KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

அறிமுகம் : பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கியமான அரசியல், சமூக மாற்றங்களை எதிர்கொண்டது. பெளத்தம், சமணம் இந்தியாவின் முக்கியமான புதிய மதங்களாக உருவாகின. ஏராளமான மக்கள் இந்த மதங்களைப் பின்பற்றினார்கள். இவ்விரு அவைதீக மதங்களும் வைதீக வேத மதத்தின் கோட்பாடுகளுக்கு முரணானவை. புதியதாக உருவாகி வந்த சமூகத்தில் மக்கள் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருந்ததைத் தொடர்ந்து, சமணம், பௌத்தம் ஆகிய புதிய மதங்கள் போதித்த புதிய நம்பிக்கைகள், கருத்துகளின் விளைவாக அதுவரை வேத சடங்குகளில் மட்டுமே மையம் கொண்டிருந்த சமூக அமைப்பு குறிப்பிடத்தகுந்த மாறுதல்களுக்கு உள்ளானது. அரசு முறை தொடங்கிய இக்காலகட்டத்தில், சிறு நாடுகளும் இனக்குழுக்களின் கூட்டமைப்புகளும் போர் மூலம் வெல்லப்பட்டு, ஒரு பேரரசு உருவாகும் விதத்தில் இணைக்கப்பட்டன. இதன் விளைவாகப் பெரிய அரசுகள் உருவாகின; அவை சக்ரவர்த்தி அல்லது ஏராட் என்ற உயர்ந்த அரச பதவிகளால் ஆட்சி செய்யப்பட்டன. இவ்வாறு இன்றைய பீகார், கிழக்கு உத்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கங்கைச் சமவெளியில் மையப்படுத்தப்பட்ட ஒரு பேரரசு உருவானது. இது இப்பகுதியின் சமூக, பொருளாதார, நிர்வாக அமைப்பைப் பெரிதும் மாற்றியது.

சமவெளிகளும், கங்கை மற்றும் அதன் துணைந்திகள் போன்ற வற்றாத நதிகளிலிருந்து கிடைத்த நீர்வளமும் இந்தக் குறிப்பிட்ட பகுதியில் பெரிய நாடுகள் உருவாவதற்குச் சாதகமாக இருந்த சூழலாகும். இந்த ஆறுகள் வணிகம், பயணங்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான நீர்வழிப் பாதைகளாகவும் பயன்பட்டன. புத்தரின் சமகாலத்தவரான பிம்பிசாரர் மகதத்தில் ஒரு பேரரசை நிர்மாணிக்கும் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு அவரது புதல்வர் அஜாதசத்ருவாலும், பின்னர் நந்தர்களாலும் இது மேலும் வலுவாக்கப்பட்டது. சந்திரகுப்த மௌரியர் உருவாக்கிய மெளரிய வம்சத்தின் தோற்றத்தோடு, இந்தப் பேரரசு தனது புகழின் உச்சத்தை அடைந்தது. முதல் மூன்று மௌரிய பேரரசர்களான சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் நன்கு அறியப்பட்ட மௌரிய அரசர்கள் ஆவர். அசோகருக்குப் பிறகு மௌரியப் பேரரசு மெல்ல மெல்ல வீழ்ச்சி அடைந்தது.


சான்றுகள் : மௌரியர் காலத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர், அவருக்கு அடுத்துவந்த இரு அரசர்கள் ஆகியோரின் பெயர்கள் எல்லாம் இப்போது அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், அந்த அரசர்களின் வாழ்வையும் வாழ்க்கைப்போக்குகளையும் மறுஉருவாக்கம் செய்வதற்குத் தொடக்ககால வரலாற்றாய்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். மௌரிய அரசர்கள் பற்றி பல்வேறு பெளத்த, சமண இலக்கியங்களிலும், இந்துமத இலக்கியங்களில் ஒன்றான பிராமணங்களிலும் சில குறிப்புகள் இருந்தாலும், அவர்களைப் பற்றி நேரடியான குறிப்புகளோ அவர்களது சமகாலத்தைப் பற்றி விரிவான பதிவுகளோ, இலக்கியங்களோ இல்லை. இலங்கையில் கிடைத்த, பாலி மொழி நூலான மகாவம்சம் என்ற வரலாற்றேடு ஒரு முக்கியமான கூடுதல் ஆதாரம் ஆகும். இந்த ஆதாரங்கள் மூலம் துண்டுதுண்டாகக் கிடைக்கும் தகவல்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அலெக்சாண்டர் படையெடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா பற்றி எழுதிய கிரேக்க வரலாற்று அறிஞர்களின் பதிவுகளால் உறுதி செய்யப்பட்டன.

வரலாற்றின் தொடக்க காலம் பற்றி வரலாற்றாளர்கள் அறிந்து கொள்ள ஏராளமான தகவல்களைத் தரும் முக்கியமான சாதனங்களாகத் தொல்லியலும் கல்வெட்டியலும் உள்ளன. குறிப்பாக, தொல்லியல் மிகவும் முக்கியமானது. ஏனெனில், தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரப் புறத்தோற்றம் பற்றி, அதாவது நகரத்தின் அமைப்பு , கட்டிடங்களின் கட்டுமானம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அக்கால மக்களுக்குத் தெரிந்திருந்த உலோகங்கள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள். அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்று மக்களின் அன்றாட வாழ்வியல் பண்பாடு குறித்த தகவல்களையும் அறிய முடிகிறது.

கங்கைப் பகுதியின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் காலப்போக்கில் அப்பகுதியில் உருவான நகர மையங்களின் தன்மை குறித்த நம்பகமான சான்றுகளைத் தந்துள்ளன. இக்காலகட்டத்தினைச் சேர்ந்த கல்வெட்டுச் சான்றுகள் அதிகம் இல்லை. மிகப் பரவலாக அறியப்பட்டவை அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகளே. இவை நாட்டின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1837இல் ஜேம்ஸ் பிரின்செப் சாஞ்சியில் உள்ள கல்வெட்டு ஒன்றில் இருந்த பிராமி எழுத்துகளின் பொருளைக் கண்டுபிடித்த பிறகுதான் மௌரிய காலகட்டத்தை மறுஉருவாக்கம் செய்வது பெரிய அளவிற்குச் சாத்தியப்பட்டது. அதேசமயத்தில், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மௌரிய அரசின் கல்வெட்டுக் கட்டளைகள் குறித்த தகவல்களும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் சிந்து வெளி நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான தொல்லியல் பொருள் இவைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மௌரிய அரசின் அனைத்து கல்வெட்டுக் கட்டளைகள் ஒரு பெரிய அரசரைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன. அவை தேவனாம்பிய பியதஸ்ஸி (தேவர்களுக்குப் பிரியமான, மனநிறைவாக) இவ்வாறு கூறினார் என்று தொடங்குகின்றன. மௌரியப் பேரரசின் இந்த கல்வெட்டுக் கட்டளைகள் நாடு முழுவதும் பரவலாகக் கிடைத்ததன் மூலம் அவர் ஒரு பரந்த பேரரசை ஆண்டிருக்கிறார் என்பதை உணர முடிந்தது. ஆனால் அந்த அரசர் யார்? புராணங்களும் பௌத்த இலக்கியங்களும் அசோகர் என்ற ஒரு சக்ரவர்த்தி பற்றிக் குறிப்பிட்டுள்ளன. பல கல்வெட்டுக் கட்டளைகளின் பொருளும் ஒவ்வொன்றாகக் கண்டறியப்பட்டபோது, பொ.ஆ. 1915 இல் தேவனாம்பிய பியதசி எனும் அந்த அரசர் அசோகர் தான் என உறுதி செய்யப்பட்டது. இது மௌரிய வரலாற்றை மறுஉருவாக்கம் செய்வதை சாத்தியமாக்கியது.

இனி இரண்டு பிற்கால வரலாற்றுச் சான்றுகளைப் பார்ப்போம். முதலாவது குஜராத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜுனாகத்தில் உள்ள பாறைக் கல்வெட்டு. இது பொ.ஆ. 130-150 காலத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியை ஆண்ட ருத்ரதாமன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டது. இதுபேரரசர் சந்திரகுப்தரின் மாகாண அரசப்பிரதிநிதி (ராஷ்ட்ரியா) புஷ்யகுப்தர் பற்றிக் குறிப்பிடுகிறது. இது பின்வரும் இரண்டு காரணங்களுக்காக முக்கியமானது. 1) மேற்கே வெகு தூரத்திற்கு குஜராத் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. 2) சந்திரகுப்தர் மரணமடைந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பிறகும்கூட நாட்டின் பல பாகங்களில் அவர் அறியப்பட்டவராகவும், நினைவில் இருப்பவராகவும் இருந்திருக்கிறார். இரண்டாவது சான்று ஒரு இலக்கியப் படைப்பு ஆகும். அது விசாகதத்தரின் முத்ராராட்ச்சம் என்ற நாடகம் பொ.ஆ. நான்காம் நூற்றாண்டிற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு, குப்தர்கள் காலத்தில் எழுதப்பட்டது. இந்த நாடகம் மகத் அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் சாணக்கியர் அல்லது ‘கௌடில்யர்’ தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது. இந்த நாடகம் சந்திரகுப்தர் குறித்து மற்ற சமகால ஆதாரங்களிலிருந்து திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இதையும் ஓர் உறுதிப்படுத்தும் சான்றாகக் எடுத்துக் கொள்ளலாம். சந்திரகுப்தரின் புகழ் அவர் மறைந்து நீண்ட நாட்கள் ஆன பின்பும், பொதுக்கதையாடலிலும் நினைவிலும் மங்காமல் நிலைத்திருந்தது என்பதை இந்த ஆதாரங்கள் மூலமாகத் தெரிந்துகொள்கிறோம். வாய்மொழிக் கதையாடல் பாரம்பரியங்களின் முக்கியத்துவத்தினை உறுதிப்படுத்துகின்றன. அவை தற்போது ஒரு நம்பகமான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கப்படுகின்றன.


4.1 ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி :


16 மகாஜனபதங்களில் தொடக்ககாலத்தில் காசி சக்தி வாய்ந்ததாக இருந்தது. எனினும் பின்னர் கோசலம் ஆதிக்கம் செலுத்தியது. மகதம், கோசலம், வஜ்ஜி, அவந்தி ஆகியவற்றிற்கிடையே ஒரு அதிகாரப் போராட்டம் தொடங்கி, இறுதியில் மகதம் ஆதிக்கம் செலுத்தும் மகாஜனபதமாக உருவாகி, முதல் இந்தியப் பேரரசை அமைத்தது. ஹரியங்கா வம்சத்தின் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார். அவர் திருமண உறவுகள் மற்றும், போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார். கோசல அரசர் பிரசேனஜித்திற்குத் தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம், காசியை வரதட்சணையாகப் பெற்றார். லிச்சாவி மற்றும் மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அவந்தி அரசரோடு நட்பான உறவைப் பேணினார். ஆனால் அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக் கொண்டார். இவ்வாறாக, மகதம் ஒரு சக்தி வாய்ந்த, முக்கியமான பேரரசானது. தனது ஆட்சியில், பல்வேறு மதப் பிரிவுகளையும், அவற்றின் தலைவர்களையும் பிம்பிசாரர் ஆதரித்தார். அவர் புத்தரையும் சந்தித்திருக்கிறார். 

அஜாதசத்ரு, தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார். இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மகதத்தின் தலைநகரான இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்தது. பின்னர் மகத நாட்டுடன் கோசல நாடு இணைந்தது. அஜாதசத்ரு லிச்சாவியினருடன் போரிட்டு வென்றார். அஜாதசத்ரு லிச்சாவியரையும் மல்லர்களையும் வென்றார். அஜாதசத்ருவும் புத்தரைச் சந்தித்திருப்பதாக நம்பப்படுகிறது. பொ.ஆ.மு. 461இல் அஜாதசத்ரு மறைந்த போது மகதம் அசைக்கமுடியாத வலுவான அரசாகிவிட்டது.

ஹரியங்காவம்சத்தைத் தொடர்ந்து சிசுநாக வம்சம் வந்தது. வாரணாசியின் அரசப்பிரதிநிதி சிசுநாகர் என்பவர் ஹரியங்கா அரசரைக் கொன்று அரியணை ஏறினார். சிசுநாகர்கள் ஐம்பதாண்டுக் காலம் ஆட்சி செய்தனர். பிறகு அரியணையை அவர்களிடமிருந்து மஹாபத்ம நந்தர் கைப்பற்றினார்.

பரந்து பட்ட, அதிகார வர்க்கத்தை உருவாக்கவும், நிர்வாகத்தையும் ராணுவத்தையும் நடத்த நிதி ஆதாரத்தையும் ஆட்களையும் திரட்டவும் ஒரு புதிய நிர்வாக அமைப்பு ஒரு மையப்படுத்தப்பட்ட அரசிற்கு தேவைப்பட்டது. வரிவிதிப்பின் மூலம் அரசின் செலவுகளுக்குத் தேவையான நிதியைத் திரட்ட ஒரு வருவாய் நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டியதாக - இருந்தது. இத்தகைய ஒரு அரசியல் உருவாக்கம் நிர்வாக மையங்களாக, நகரங்களை மாற்றுவதற்கு இட்டுச் சென்றது. இவை கிராமங்கள், ஊரகப் பகுதிகளிலிருந்து மாறுபட்டவை. பேரரசை விரிவுபடுத்தவும் பாதுகாக்கவும் ஒரு பெரிய நிலையான ராணுவம் தேவைப்பட்டது.


4.2 நந்தர்கள்: இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் :


அஜாதசத்ரு மறைந்து சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பொ.ஆ.மு. 362இல் நந்தர்கள் மகதப் பேரரசின் அரசர்களானார்கள். முதல் நந்த அரசர் மஹாபத்மா ஆவார். இவர் சிசுநாக அரசரைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியதாக நம்பப்படுகிறது. நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது. நந்தர்களின் செல்வமும் அதிகாரமும் பரவலாக அறியப்பட்டன, எதிரிகளுக்கு அச்சமூட்டுவதாகவும் இருந்தன. மஹாபத்ம நந்தரைத் தொடர்ந்து அவருடைய எட்டு புதல்வர்கள் ஆட்சி செய்தார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து நவநந்தர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பேரரசை விரிவாக்கும் பணியில் நந்தர்கள் பல சத்திரிய இனக்குழுக்களை அழித்தார்கள். ஓரளவு சுயேச்சையான அதிகாரம் கொண்டிருந்த சத்திரியர்களால் ஆளப்பட்ட அரசுகளையும் அடிமைப்படுத்தினார்கள். இவ்வாறாக, ஒரு சர்வாதிகாரமான, மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கினார்கள். ஒடிசாவின் புவனேஷ்வருக்கு அருகிலுள்ள உதயகிரியில் காணப்படும் ஹதிகும்பா (யானைக்குகை) கல்வெட்டு முந்நூறு வருடங்களுக்கு முன் அரசர் நந்தர் வெட்டிய நீர்வடிகாலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இது நந்த அரசு எந்த அளவிற்குப் பரவியிருந்தது என்பதைக் காட்டுகிறது. நந்தர்கள் திறமையான நிர்வாகிகளாக, மகதப் பேரரசை விரிவுபடுத்தியவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.


4.3 பாரசீக, மாசிடோனிய படையெடுப்புகள் :


ஆறாம் நூற்றாண்டிலிருந்து வடமேற்கு இந்தியா பாரசீகத்துடனும் கிரேக்கத்துடனும் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சிந்து பகுதியின் காந்தாரமும், அதன் சுற்றுவட்டாரங்களும் பாரசீகத்தின் ஆக்கிமீனைட் பேரரசின் ஒரு சிறு பகுதியாக இருந்தது என்பதை அறிய வியப்பாக இருக்கும். பொ.ஆ.மு. 530 வாக்கில், பாரசீகப் பேரரசர் சைரஸ் இந்தியாவிற்குப் படையெடுத்துவந்து கபிஷா என்ற நகரை அழித்தார். கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடொட்டஸின் கூற்றின்படி, காந்தாரம் ஆக்கிமீனைட் பேரரசின் இருபதாவது மற்றும் செல்வமிக்க சத்ரபியாக இருந்தது. மஹா அலெக்சாண்டரின் படையெடுப்பு வரையிலும் அது பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. முதலாம் டாரியஸின் கல்வெட்டுகள் சிந்து பகுதியில் பாரசீகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. “கதாரா, ஹராவதி, மகா” பகுதிகளின் மக்கள் ஆக்கிமீனைட் பேரரசின் குடிமக்கள்” என்றும் கூறுகின்றது.


உங்களுக்கு தெரியுமா? : தி ஈரானில் உள்ள பெர்சிபோலிசில் காணப்படும் முதலாம் டாரியஸின் கல்வெட்டில்தான் "இந்து" என்ற வார்த்தை முதன்முறையாகத் காணப்படுகிறது. பொதுவாக நதியையும், குறிப்பாக சிந்து நதியையும் குறிக்கும் "சிந்து” என்ற சொல் பாரசீகத்தில் "இந்து" வானது. கிரேக்கர்கள் Sindu என்பதில் உள்ள S ஐ நீக்கிவிட்டு, Indu என்றார்கள். அது பின்னர் 'ஹிந்து' என்றானது. பின்னர் அதிலிருந்து இந்தியா' வந்தது.


தட்சசீலம் : தட்சசீலம் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது. பொ.ஆ.மு. ஐந்தாம், நான்காம் நூற்றாண்டுகளுக்கிடையே அது பாரசீகத்தின் ஆக்கிமீனைட் பேரரசின் பகுதியாக இருந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள வணிகப் பெருவழியில், அதன் அமைவிடம் இருந்ததால் சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது. தட்சசீலம் முக்கியமான கல்வி, கலாச்சாரமையமாக உருவானது. கல்விக்காக மாணவர்கள் வெகுதூரங்களிலிருந்து அங்கு வந்தார்கள். 1940களில் சர் ஜான் மார்ஷல் நடத்திய அகழ்வாய்வுகளின் போது இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. “எந்த ஒரு நாகரிகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக” தட்சசீலம் கருதப்படுகிறது. பாணினி தனது புகழ்பெற்ற படைப்பான அஷ்டத்யாயி என்ற இலக்கிய நூலை இங்குதான் எழுதியதாகத் தெரிகிறது.


பாரசீகத் தொடர்பின் தாக்கம் : பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் வடமேற்குப் பகுதி பாரசீகப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததால், இந்தப் பகுதி பாரசீக மற்றும் இந்தியப் பண்பாடுகளின் சங்கமமாக மாறியது. பாரசீகத் தொடர்பு பண்டைய இந்தியாவின் கலை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பண்பாட்டுத் தாக்கம் காந்தாரப் பகுதியில் அதிகமாக இருந்தது. மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்துமுறையின் வளர்ச்சியாகும். இந்த கரோஷ்டி எழுத்தைக் காந்தாரப் பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார். இது பாரசீகத்தின் அகமேனியப் பேரரசில் பரவலாகப் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும்.

அராமிக் போலவே கரோஷ்டியும் வலது புறமிருந்து இடது புறமாக எழுதப்படும் எழுத்துமுறையாகும். பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும். நாணயத்திற்கான இந்தியச் சொல்லான "கார்சா" பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும். இந்த நாணயங்கள் பாரசீக நாணயங்களைப் பார்த்து உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்காலகட்டத்தில் இந்த நாணயங்களின் புழக்கம், இந்தியா - பாரசீகத்திற்கு இடையில் வணிகத் தொடர்பு இருந்ததை உணர்த்துகிறது. அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் ஆக்கிமீனைட் அரசர் டாரியஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப்பட்டிருக்கலாம். அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் ஈரானியச் சொல்லான டிபிக்குப்பதிலாக 'லிபி' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு: ரிக் வேதத்திற்கும் ஜென்ட் அவஸ்தாவிற்கும் பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்கள் என்ற சொல்லைப் பண்டைக்கால பாரசீகர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மொழிபண்பாட்டு ஆய்வாளர் தாமஸ் பரோவின் கூற்றின்படி, உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறியிருக்கலாம். பொ.ஆ.மு. 1380ஐச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கும், மிட்டன்னி அரசனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பற்றிக் கூறுகிறது. அது சில ரிக்வேத கடவுளர்களான இந்திரா, உருவ்னா (வருணா), மித்ரா, நஸதயா (அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது. 

மௌரியக்கலைகளும் கட்டிடக்கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளன. மௌரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமீனைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன. தூண்களின் முகட்டில் உள்ள மணி போன்ற உச்சி, குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உச்சி ஆகியவை ஆக்கிமீனைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஒத்தே உள்ளன. அதே போல பாடலிபுத்திரத்தின் அரண்மனையின் எஞ்சிய தூண்கள் உள்ள பகுதி ஆக்கிமீனைட் தலைநகரத்தின் தூண்கள் கொண்ட மண்டபத்தை மிகவும் ஒத்திருக்கிறது. எனினும், இக்கலைஞர்கள், பாரசீக கலையால் உத்வேகம் பெற்றிருந்த போதிலும், தமது படைப்பில் ஒரு தீர்மானமான இந்தியத் தன்மையைக் கொடுத்திருந்தார்கள்.


4.4 அலெக்சாண்டர் படையெடுப்பு :


தனநந்தரின் ஆட்சிக்காலத்தில் அலெக்சாண்டர் வட- மேற்கு இந்தியா மீது (பொ.ஆ.மு. 327-325) படையெடுத்தார். பலவகைகளில் அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். அது பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் இந்தியா மற்றும் மேற்குலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பத்தைக் குறித்தது. கிரேக்க வரலாற்றாசிரியர்கள் இந்தியா பற்றி எழுத ஆரம்பித்தார்கள். கிரேக்க அரசப் பிரதிநிதிகளும் அரசர்களும் இந்தியாவின் வட-மேற்குப் பகுதியில் ஆட்சி செய்தார்கள். அது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் புதிய பாணிகளை உருவாக்கியது. அலெக்சாண்டர் பஞ்சாப் பகுதியில் தனது வெற்றிக்குப் பிறகு, மகதப் பேரரசைத் தாக்கும் நோக்கத்தோடு, மேலும் கிழக்கு நோக்கி நகர விரும்பினார். எனினும், அவருடைய படையினர் கிழக்கின் மாபெரும் பேரரசரைப் (நந்தர்) பற்றியும், அவருடைய பெரிய ராணுவத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால், அத்தகைய வலுவான எதிரியுடன் போரில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். 

பொ.ஆ.மு. 326 இல் பாரசீகர்களைத் தோற்கடித்துவிட்டு, அலெக்சாண்டர் இந்தியத் துணைகண்டத்திற்குள் நுழைந்தபோது தட்சசீலத்தின் அரசரான அம்பி அவரிடம் சரணடைந்து, அவரது மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டார். அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்புமிக்க போர் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸுடன் நடந்தது. இரு ராணுவங்களும் ஹைடாஸ்பெஸ் போரில் சந்தித்தன. இதில் போரஸ் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர், போரஸின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் தனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரது அரியணையைத் திருப்பித் தந்தார். போரினால் களைப்படைந்த அவரது வீரர்கள் மேலும் அணிவகுத்துச் செல்ல மறுத்தார்கள். இராணுவம் தயங்கும்போது மேற்கொண்டு செல்ல அலெக்சாண்டர் விரும்பவில்லை. நாடு திரும்பும் வழியில் அலெக்சாண்டர் கண்டறிய முடியாத கடும் காய்ச்சல் காரணமாக பாபிலோனில் இறந்தார். 


இந்தியாவில் அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கம் : அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்தியத் துணைகண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் (மாகாணங்கள்) அமைவதற்கு இட்டுச் சென்றது. மேற்குலகிற்காக வணிகப் பெருவழிகள் திறக்கப்பட்டன. நான்கு வணிகப் பெருவழிகள் பயன்பாட்டில் இருந்தன. இதனால் கிரேக்க வணிகர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர். இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடித் தொடர்பு ஏற்பட இது உதவியது. வணிகத்தொடர்பு அதிகரிக்க ஆரம்பித்த உடன் இந்தியாவின் வடமேற்கில் பல கிரேக்கக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன காபுல் அருகில் இருந்த அலெக்சாண்டிரியா, பாகிஸ்தானின் பெஷாவர் அருகே இருந்த பூகிஃபெலா, சிந்துவில் இருந்த அலெக்சாண்டிரியா ஆகியன சில முதன்மையான கிரேக்கக் குடியிருப்புகளாகும். 

இந்தியாவைக் குறித்து கிரேக்கர்கள் எழுதிய பதிவுகள் சற்று மிகையானவை என்றாலும்கூட, இந்தியா பற்றி மிக அரிய தகவல்களைத் தருகின்றன. அலெக்சாண்டரின் மரணத்தால் வடமேற்கில் உருவான வெற்றிடம் சந்திரகுப்த மௌரியர் மகத் அரியணையைக் கைப்பற்ற உதவியது. வடமேற்கில் மேலும் பல சிறு அரசுகளையும் கைப்பற்றி, அந்தப் பகுதி முழுவதையும் தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளவும் அவ்வெற்றிடம் அவருக்கு உதவியது.


4.5 மௌரியப் பேரரசு :


கிரேக்க வரலாற்றாளர்கள் எழுதிய சமகாலத்துப் பதிவுகள் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவந்த போது, சந்திரகுப்தர் தட்சசீலத்தில் வாழ்ந்துவந்த இளைஞராக இருந்தார் என்று குறிப்பிடுகின்றன. கிரேக்க வரலாற்றாளர்கள் அவரது பெயரை ‘சண்ட்ரகோட்டஸ்' என்றும் ‘சண்ட்ரகோப்டஸ்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இவை ‘சந்திரகுப்தர்’ என்ற சொல்லின் திரிபுகள். அலெக்சாண்டரிடமிருந்து பெற்ற உந்துதலால் சந்திரகுப்தர் பல ஆண்டுகள் கழித்து நந்தர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவர்களை விரட்டினார். மக்கள் செல்வாக்கு இல்லாத அரசரை எதிர்த்து கிளர்ச்சி செய்யுமாறு மக்களைத் தூண்டியோ அல்லது மக்கள் செல்வாக்கு இல்லாத அரசனைத் தூக்கி எறிய மக்களின் ஆதரவைப் பெற்றோ இதை அவர் சாதித்தார். சந்திரகுப்தர் பொ.ஆ.மு. 321 இல் மௌரியப் பேரரசை அமைத்து, அதன் முதல் பேரரசர் ஆனார். 

சந்திரகுப்தர் தனது பேரரசை குஜராத் வரை விரிவுப்படுத்தியிருந்தார் என்று ஜுனாகத் பாறை எழுத்துகள் மூலம் (இது பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம்) அறிகிறோம். உள்ளூர் வரலாறுகளின்படி, அவரது மற்றொரு சாதனை, அவர் அலெக்சாண்டர் விட்டுச் சென்ற கிரேக்கத் தளபதிகளுடன் போரிட்டு அவர்களை அழித்ததாகும். இதனால் பேரரசை விரிவாக்கும் அவரது திட்டத்திற்கான வழியும் கிடைத்தது. அவரது ஆட்சியில் மற்றொரு முக்கியமான நிகழ்வு, அவர் அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவரான செலியுகஸுடன் நடத்திய போர் ஆகும். அலெக்சாண்டரின் மரணத்திற்குப் பிறகு, செலியுகஸ் பஞ்சாப் வரை பரவியிருந்த பகுதியில் தமது அரசை நிறுவினார். பொ.ஆ.மு. 301க்குச் சிலகாலம் முன்பாகச் சந்திரகுப்தர் அவர்மீது போர் தொடுத்துத் தோற்கடித்து, பஞ்சாப் பகுதியை விட்டே விரட்டினார். இறுதியில் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி சந்திரகுப்தர் செலியுகஸிற்கு 500 போர் யானைகளை வழங்கினார். செலியுகஸ் தனது தூதரைச் சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பினார். அந்தத் தூதர்தான் மெகஸ்தனிஸ். அந்த மெகஸ்தனிஸிற்கு நாம்மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் சந்திரகுப்தர் குறித்து நாம் அறியவரும் பெரும்பாலான தகவல்கள், மெகஸ்தனிஸ் எழுதிய ‘இன்டிகா’ என்ற நூலில் உள்ளவையே. இந்த நூலின் மூலம் கிடைக்கவில்லை. ஆனால் பல கிரேக்க வரலாற்றாளர்கள் சந்திரகுப்தரின் அரசு, நிர்வாகம் ஆகியவை குறித்து மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ள பகுதிகளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார்கள்.


சந்திரகுப்தர் : சந்திரகுப்தர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பது வெளிப்படை. தனது பரந்த அரசை நிர்வகிக்க அவர் ஒரு வலுவான நிர்வாக இயந்திரத்தை மறு கண்டுபிடிப்பு செய்தாக வேண்டி இருந்தது. (நிர்வாக அமைப்பும், அரசு முறையும் அடுத்த பகுதியில் விவரிக்கப்படுகின்றன.) அரசியல் தந்திரங்களுக்குப் பெயர் போன சாணக்கியரின் ஆலோசனைகள் நிர்வாகத்தை நடத்துவதற்கு உதவின. சந்திரகுப்தரின் சமகால பௌத்த, சமண நூல்கள் சாணக்கியர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அனைவருக்கும் பரிச்சயமான வாய்மொழிக்கதைகள் சந்திரகுப்தர் ஆட்சியின் சிறப்பிற்குச் சாணக்கியரின் அறிவும், மேதமையும்தான் காரணம் என்கின்றன. விஷ்ணுகுப்தர் என்று அழைக்கப்பட்ட சாணக்கியர் அல்லது கௌடில்யர் ஒரு பிராமணர். நந்தர்களின் கடும் எதிரி. நந்தர்களை வீழ்த்துவதற்கான திட்டங்களை இவர்தான் வகுத்தார் என்றும், சந்திரகுப்தர் மகதப் பேரரசராவதற்கு உதவினார் எனவும் கூறப்படுகிறது. அரசியல் நிர்வாகம் குறித்த புகழ்பெற்ற நூலான அர்த்த சாஸ்திரத்தை சாணக்கியர் எழுதினார் என்பது மரபு. மகத நாட்டிற்கு வரவிருந்த படையெடுப்பைத் தடுப்பதற்கு இவரது சூழ்ச்சி மிக்க தந்திரங்களும், அற்புதமான யுக்தியும் முத்ராராட்சசம் எனும் நாடகத்தின் கருப்பொருளாகும். 


பிந்துசாரர் : சந்திரகுப்தரின் புதல்வர் பிந்துசாரர் பொ.ஆ.மு. 297இல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தார். சந்திரகுப்தருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. சில சமண நூல்கள் சொல்வது போல, அவர் இவ்வுலக வாழ்வைத் துறந்து, சமணத் துறவியாகி இருக்கலாம். சமண கதைகளின்படி, சந்திரகுப்தர், கர்நாடகாவின் சரவணபெலகொலாவிற்கு அருகிலுள்ள சந்திரகிரியில் துறவியாக வாழ்ந்ததாகத் தெரிகிறது. பிந்துசாரர் நல்ல திறமையான அரசர். மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார். இவருக்கு சாணக்கியரும் மற்ற அமைச்சர்களும் ஆலோசனைகள் வழங்கினர். பேரரசின் பல பகுதிகளுக்கு இவருடைய புதல்வர்கள் அரசப்பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர். இவருடைய ராணுவ வெற்றிகள் பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை. ஆனால், பிந்துசாரருக்குப் பிறகு மௌரியப் பேரரசு சிதையாமல் அப்படியே அவருடைய மகனான அசோகர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் பொ.ஆ.மு. 272இல் இறந்திருக்க வேண்டும். அசோகர் அவர் தேர்ந்தெடுத்த வாரிசு அல்ல. நான்காண்டுகளுக்குப் பிறகே, பொ.ஆ.மு. 268இல் ஆட்சிக்கு வந்தார் என்பதன் மூலம் அரசுரிமைக்காகப் புதல்வர்களுக்கிடையில் போட்டி நடந்திருக்கிறது என்பதை உய்த்துணர முடிகிறது. அசோகர் தட்சசீலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்தார். அங்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியை அடக்கினார். பின்னர் அவந்தியின் தலைநகரும், முக்கிய நகரமும், வணிக மையமுமான உஜ்ஜயினியில் அரசின் பிரதிநிதியாக இருந்தார். பேரரசராக அவர் அற்புதமான நினைவுச் சின்னங்களைக் கட்டியவர் என்ற புகழ் பெற்றவர். அவை பாடலிபுத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் வெளிப்பட்டுள்ளன. அவரும் மேற்கு ஆசியாவுடன் நெருக்கமான உறவு என்ற மரபைத் தொடர்ந்தார். இருதரப்பிலும் நல்லுறவு காக்க தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.


அசோகர் : அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் நடந்த கலிங்கத்தின் (இன்றைய ஒடிசா) மீதான அவரது படையெடுப்பு ஆகும். இது ஒன்றுதான் மௌரியர்கள் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்த படையெடுப்பு ஆகும். போரில் கொல்லப்பட்டவர்கள், காயம் பட்டுப் பின்னர் இறந்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாகும். இப்போர் மற்ற போர்களை விட மிகக் கொடூரமானதாக, வெறிகொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இப்போர் மகதப் பேரரசிலிருந்து பிரிந்து சென்ற, கலிங்கத்தைத் தண்டிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட போர் ஆகும். (ஹதிகும்பா கல்வெட்டு கலிங்கம் நந்தப் பேரரசின் பகுதியாக இருந்தது என்று குறிப்பிடுகிறது) இந்த அழிவினால் அசோகர் மிகவும் வருந்தினார். போரினால் ஏற்பட்ட துன்பங்களால் நெகிழ்ந்த அவர் மனிதாபிமான மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக மாறி, பௌத்தராக மதம் மாறினார். அவர் புதிதாய் அறிந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் வரிசையாகப் பதிவு செய்யப்பட்டன. இவை அமைதி, அறவழிப்பட்ட நேர்மை, தம்மம் (சமஸ்கிருதத்தில் தர்மம்) மீதான அவரது பெருவிருப்பத்தை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. 


அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் : அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் மௌரியப் பேரரசு பற்றிய தகவல்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றுகளாகத் திகழ்கின்றன. 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள், கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும் 2 கல்வெட்டுக் கட்டளைகள், 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள், சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள், மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டுக் கட்டளைகள் இதுவரை கிடைத்துள்ளன. முக்கியமாகப் பாறைகளில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் ஆப்கனிஸ்தானின் காந்தஹார், வடமேற்கு பாகிஸ்தானின் ஷாபஸ்கார்ஹி மற்றும் மன்ஷேராவிலிருந்து வடக்கே உத்தரகாண்ட் மாவட்டம், மேற்கே குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா, கிழக்கே ஒடிசா, தெற்கே கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம் வரை பரவியுள்ளன. சிறு பாறையில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் வடக்கே நேபாளம் (லும்பினி) வரை காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக் கட்டளைகள் பெரும்பாலும் பிராமி எழுத்துமுறையிலும், சில கல்வெட்டுக் கட்டளைகள் மகதி மற்றும் பிராகிருதத்திலும் அமைந்துள்ளன. காந்தஹார் பிரகடனங்கள் கிரேக்கத்திலும், அராமிக்கிலும் உள்ளன. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இரண்டு கல்வெட்டுக் கட்டளைகள் கரோஷ்டி எழுத்தில் உள்ளன. 

இந்த மௌரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கில் பரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது. அவரது இரண்டாவது அரசாணை அவரது பேரரசின் எல்லைக்கு வெளியேயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது. அவை; “சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரளபுத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி, யோன (யவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகாஸ் அருகில் இருந்த நாடுகளின் அரசர்கள்”. இந்த அரசாணை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிக்கை, மக்களது நல்வாழ்வின் மீது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன. வன்முறை, போர் ஆகியவற்றை நிராகரித்து அமைதியையும் தர்மத்தையும் வலியுறுத்தியதன் மூலம் அசோகர் ‘ஒரு பேரரசர் போர்கள் மூலம் தனது அரசை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும் என்று அக்காலத்தில் நிலவி வந்த கொள்கையை முற்றிலும் நிராகரித்தார்.


மூன்றாம் பௌத்த சங்கம் : அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று, பொ.ஆ.மு. 250இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த சங்கத்தைக் கூட்டியது ஆகும். அசோகரது ஆழமான பௌத்தமத ஈடுபாட்டால் பௌத்த மதத்திற்கு அரச ஆதரவு கிட்டியது. பௌத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பௌத்த மதத்திற்கு மாற்ற பிரச்சாரகர்களை அனுப்பவும் வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கியமான முடிவாகும். இவ்வாறாக பௌத்தம் மதமாற்றம் செய்யும் மதமாகவும் மாறியது. பேரரசிற்கு வெளியே அமைந்த பகுதிகளான காஷ்மீர், தென்னிந்தியா போன்ற பகுதிகளுக்கும் பிரச்சாரகர்கள் அனுப்பப்பட்டார்கள். அசோகர் தனது குழந்தைகளான மகேந்திரன், சங்கமித்திரை ஆகியோரை மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார் என்பர். புத்தர் அமர்ந்த போதி மரத்தின் சென்றதாகவும் நம்பப்படுகிறது. 

அசோகரது ஆட்சிக்காலம் கி.மு.232 வரை இருந்திருக்கலாம். அவரது ஆட்சி நிர்வாகம், அகிம்சை குறித்த புரட்சிகரக் கருத்துக்கள் இன்று நமது சமகால உணர்வுகளில் ஓர் அதிர்வை ஏற்படுத்தினாலும், அக்காலத்தின் யதார்த்தத்திற்கு அவை பொருத்தமாக இல்லை என்பது வருந்தத்தக்கதே. அவரது மரணத்திற்குப் பிறகு, மகதப் பேரரசு மெதுவாகச் சிதைந்து, ஐம்பதாண்டுகளுக்குள்ளாக அழிந்துபோனது. ஆனால், அசோகரின் மரணம், மௌரியப் பேரரசின் அழிவு ஆகியனவற்றுக்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளும் இந்திய காலகட்டமாகும். அது மிகப் பெரிய மாற்றத்தின் காலமாக இருந்தது. இந்தப் பேரரசு கிட்டத்தட்ட துணைக்கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பகுதிகளில் பரவியிருந்தது. நிர்வாகம் முறைப்படுத்தப்பட்டது. அதிகார நிறுவனங்கள் வளர்ச்சியடைந்தன. பொருளாதார விரிவாக்கம் நடந்தது. மேலும், ஏற்கெனவே நிலைபெற்றிருந்த சனாதன பழக்க வழக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கிய புதிய மதங்களும் தத்துவங்களும் தோன்றின.


4.6 மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும் :


அரசின் வருவாய்க்காக வரி வசூலித்தல், நீதி பரிபாலனம், உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவைதான் மௌரிய அரசு கவனத்தில் கொண்ட முக்கிய விஷயங்கள் ஆகும். இதற்கு மிகப் பெரிய , நுட்பமான நிர்வாக இயந்திரமும் நிறுவனங்களும் தேவைப்பட்டன. மெகஸ்தனிஸிடமிருந்து தகவல்களைப் பெற்ற கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள். மையப்படுத்தப்பட்ட அரசு என்றால். பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என்று பொருள் கொள்ளவேண்டும். ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்துப் பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைதான் இருந்திருக்க வேண்டும்.

இந்த அதிகாரமுறை என்பது கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என்ற படிநிலைகளைக் கொண்டதாக இருந்தது. அதிகாரவர்க்கத்திற்கு வரிவசூலுக்கான ஒரு திறம்பட்ட முறை தேவைப்பட்டது, ஏனெனில், அந்த வசூலிலிருந்துதான் அதற்கு ஊதியம் தரப்பட்டது. எனவே, அதிகார வர்க்கம் திறமிக்க வரிவசூல் முறையை ஏற்படுத்தியது. அதேபோல, வரி மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே மௌரியப் பேரரசின் மிகப் பெரிய ராணுவம் இயங்கியது. பெரிய அதிகாரிகளுக்கு ஊதியமும் அதிகமாக இருந்தது. அர்த்த சாஸ்திரம் கூறுவதன்படி, தலைமை அமைச்சர், புரோகிதர், ராணுவ தளபதி ஆகியோருக்கு ஊதியம் 48,000 பணம். போர்வீரர்களுக்கு ஊதியம் 500 பணம். இந்தத் தொகையைக் காலாட்படை, குதிரைப்படையின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டால், ராணுவத்தையும் நிர்வாகப் பிரிவு ஊழியர்களையும் நிர்வகிக்கத் தேவையான பெருமளவு நிதியாதாரம் குறித்து ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.


அர்த்தசாஸ்திரம் : நிர்வாகம் பற்றிய மிக விரிவான பதிவுகளை அர்த்த சாஸ்திரத்தில் காணலாம். ஆனால், இந்தப் படைப்பேமௌரியப் பேரரசுக்குச் சில நூற்றாண்டுகள் பிந்தையது என்ற ஆய்வாளர் கருத்தையும் மனங்கொள்ள வேண்டும். எனினும், அர்த்த சாஸ்திரம் நல்ல நிர்வாகத்திற்கான ஒரு வழிகாட்டி நூல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளோடு, அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள், மெகஸ்தனிஸின் குறிப்புகள் ஆகியவற்றில் உள்ள செய்திகளையும் இணைத்துக் கொண்டால் மௌரியப் பேரரசு எப்படி இருந்தது என்பதை நாம் எதிர்பார்த்ததிற்குச் சற்று அதிகமாகவே நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.


மாகாண நிர்வாகம் : நாட்டின் நிர்வாகத்தின் தலைவர் அரசர். அவருக்கு அமைச்சரவை, ஒரு மதகுரு (அவர் மிக முக்கியமானவர் என கருதப்பட்டார்), மஹாமாத்திரியர்கள் என்றழைக்கப்பட்ட செயலாளர்கள் ஆகியோர் உதவினர். தலைநகர் பாடலிபுத்திரம் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. எஞ்சிய மௌரிய அரசுப் பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூலுக்கு அருகிலுள்ள சுவர்ணகிரி உஜ்ஜையினி (அவந்தி, மாளவம்), வட மேற்கில் தட்சசீலம். தென்கிழக்கில் ஒடிசாவின் தோசாலி என்று நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, அரசரின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டன. இவர்கள் பெரும்பாலும் மௌரிய அரசின் இளவரசர்களாவர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரே மாதிரியான வருவாய் மற்றும் நீதி நிர்வாகம்தான் நிலவியது. வரி வசூல் சமஹர்த்தா என்பவரின் பொறுப்பாக இருந்தது. இவர்தான் செலவுகளுக்கும் பொறுப்பு என்பதால், ஒரு விதத்தில் இவர் நிதியமைச்சர் போல் இருந்தார். இவர் அனைத்து மாகாணங்கள், நகரங்கள், சுரங்கங்கள், காடுகள், வணிகப் பெருவழிகள், வருவாய் வரக்கூடிய மற்ற வழிகள் என அனைத்தையும் மேற்பார்வை செய்ய வேண்டியிருந்தது. வரிவசூல் குறித்த ஆவணங்களை நிர்வகிப்பது கருவூல நிர்வாகியின் பொறுப்பு. ஒவ்வொரு துறைக்குமான கணக்கு வழக்குகளை அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து அரசரிடம் தாக்கல் செய்தனர். ஒவ்வொரு துறையிலும் மத்திய மற்றும் உள்ளூர் நிர்வாகங்களோடு இணைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பாளர்களும் துணை அதிகாரிகளும் இருந்தனர். 


மாவட்டம் மற்றும் கிராம நிர்வாகம் : அடுத்த கட்ட நிர்வாகத்தின் கீழ் மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் வந்தன. மாவட்ட நிர்வாகம் ஸ்தானிகர் என்பவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. கோபா என்றழைக்கப்பட்ட அதிகாரிகள் ஐந்து முதல் பத்து கிராமங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். நகர நிர்வாகம் நகரிகா என்பவர் வசம் இருந்தது. கிராமங்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்றிருந்தன. மத்திய அரசாங்கத்தாலும், கிராம மூத்தவர்கள் குழுவாலும் நியமிக்கப்பட்ட கிராமணி என்பவரின் அதிகாரத்தின் கீழ் ஒவ்வொரு கிராமமும் இயங்கியது. முந்தைய பல நூற்றாண்டுகள் போலவே அப்போதும் வேளாண்மைதான் தேசியப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பைத் தரும் துறையாக இருந்தது. பொதுவாக அரசருக்கு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு உரியது. ஆனால் நடைமுறை அதைவிட மிகவும் அதிகமாக இருந்தது, பொதுவாக உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு வரியாகப் பெறப்பட்டிருக்கலாம்.


வருவாய் ஆதாரம் : பொருளாதாரத்தில் மிக முக்கியமான வேளாண்மைத் துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில், வேளாண்மை உற்பத்திகளைச் சேமிக்க கிடங்குகள், கட்டுப்படுத்தப்பட்ட சந்தைகள் ஆகிய வசதிகளுடன் உற்பத்தியிலும் சந்தைப்படுத்தலிலும் விரிவான அரசுக்கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. நிலவரி, அரசு பாசன வசதி செய்து தந்திருந்தால் பாசனத்திற்கான வரி, நகர்ப்புற வீடுகளுக்கு வீட்டுவரி, வணிகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் பொருள்கள், நாணயம் அச்சடித்தல், அரசு நடத்தும் வணிகங்கள் மீதான லாபம் ஆகியவற்றின் மீது சுங்கம் மற்றும் நுழைவு வரி உள்ளிட்ட பிற வரி வருவாய்களும் இருந்தன. நிலம் அரசருக்குச் சொந்தம். காடுகள், சுரங்கங்கள், ஏகபோகமாக இருந்த உப்பு உற்பத்தி ஆகியவை வருவாய்க்கான முக்கியமான ஆதாரங்கள்.


நீதி நிர்வாகம் : நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்பட்டது. எல்லா முக்கிய நகரங்களிலும் நீதிமன்றங்கள் இருந்தன. இருவகை நீதிமன்றங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. தர்மஸ்தியா நீதிமன்றங்கள் பெரும்பாலும் திருமணம், வாரிசுரிமை உள்ளிட்ட குடிமை உரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தன. இந்த நீதிமன்றங்களில் மதச் சட்டங்களை நன்கு அறிந்த மூன்று நீதிபதிகளும் மூன்று அமாத்தியாக்களும் (செயலாளர்கள்) இருந்தார்கள். மற்றொரு நீதிமன்றம் கந்தகோசந்தனா (முள்ளை எடுத்தல்) என்றழைக்கப்பட்டது. இதிலும் மூன்று நீதிபதிகளும் மூன்று செயலாளர்களும் இருந்தார்கள். இந்த நீதிமன்றங்களின் முக்கியப் பணி சமூக விரோதிகளையும், பல்வேறு விதமான குற்றங்களையும் அகற்றுதலாகும். இது பெரும்பாலும் இன்றைய நவீன காவல்துறை போல இயங்கியது. சமூக விரோதச் செயல்கள் குறித்த தகவல்களை அறிவதற்காக, ஒற்றர்களைக் கொண்ட முறையான அமைப்புமுறை செயல்பட்டது. குற்றங்களுக்கான தண்டனை மிகக் கடுமையாக இருந்தது. நீதித்துறை வளர வளர, அதன் ஒட்டுமொத்த நோக்கம் அன்றாட வாழ்வின் பெரும்பாலான அம்சங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதாக இருந்தது.


அசோகரின் தம்ம அரசு : அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர், நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது. அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜுக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களுக்கு தம்மத்தைப் போதிக்குமாறு அறிவுறுத்தினார். (முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் 3). எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவேனோ, அதையேதான் அனைத்து மக்களுக்கும் செய்ய வேண்டும், அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும், அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும், நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும், சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசோகரின் கட்டளைகளாக இருந்தன. தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப்போவதாகவும் அவர் அறிவித்தார். (கலிங்கப் பாறைக் கல்வெட்டுக் கட்டளைகள்- எண் 1).

ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார். தான் எங்கே இருந்தாலும் தமக்கு முறையான தகவலும் ஆலோசனையும் தரப்பட வேண்டும் என்றார் (முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் - எண் 6) அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்படவேண்டும் என்றும் கூறினார் (முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் எண்-7 மற்றும் 12). மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார் (முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் - எண் 2). தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும், எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துகளில் ஒன்று. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும், பரிவும் கொண்ட, ஒரு நல்ல முன்மாதிரியாகக் கொள்ளத்தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம். அதிகாரிகளும் குடிமக்களும் எல்லோரும் தம்மத்தைக் கடைப்பிடித்து ஒழுங்காக வாழ வேண்டும் என்று அவரது கல்வெட்டுக் கட்டளைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.


பொருளாதாரமும் சமூகமும் :


வேளாண்மை : மௌரியப் பேரரசுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மை விளங்கியது. அரசு மொத்த வருவாயில் அதன் பங்கு , அதில் வேலை செய்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அது மிகப் பெரிய துறை ஆகும். மண்ணின் வளத்தால் ஆண்டுக்கு இரண்டு போகம் விளைந்ததைக் கிரேக்கர்கள் வியப்போடு பதிவு செய்திருக்கிறார்கள். உணவு தானியங்களுடன், கரும்பு, பருத்தி போன்ற வணிகப்பயிர்களையும் விளைவித்தனர் என்பதைப் பதிவு செய்யும் மெகஸ்தனிஸ், அவற்றை முறையே ‘தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்’ என்றும், ‘கம்பளி வளரும் செடி’ என்றும் குறிப்பிடுகிறார். இவை முக்கியமான வணிகப் பயிர்களாக இருந்தன. வேளாண்மை தொடர்ந்து அபரிமிதமான உபரியை அளித்ததால், வணிக உற்பத்திக்கும் அப்பால் பொருளாதாரத்தில் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய காரணியாக இந்த உபரி விளங்கியது.


கைவினைத்திறன்களும் பொருள்களும் : பல்வேறு கைவினைத்திறன்கள் மூலம் பலவிதமான கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, பொருளாதாரத்துக்கு வளம் சேர்த்தன. இப்பொருள்களை நாம் பயன்பாட்டுப் பொருள்கள், ஆடம்பரப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் என்று வகைப்படுத்தலாம். நாடெங்கும் கிடைத்த பருத்தியை நம்பி, பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபடுவது வேளாண்மைக்கு அடுத்த முக்கியத் தொழிலாக இருந்தது. சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினரும் அரச குடும்பத்தினரும் பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ரகங்களில் பருத்தித்துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. காசி (வாரணாசி), வங்கம், காமரூபம் (அஸ்ஸாம்), மதுரை மற்றும் பல இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதாக அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பகுதியும் தனிச்சிறப்புமிக்க துணிகளைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தது. அரசர்களும், அரசவையினரும், தங்க, வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகள் செய்த ஆடைகளை அணிந்தார்கள். பட்டு குறித்தும் அறிந்திருந்தார்கள். பட்டு பொதுவாக சீனப் பட்டு என்றே அழைக்கப்பட்டது. இது மௌரியப் பேரரசில் விரிவான கடல்வழி வணிகம் நடந்ததை சுட்டிக்காட்டுகிறது.

உலோகங்களும் உலோக வேலைகளும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருந்தன. உள்ளூர் உலோகத் தொழிலாளர்கள் இரும்பு, செம்பு மற்றும் இதர உலோகங்களைப் பயன்படுத்தி கருவிகள், உபகரணங்கள், பாத்திரங்கள், மற்ற வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்தார்கள். இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுப்பது பல நூற்றாண்டுகளாகவே அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் பொ.ஆ.மு. 500க்குப்பிறகு , தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. உலையில் மிக உயர் வெப்பநிலையில் இரும்பைப் பிரித்தெடுப்பது சாத்தியமானது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு, இரும்பு உற்பத்தியில் அளவிலும், தரத்திலும்மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொல்லியல் ஆதாரங்கள் காட்டுகின்றன. இரும்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலான தாக்கங்களை ஏற்படுத்தியது. கோடரி போன்ற மேம்பட்ட இரும்புக்கருவிகளால் வேளாண்மைக்காகக் காடுகளை பெரிய அளவில் திருத்துவது சாத்தியமானது. மேம்படுத்தப்பட்ட கலப்பைகள் உழவுக்கு உதவின. தரமான ஆணிகளும் கருவிகளும் தச்சு வேலைகள், மர வேலைகள் உள்ளிட்ட கைவினைத்தொழில்களின் தரத்தை மேம்படுத்தின. மரவேலைகளில் காணப்பட்ட மேம்பாடு கப்பல் கட்டுவதற்கும், வண்டி, தேர் ஆகியவற்றை உருவாக்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், பிற வேலைகள் செய்வதற்கும் உதவின. கல் வேலைகள் - கற்களை வெட்டுதல், மெருகூட்டுதல் - உயர்ந்த தொழில்நுட்பமுள்ள தொழிலாக உருவாகின. இக்கலைத் திறமை சாஞ்சியில் உள்ள ஸ்தூபியிலும், அசோகருடைய தூண்களுக்கும் பயன்படுத்தப்பட்ட, மிகவும் மெருகூட்டப்பட்ட சுன்னார் கற்களிலும் பார்க்க முடியும்.

தங்க, வெள்ளிப் பொருள்கள், நகைகள். வாசனைத் திரவியங்கள், செதுக்கப்பட்ட தந்தங்கள் என்று ஏராளமான ஆடம்பரப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. மருந்துகள், மட்பாண்டங்கள், சாயங்கள், பசைகள் போன்ற வேறு பல பொருள்களும் மௌரியப் பேரரசில் தயாரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 

இவ்வாறாக, பொருளாதாரம் உயிர் வாழத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்வது என்ற நிலையிலிருந்து மிகவும் வளர்ந்து, உயர்ந்த வணிகரீதியான கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யுமளவு முன்னேறியிருந்தது.

கைத்தொழில்கள் பெரும்பாலும் நகரங்களில், பரம்பரையாகச் செய்யப்பட்ட தொழில்களாக இருந்தன. பொதுவாக, பல்வேறு கைத்தொழில்களில் வாரிசுதாரர்கள் தம் தந்தையரைத் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். கைவினைக் கலைஞர்கள் பொதுவாகத் தனிப்பட்ட முறையில்தான் தொழில் செய்தார்கள். இருப்பினும், துணி முதலான இதர பொருள்களை உற்பத்தி செய்ய அரண்மனையைச் சார்ந்த பணிமனைகளும் இருந்தன. ஒவ்வொரு கைவினைத்தொழிலுக்கும் பமுகா (பிரமுகா - தலைவர்) என்ற தலைவரும், ஜெட்டா (ஜேஷ்டா - மூத்தவர்) என்பவரும் இருந்தார்கள். தொழில்கள் ஒரு சேனி (ஸ்ரேனி - வணிகக் குழு) என்ற அமைப்பாகத் திரட்டப்பட்டிருந்தன. இதனால் உற்பத்தியில் தனிநபரை விட நிறுவன அடையாளம் முக்கியத்துவம் பெற்றது. ஸ்ரேனிகளுக்கிடையிலான பிரச்சனைகளை மஹாசேத்தி என்பவர் தீர்த்து வைத்தார். இது நகரங்களில் கைத்தொழில் உற்பத்தி தடங்கலின்றி நடப்பதற்கு உதவியது.


வணிகம் : வணிகம் அல்லது பரிமாற்றம் என்பது பொருளாதாரப் பரவலாக்கம், வளர்ச்சியின் ஆகியவற்றின் இயல்பான உடன் நிகழ்வாகும். வாழ்வதற்குத் தேவையானதற்கு மேல் உற்பத்தியாகும் உபரி , அதற்கு ஒரு பரிமாற்ற மதிப்பு இல்லாமல் போனால் வீணாகிவிடும். ஏனெனில் வாழ்க்கைத் தேவைகள் நிறைவுகண்டு விட்டால், அந்த உபரியால் பயனில்லை . எனவே, பொருளாதாரம் பரவலாகி விரிவடைகிறபோது, அந்தப் பரவலாக்கத்தின் பலன்களைப் பெறுவதற்கு பரிமாற்றம் மிக முக்கியமான அம்சமாகிறது. வணிகம் பல படிநிலை கொண்ட சந்தைகளில் நடந்தது. ஒரு கிராம் சந்தையில் பரிமாற்றம் செய்துகொள்ளுதல், ஒரு மாவட்டத்தின் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு இடையிலான பரிமாற்றம், நகரங்களைத் தாண்டி தொலைதூர ஊர்களுக்கு இடையேயான பரிமாற்றம், எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுடனான பரிமாற்றம் என்று பலவிதமாக நடந்தது. மௌரியப் பேரரசின் காலத்தில் நிலவிய அமைதியான அரசியல் சூழ்நிலைதான் வணிகத்திற்கு உகந்த நிலையாகும். மௌரியப் பேரரசு ஒரு பரந்துபட்ட பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்டியிருந்தது. கங்கைச் சமவெளியின் ஆறுகள் தான் பொருள்களை வட இந்தியா முழுவதற்கும் எடுத்துச்செல்ல போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. மேலும் மேற்கே உள்ள நிலப்பகுதிகளுக்குச் சாலைகள் மூலம் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. விதிஷா, உஜ்ஜையினி ஆகிய நகரங்கள் வழியாக, நாட்டின் வடபகுதியைத் தென்கிழக்கிலும் தென்மேற்கிலும் உள்ள நகரங்களோடும் சந்தைகளோடும் சாலைகள் இணைத்தன. வடமேற்கில் உள்ள சாலை மௌரியப் பேரரசை வடக்கு மற்றும் மத்திய ஆசியாவோடு இணைத்தது. கப்பல்கள் மூலம் கடல் வாணிபமும் நடைபெற்றது. புத்த ஜாதகக் கதைகள் வணிகர்கள் மேற்கொண்ட நீண்ட கடற்பயணங்கள் குறித்துப் பேசுகின்றன. பர்மா, மலாய் தீவுக் கூட்டங்கள், இலங்கை ஆகியவற்றோடு கடல் வாணிபம் நடந்தது. எனினும் கப்பல்கள் சிறியவையாக, கடற்கரையை ஒட்டிச் செல்பவையாகவே இருந்திருக்கின்றன.

வணிகக் குழுக்கள் குறித்து நமக்கு அதிகமான தகவல்கள் தெரியவில்லை. பொதுவாக நீண்ட தூர, கடல் கடந்து அயல்நாடு செல்லும் வியாபாரங்கள் வணிகக் குழுக்களால் நடத்தப்பட்டன. இவர்கள் பாதுகாப்பிற்காகக் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். இந்த வணிகக் கூட்டத்திற்கு மஹாசர்த்தவகா என்ற தலைவர் இருந்தார். காடுகள், பாலைவனங்கள் போன்ற வழிகளில் செல்லும் சாலைகள் ஆபத்தானவை. எனினும் அர்த்த சாஸ்திரம் வணிகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சீரான செயல்பாட்டின் தேவையையும் அழுத்தமாகச் சொல்கிறது. சாலைகளை அமைத்து, அவற்றை நல்ல நிலையில் பராமரிப்பதன் மூலம் வணிகத்திற்கு உதவி செய்ய வேண்டும். பொருள்களை எடுத்துச் செல்லும்போது நுழைவு வரி வசூலிக்க வேண்டும் என்பதால், நுழைவு வரி வசூல் மையங்கள் நிறுவப்பட்டு, அதில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏமாற்று வேலைகளைத் தடுக்க நகர்ப்புறச் சந்தைகளும், கைவினைத்தொழில் கலைஞர்களும் பொதுவாகக் கண்காணிக்கப்பட்டார்கள். அர்த்த சாஸ்திரம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் விற்கப்பட்ட பொருள்களின் - விவசாயப் பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்டவை - நீண்ட பட்டியலைத் தருகிறது. இவற்றில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும். சீனா, இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் வந்த துணி. கம்பளி, பட்டு, வாசனை மரக்கட்டை, விலங்குத் தோல், நவரத்தினக் கற்கள் ஆகியன அடங்கும். கிரேக்கச் சான்றுகள், கிரேக்க மாகாணங்கள் வழியாக மேற்குலகுடன் இருந்த வணிகத் தொடர்புகளை உறுதி செய்கின்றன. அவுரி (சாயம்), தந்தம், ஆமை ஓடு, முத்து, வாசனை திரவியங்கள், அபூர்வ மரக்கட்டைகள் ஆகியன எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 


நாணயமும் பணமும் : நாணய முறை பற்றி அறிந்திருந்தாலும், நவீன காலத்திற்கு முந்தைய பொருளாதாரங்களில் பண்டமாற்று முறைதான் பரிமாற்றத்திற்கான வழிமுறையாக இருந்தது. மௌரியப் பேரரசில் வெள்ளி நாணயங்கள் (pana) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. வட இந்தியாவின் பல பகுதிகளில் அச்சுப்பொறிக்கப்பட்ட ஏராளமான நாணயங்கள் கிடைத்துள்ளன. எனினும், இவற்றில் சில இதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம். இவ்வாறாக, நாணயங்கள் பயன்பாட்டில் இருந்தாலும்கூட, மௌரியர்களின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பணத்தைச் சார்ந்திருந்தது என்பதை மதிப்பிடுவது கடினமாக இருக்கிறது. 


நகரமயமாக்கல் : ஒரு வேளாண் நிலப்பரப்பில் நகரங்களையும் மாநகரங்களையும் உருவாக்கும் முறை நகரமயமாக்கல் எனப்படும். நிர்வாகத்தின் தலைமையிடமாக, புனிதத் தலங்களாக, வணிக மையங்களாக, முக்கியமான வணிகப் பெருவழிகளின் அருகில் அமைந்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் நகரங்கள் உருவாகின. நகரக் குடியிருப்புகள் எந்த வகையில் கிராமங்கள் மாறுபடுகின்றன? முதலில் நகரங்களும் மாநகரங்களும் தமக்கான உணவைத் தாமே உற்பத்தி செய்வதில்லை. தமது அடிப்படையான உணவுத் தேவைகளுக்கு வேளாண் உபரியை இவை நம்பி இருப்பவை. ஏராளமான மனிதர்கள் வசிப்பார்கள். மக்கள்தொகை நெருக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். வேளாண்மை சாராத தொழிலாளர்களும் கைவினைக் கலைஞர்களும் வேலை தேடி நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வருவார்கள். இவ்வாறாக இவர்கள் பொருள்களின் உற்பத்திக்கும், பல்வேறு வகையான சேவைகளுக்குமான உழைப்பாற்றலை வழங்குவார்கள். இந்தப் பொருள்களும், வேளாண் உற்பத்திகளுடன் சேர்த்து, சந்தையில் விற்கப்படும். நகரங்களில் பல்வேறு சேவை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இருப்பார்கள். சங்க இலக்கியப் பாடல்களும் தமிழ்க் காப்பியங்களும் மதுரை, காஞ்சிபுரம், பூம்புகார் போன்ற நகரங்கள் குறித்த விரிவான சித்திரத்தைத் தருகின்றன. பரபரப்பான சந்தைகள் பல்வேறு பொருள்களை விற்கும் வியாபாரிகள், வீடு வீடாகச் சென்று உணவு உட்பட பலவிதமான பொருள்களை விற்போர் என்று மனிதர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததைப் பற்றி இவை கூறுகின்றன. இந்த இலக்கியப் படைப்புகள் காலத்தால் சற்று பிந்தியவை என்றாலும், அன்றிருந்த தொழில்நுட்ப அளவுகளின்படி மிகவும் மாறுபட்டவை அல்ல. எனவே, இவற்றை நகர வாழ்வின் துல்லியமான வர்ணனையாக எடுத்துக் கொள்ளலாம். மௌரியர்களுக்குச் சமகாலத்து நகரங்களின் காட்சி வடிவிலான ஒரே சித்தரிப்பு சாஞ்சி கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அது அரச ஊர்வலத்தைக் காட்டுகிறது. நகரங்களில் சாலைகள் இருப்பதும், பல மாடிக் கட்டிடங்கள் இருப்பதும், கூட்டம் கூட்டமாக மக்கள் கூடியிருப்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளன. 


பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் நகரமயமாக்கம் : நகரமயமாக்கத்திற்கான ஒரு முன்நிபந்தனை ஒரு வேளாண்மை அடித்தளம் உருவாகியிருக்கவேண்டும் என்பதாகும். அது சிந்து - கங்கைச் சமவெளிப் பகுதியில் உருவாகியிருந்தது, மிக ஆரம்ப காலத்திலிருந்தே ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற நகரங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நகரமயமாக்கல் கங்கை - யமுனைக்கிடைப்பட்ட பகுதி வரை பரவி இருந்தது. கௌசாம்பி , பிட்டா, வைஷாலி , இராஜகிருகம் போன்ற பல புதிய நகர மையங்கள் குறிப்பிடப்படுகின்றன. புத்தரின் போதனைகள் அனைத்தும் நகரப் பகுதிகளில் நடந்ததாகவே கூறப்படுகின்றன. வேளாண்மைப் பரவலாக்கம், நெல் பயிரிடுதல், ஆற்றிடைப் பகுதிகளில் நீரை வடிய வைத்து நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாக்கியதன் மூலமே நகரங்கள் உருவாகின. வளமான மண்ணும் வற்றாத நதிகளிலிருந்து கிடைத்த நீரும் இரண்டு போகம் நெல் விளைவிப்பதைச் சாத்தியப்படுத்தின. இதனால் நகரங்களுக்குத் தேவையான பெரியளவிலான வேளாண் உபரியும் சாத்தியமானது. நகரத்திலும் கிராமத்திலும் இரும்புத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் பொருளாதார வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மகதம் வளர்ந்தபோது, உஜ்ஜையினி போன்ற பல மாகாண மையங்களும் அப்பேரரசோடு இணைத்துக்கொள்ளப்பட்டன.


வீடுகளும் நகர அமைப்பும் : நகரங்கள் பொதுவாக ஆறுகளை ஒட்டி அமைந்திருந்தன. போக்குவரத்து வசதிக்காக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம். இவை அகழிகளால் சூழப்பட்டிருந்தன. பாதுகாப்பிற்காகக் கோட்டைச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் அரசாங்கப் பணத்தை வைத்திருக்கும் கருவூலங்கள் இருந்ததாலும், வணிக மையங்கள் என்பதால் மக்களும் வணிகர்களும் செல்வமிக்கவர்களாக இருந்ததாலும் எப்போதுமே தாக்குதல் அபாயம் இருந்தது. இந்த நகரங்களின் செல்வம் அதிகரித்த போது களிமண் செங்கல்லால் அல்லது சுட்ட செங்கல்லால் கட்டப்பட்ட வீடுகளின் தரம் உயர்த்தப்பட்டது. நகரங்களில் சாக்கடைகள், உறை கிணறுகள், களிமண் குழிகள் ஆகிய வசதிகள் இருந்தது, சுகாதாரம், குடிமை வசதிகள் இருந்ததும் தெரிகின்றன. வாழ்க்கைத் தரம் அதற்கு முந்தைய காலத்தைவிட மௌரியர் காலத்தில் உயர்ந்திருந்ததை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. நகரங்களில் உறை கிணறுகளும், கழிவுநீர்ப்போக்குக் குழிகளும் இருந்தன. இரும்பால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருள்களின் பயன்பாட்டின் அளவும் அதிகரித்திருந்தது.


பாடலிபுத்திர நகரம் : பாடலிபுத்திரம் மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரமாகும். இது கங்கையும் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைகரத்தின் வடிவில் இருந்த பெரிய, செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது. இது 14 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச் சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்கு 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்புக் கோபுரங்கள் இருந்தன. சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பிற்காகவும், கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன. அதன் மக்கள் தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மாணித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.


கலையும் பண்பாடும் : இக்காலகட்டத்தின் பெரும்பாலான கலைப்படைப்புகளும் இலக்கியங்களும் அழிந்து போய்விட்டன. மௌரியர் காலத்தில் சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் இலக்கண ஆசிரியர் பாணினியின் (பொ.ஆ.மு. 500) படைப்புகளாலும், நந்தர்களின் சமகாலத்தவரும், பாணினியின் படைப்பிற்கு உரை எழுதியவருமான காத்யாயனராலும் செழுமை பெற்றன. பௌத்த, சமண இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் எழுதப்பட்டன. சமஸ்கிருதத்தில் பல இலக்கியப் படைப்புகள் இக்காலத்தில் எழுதப்பட்டன என்று தெரிகிறது. இவை பிற்காலப் படைப்புகளில் குறிப்பிடப்பட்டாலும், இன்று கிடைக்கவில்லை.

இசைக்கருவி, பாணர்கள், இசை நடனம், நாடகம் என இந்தக் காலகட்டத்தின் நிகழ்த்து கலைகள் பற்றி அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஆடம்பரப் பொருள்களான நகைகள், தந்த வேலைப்பாடுகள், மர வேலைப்பாடுகள், கல் வேலைப்பாடுகள் ஆகியவை மௌரியக் கலையின் விளைவுகள்தான்.

மௌரிய பேரரசில் பல மதங்களும் சாதிகளும் சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்தன. அவர்களுக்குள் நேரடியான மோதல்களோ, கருத்து மாறுபாடுகளோ இருந்ததாக ஒரு குறிப்பும் இல்லை . இக்காலகட்டத்தின் பல பகுதிகளில் இருந்த (பண்டைய தமிழகம் உட்பட) கணிகையர்களுக்கு சமூகப் படிநிலையில் ஒரு சிறப்பான அந்தஸ்து இருந்தது. அவர்களது பங்களிப்பு மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டது.


மௌரியப்பேரரசின் வீழ்ச்சி : • அசோகரின் வாரிசுகள் பலவீனமாகவும், திறமையற்றவர்களாகவும் இருந்தபோது மையப்படுத்தப்பட்ட மௌரிய நிர்வாகம் சமாளிக்க முடியாத நிலைக்கு வந்தது. பலவீனமான மத்திய நிர்வாகம், தொலைதூரப் பகுதிகளைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சுதந்திரமான தன்னாட்சி அரசுகள் உருவாகின.• அசோகரின் மறைவுக்குப்பின், பேரரசு இரண்டாகப் பிரிந்தது. வடமேற்கிலிருந்து இந்தோ - கிரேக்கர், சாகர் மற்றும் குஷாணர் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுக்க இது வழிவகுத்தது.• மௌரியப் பேரரசின் கடைசிப் பேரரசர் பிரிகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கனால் (சுமார் கி.மு.185 இல்) கொல்லப்பட்டார். பின்னர் புஷ்யமித்ர சுங்கன், சுங்கவம்சத்தை நிறுவினார். இச் சுங்கவம்சம் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியிலிருந்தது.


பாடச் சுருக்கம் :

• கண் - சங்கங்கள் காலப்போக்கில் பெரிய மகாஜனபதங்களாகவும், 16 அரசுகளாகவும் மாறின. மகதம் நாளடைவில் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறியது.

• மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர் பிம்பிசாரர். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் அஜாதசத்ரு ஆட்சி செய்தார். மஹாபத்ம நந்தர் நந்தவம்சத்தை உருவாக்கினார்.

• பொ.ஆ.மு. 326 இல் வடமேற்கு இந்தியா மீதான அலெக்சாண்டரின் படையெடுப்பு மேற்குலகின் வணிகத்தைத் திறந்துவிட்டது. அலெக்சாண்டரின் மரணத்திற்குப் பிறகு, சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார்.

• மௌரியப் பேரரசர்களில் குறிப்பிடத்தகுந்த மூவரான சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் மையப்படுத்தப்பட்ட அரசை நிறுவினார்கள். அர்த்த சாஸ்திரம், இண்டிகா ஆகிய நூல்கள் மூலம் மௌரிய நிர்வாக அமைப்பு பற்றித் தெரிய வருகிறது.

• இக்காலகட்டத்தில் வணிகம் பன்மடங்கு வளர்ந்ததால், மௌரியப் பேரரசு இந்திய வரலாற்றில் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்கியது எனலாம்.

• மௌரியப் பேரரசு நாட்டை விரிவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல் ஆகிய பழைய மரபுகளைத் தொடர்ந்தது. அப்போது மேற்கொள்ளப்பட்ட புரட்சிகர மாற்றத்திற்கான முயற்சி யாதெனில், அசோகர் தனது அதிகாரிகளையும், மக்களையும் தம்மத்தைப் பின்பற்றுமாறும், வன்முறையைத் தவிர்த்து ஒழுக்கமான வாழ்க்கை வாழுமாறும் கேட்டுக் கொண்டதாகும்.

• தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, மையத்திலிருந்து நிர்வகிக்கப்பட்ட, ஒரு பெரிய நவீன அரசை உருவாக்கியது. இதன் காரணமாக மௌரியப் பேரரசு இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...