவின் தலைமை ஆளுநர் என்று அழைக்கப்படுவார். இதனால், இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் என்று கூட கூறலாம்.
3. தலைமை ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் டி.பி. மெக்காலே என்பவராவார்.
4. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மேதகு மன்னரின் குடிமக்களாக எவரும், தங்களது சமயம், பிறப்பிடம், குடிவகை அல்லது நிறம் காரணமாக எவ்வித பதவி அல்லது பணியில் இருப்பதை தடை செய்யக்கூடாது என இச்சட்டம் தெளிவாக வரையறுத்துக் கூறியது. பொது ஆட்சிப் பணிகள் இந்தியமயமாக்கப்படுவதற்கு இச்சட்டம்தான் அடிகோலியது எனலாம். இருபது ஆண்டுகளுக்குப்பிறகு 1853 ஆம் ஆண்டு பட்டயச் நிறைவேற்றப்பட்டது. இதுவே பட்டயச் சட்டங்கள் வரிசையில் இறுதியானதாகும்.

வில்லியம் பெண்டிங் பிரபுவின் சீர்திருத்தங்கள் :


இந்திய வரலாற்றில் வில்லியம் பெண்டிங் பிரபுவின் வருகை பலவிதத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்தது எனலாம். அவரது ஆட்சி ஏழு ஆண்டுகளே நீடித்தது என்ற போதிலும், பல்வேறு நிலையான சீர்திருத்தங்கள் அப்போது மேற்கொள்ளப்பட்டன. இவற்றை நிதித்துறை, ஆட்சித்துறை, சமூகம் மற்றும் கல்வி என்ற தலைப்புக்களாக வரையறுக்கலாம்.

நிதித்துறை சீர்திருத்தங்கள் :


1828 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பதவியேற்றபோது இந்தியாவின் நிதி நிலைமை திருப்திகரமாக இல்லை. கருவூலம் காலியாக இருந்தது. அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு மில்லியன் ரூபாய் பற்றாக்குறையுடன் காணப்பட்டது. எனவே உடனடியாக நிதிநிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தலைமை ஆளுநருக்கு இருந்தது. அதற்காக பெண்டிங் பல நடவடிக்கைகளை எடுத்தார்.அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவந்த ஊதியம் மற்றும் படிகள் குறைக்கப்பட்டதோடு அதிகப்படியான பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இராணுவத்துறையில் நடைமுறையிலிருந்த பணிக்காலத்தின்போது வழங்கப்பட்ட இரட்டைப்படி (பேட்டா) முறையை ஒழித்தார். இத்தகைய சீர்திருத்தங்களினால், அவர் திரும்பிச் செல்லும்போது, கருவூலத்தில் 1.5 மில்லியன் ரூபாய் உபரியாக இருந்தது.

ஆட்சித் துறை சீர்திருத்தங்கள் :


பெண்டிங் அறிமுகப்படுத்திய ஆட்சித் துறை சீர்திருத்தங்கள் அவரது அரசியல் முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பறை சாற்றியது. நீதித்துறையில், காரன்வாலிஸ் கொண்டு வந்த மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் அகற்றப்பட்டன.பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் இருந்தமைக்கு இந்த நீதிமன்றங்களே காரணமாக இருந்தன. அரசின் செலவு குறைந்தமையால் இயக்குநர்கள் இந்த நடவடிக்கையை உடனடியாக ஒப்புக்கொண்டனர். கீழ்மட்ட நீதிமன்றங்களில் அந்தந்தப் பகுதியின் மொழிகளிலேயே வழக்குகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது பெண்டிங்கின் மற்றொரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். மேலும் உயர்மட்ட நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது.வருவாய்த் துறையிலும் பெண்டிங் தனது முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றார். ஆர்.எம்.பெர்ட் தலைமையில் வடமேற்கு மாகாணத்தில் வருவாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நில உடமையாளர்கள் அல்லது நிலத்தை பயிரிடுபவர்களிடம் 30 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

சமூக சீர்திருத்தங்கள் :


வில்லியம் பெண்டிங் கொண்டு வந்த சமூக சீர்திருத்தங்கள் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் அவரது பெயரை நிலைபெறச் செய்தன. சதிமுறை ஒழிப்பு, தக்கர்களை ஒடுக்குதல், பெண் சிசுக்கொலை தடுப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.

சதிமுறை ஒழிப்பு :


கணவரின் சிதையிலேயே விதவையைத் தள்ளி கொன்றுவிடும் பண்டைய ‘சதி’ என்ற வழக்கம், இந்தியாவில் பல காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. மனிதாபிமானமற்ற இச்செயல் வட இந்தியாவில், குறிப்பாக வங்காளத்தில் பரவலாக காணப்பட்டது. வங்காளத்தில் ஒரேயாண்டில் அத்தகைய 800 நிகழ்வுகள் நடைபெற்றன என்ற செய்தி கேட்ட பெண்டிங் அதிர்ச்சியடைந்தார். இயற்கை நியதிக்கு மாறான இச்செயலை குற்றம் என்று கருதிய பெண்டிங் அவ்வழக்கத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார். 1829 டிசம்பர் 4 ஆம் நாள் ‘விதிமுறை 17' என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கம் சட்டப்படி ஒழிக்கப்பட்டது. சதிமுறையைப் பின்பற்றுவோர் சட்டப்படி நீதிமன்றத் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என இச்சட்டம் கூறியது. 1830 ஆண்டு இச்சட்டம் சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தக்கர்களை ஒடுக்குதல் :


மக்களின் அன்றாட வாழ்வில் நிம்மதியேற்படுத்தும் விதத்தில் பெண்டிங் பிரபு மேற்கொண்ட பாராட்டத்தக்க நடவடிக்கை தக்கர்கள் என்னும் வழிப்பறி கொள்ளையர்களை ஒடுக்கியதாகும். 50 அல்லது 100 பேர் கொண்ட குழுக்களாக செயல்பட்ட தக்கர்கள், வணிகர்களாகவோ, யாத்ரீகர்களாகவோ மாறுவேடம் அணிந்து, பயணிகளின் கழுத்தை நெரித்துக்கொன்று வழிப்பறியில் ஈடுபடுவது வழக்கம், முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மத்திய, வட இந்தியாவில் நிலவிய குழப்பத்தினால் இத்தகைய கொள்ளையர்களின் எண்ணிக்கை பெருகியது. 1830 ஆம் ஆண்டு தக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையை கர்னல் சீலிமேன் என்பவர் தொடங்கினார். ஐந்து ஆண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் பிடிபட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தக்கர்களை ஒடுக்கும் பணியினை திறமையுடன் செய்த காரணத்தால், சர் வில்லியம் சீலீமேன் ‘தக்கீ சிலீமேன்' என்று அழைக்கப்பட்டார்.

பெண் சிசுக்கொலை :


பெண் சிசுக்கொலை என்ற இந்த வன்மையான மனித நேயமற்ற செயலை சில நாகரீகமுள்ளவர்களும் செய்து வந்தனர். ராஜபுதனம், பஞ்சாப், மாளவம், கட்ச் போன்ற பகுதிகளில் பெண் குழந்தைகளைக் கொல்லும் இந்த வழக்கம் பரவியிருந்தது. வங்காளத்தில் சவுகர் தீவில் நடைபெற்ற குழந்தை பலி சடங்கை ஒழிப்பதற்கு பெண்டிங் தீவிர நடவடிக்கையெடுத்தார். பெண் சிசுக்கொலையையும் தடை செய்தார். அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்.

ஆங்கிலக் கல்விமுறையை அறிமுகப்படுத்துதல் :


வில்லியம் பென்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரைகள் செய்வதற்கு மெக்காலே பிரபு தலைமையில் அவர் குழுவை நியமித்தார். தனது அறிக்கையில், ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியலை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என்று மெக்காலே வலியுறுத்தினார். இந்த பரிந்துரையை வில்லியம் பெண்டிங் முழுமனதுடன் ஏற்றார். 1835 ஆம் ஆண்டு அரசின் தீர்மானம் ஆங்கிலத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அறிவித்தது. அதே ஆண்டில் பெண்டிங் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

வில்லியம் பெண்டிங் பற்றிய மதிப்பீடு :


வில்லியம் பெண்டிங் நேர்மையான, விருப்பு வெறுப்பற்ற, தாராள குணமுடைய, பகுத்தறிவுள்ள மனிதராகத் திகழ்ந்தார்.சதி ஒழிப்பு, பெண் சிசுக்கொலை தடுப்பு போன்ற தனது சமூக சீர்திருத்தங்கள் மூலம் இந்து சமுதாயத்தில் காலம் காலமாக நிலவி வந்த கொடுமைகளை ஒழித்துக் கட்டினார். மற்றவர்கள் சொல்லால் மட்டும் கூறிவந்ததை பெண்டிங் தமது செயலால் நடத்திக் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சதி ஒழிப்பு குறித்த அரசு தீர்மானத்தை நிறைவேற்றும் போது தனது பதவிக்கு ஆபத்து வருவதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. அத்தகைய மனோதிடமும் நேர்மையும் அக்காலத்திய ஆட்சியாளர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. அவரது கல்வி சீர்திருத்தங்களால் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்தது எனலாம்.

வில்லியம் பெண்டிங்கைத் தொடர்ந்து ஆக்லாந்து பிரபு (1836-1842) தலைமை ஆளுநராக பதவியேற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் முதல் ஆப்கானியப் போர் (1836-1842) நடைபெற்றது. அவரது ஆப்கானியக் கொள்கை தோல்வியடையவே, பதவியிலிருந்து 1842ல் திருப்பியழைக்கப்பட்டார். பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற எல்லன்பரோ பிரபு ஆப்கானியப் போரை முடிவுக்கு கொண்டு வந்தார். சிந்துப்பகுதியை அவர் இணைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்குவந்த ஹார்டிஞ்ச் பிரபு (1844-48) காலத்தில் முதல் ஆங்கிலேய சீக்கியப்போர் நடைபெற்றது. லாகூர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...