அறிமுகம் : பேரரசர் அசோகர் இறந்ததையும், அதன் விளைவாக மெளரியப் பேரரசின் வீழ்ச்சியையும் தொடர்ந்து வந்த நான்கு நூற்றாண்டுகளில் இந்தியாவின் சில பகுதிகள் மேற்காசியா, மத்திய ஆசியாவைச் சேர்ந்த இந்தோ - கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் படையெடுப்புகளுக்கு உள்ளாயின. இவர்கள் அனைவருமே இந்தியாவின் பெரும் பகுதிகளில் தங்களின் ஆட்சிகளை நிறுவினர். இது, இந்தியச் சமூகத்திற்குள், பண்பாட்டுமயமாக்கம், அந்நிய நாடுகளின் பண்பாடுகள், கலை வடிவங்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளை வலுப்படுத்தியது. மேலும், இது விரிவான வணிகத் தொடர்புகள் மூலம் மத்தியத் தரைக்கடல் பகுதிகள், மத்திய ஆசியா, சீனா ஆகியவற்றோடு இந்தியாவை ஒருங்கிணைத்தது.
6.1 இந்தோ –கிரேக்க உறவுகளின் தொடக்கம் :
அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து (பொ.ஆ.மு. 327-325), பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்தியத் தொடர்பு தொடங்கியது. அவர், தனது படையுடன் மேற்கு நோக்கி திரும்பிச் செல்லத் தொடங்கியபோது, வென்ற பகுதிகளை மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் விட்டுச் சென்றார். சந்திரகுப்த மௌரியரின் தொடக்ககாலப் படையெடுப்புகளில் ஒன்று, இந்த அயல்நாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரானதாகும்.
அலெக்சாண்டரின் திறமைமிக்க தளபதிகளுள் ஒருவரான செலியுகஸ் நிகேடர், பொ.ஆ.மு. 311 க்குப் பிறகு பிரிஜியா (துருக்கி) தொடங்கி சிந்து நதி வரையிலுமான ஒரு மிகப்பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார். பொ.ஆ.மு. 305 வாக்கில், சந்திரகுப்தர் செலியுகளை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இருப்பினும், இது அலெக்சாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடூரமான தோல்வி அல்ல. மாறாக, சந்திரகுப்தர் செலியுகஸுடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்த செலியுகஸ், அதற்குப் பதிலாக 500 போர் யானைகளைப் பெற்றுக்கொண்டார். மேலும் ஒரு திருமண ஒப்பந்தம் பற்றிய குறிப்பும் கிடைக்கின்றது. கிரேக்கர்களுக்கும் மௌரியப் பேரரசருக்கும் இடையே அரச உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் அந்த உடன்படிக்கை வழி செய்தது. மேலும், கிரேக்க நாட்டுத் தூதராக மெகஸ்தனிஸ், மௌரியரின் தலைநகரான பாடலிபுத்திரத்துக்குக் அனுப்பப்பட்டார். இந்தியாவிற்கு வந்த முதல் அயல்நாட்டு தூதுவர் மெகஸ்தனிஸ் ஆவார்.
சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், மேற்காசியாவிலிருந்த கிரேக்க அரசுகளோடு தொடர்ந்து நட்புறவைப் பேணினார். எகிப்தின் இரண்டாவது தாலமி தூதர்களை அனுப்பியது பற்றியும் சிரியாவின் ஆன்டியோகஸுடனான பிந்துசாரரின் கடிதப் போக்குவரத்து குறித்தும் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அசோகரும் அதே மரபின்படி கிரேக்க அரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். அவரது பாறைக் கல்வெட்டு ஆணை (13) ஐந்து யவன அரசர்களைக் குறிப்பிடுகிறது. அவர்கள் சிரியாவின் இரண்டாவது ஆன்டியோகஸ் தியோஸ், எகிப்தின் இரண்டாவது தாலமி பிலடெல்பஸ், மாசிடோனியாவின் ஆன்டிகோனஸ் கொனடாஸ், சைரீனின் மகஸ், கொரிந்தின் அலெக்சாண்டர் என்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது, கிரேக்கருடனான அசோகரின் தொடர்புகள், மேற்காசியாவுக்கு அப்பால் கிரீஸின் மையப் பகுதி வரை விரிவடைந்ததைக் குறிப்பிடுகிறது.
இந்தியா முழுவதும் கிரேக்கர்களைக் குறிப்பிடப்பயன்படுத்தப்பட்ட யவன (அல்லதுயோன) என்ற சொல்லை இப்போது பார்ப்போம். இச்சொல், பாரசீக மொழியில் கிரேக்கர்களைக் குறிக்கும் ‘யயுனா’ என்னும் சொல்லிருந்து பெறப்பட்டதாகும். இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களைக்கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த முறையான தூதுவப் பரிமாற்றமும் கடிதப் போக்குவரத்தும் கூடவே ஆஃப்கானிஸ்தான் வரையிலான மௌரியப் பேரரசின் விரிவாக்கமும் இந்தியாவிலிருந்து மேற்கே எகிப்து வரையில் முறையான வணிகம் நடைபெறுவதற்கு உதவி புரிந்தது. தரை வழி வணிகமானது, வட மேற்கு ஆஃப்கானிஸ்தான் (பாக்ட்ரியா) வழியாக மேற்கொள்ளப்பட்டது; கூடவே ஓரளவு பாரசீக வளைகுடா, செங்கடல் வழியே கடல்வழி வணிகமும் நடைபெற்றது. தந்தம், ஆமை ஓடுகள், முத்துகள், அவுரி முதலிய சாயங்கள், விளாமிச்சை வேர்த் தைலம் அல்லது மிச்சை (கங்கைப் பகுதியைச் சேர்ந்த ஒரு நறுமணத் தைலம்), தாளிசபத்திரி (ஒரு வாசனைப் பொருளாகப் பயன்படும் இலவங்கப்பட்டை இலை) மற்றும் அரிய மரங்கள் உள்ளிட்ட பல்வகையான ஆடம்பரப் பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கம், பாடலிபுத்திரத்திலுள்ள நினைவுச் சின்னங்களிலிருந்து தெரியவருகிறது. மேலும் மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்புகளுக்குப், பாரசீகர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் நிர்வாக அமைப்பு முறைகளே தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இறுதியாக, மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசாட்சிகள் தோன்றியமை, மாறுபட்ட பண்பாட்டின் தாக்கங்களை வலுப்படுத்தியதோடு ஒரு வேறுபட்ட, தனித்தன்மை கொண்ட கலைச்சிந்தனைப் போக்கையும் தோற்றுவித்தது.
இந்தோ - கிரேக்க அரசர்கள் : வடக்கு ஆஃப்கானிஸ்தான் (பாக்ட்ரியா) தொடங்கிசிரியாவரையிலும் விரிந்திருந்த செலுசியப் பேரரசு, பொ.ஆ.மு. 250க்குப் பிறகு வலுவிழந்து சிதையத் தொடங்கியது. பாக்ட்ரியாவின் ஆளுநர் டியோடோடஸ், இரண்டாம் ஆன்டியோகஸை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, பாக்ட்ரியாவின் சுதந்திர அரசரானார். பொ.ஆ.மு. 212இல் இருந்த பாக்டிரிய அரசர், யூதிடெமஸ் ஒரு கிரேக்கராவார். செலுசியப் பேரரசர் மூன்றாம் ஆன்டியோகஸால் இவரை அடிமைப்படுத்த முடியவில்லை. மேலும், மேற்கில் தனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியதாக இருந்ததால் ஆன்டியோகஸ், அவருடன் ஓர் உடன்படிக்கைச் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். எனினும் மூன்றாம் ஆன்டியோகஸ், காபூல் நதி வரையிலும் வந்து, சுபக்சேனா என்றறியப்பட்ட பூர்விக இந்திய அரசரைத் தோற்கடிக்க இயன்றது. இவ்வரசனைக் குறித்து மேலதிக விபரங்கள் தெரியவில்லை. இந்தப் பகுதியிலிருந்த ஒரு சுதந்திரமான அரசர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கொண்டு அசோகர் இறந்த பிறகு மௌரியப் பேரரசின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் வலுவிழந்ததன் ஓர் அடையாளமாக இதைக் கொள்ளலாம்.
டெமிட்ரியஸ் : யூதிடெமஸைத் தொடர்ந்து அவரது மகன் (சுமார் பொ.ஆ.மு. 200இல்) டெமிட்ரியஸ் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார்; மேலும், மற்றொரு டெமிட்ரியஸ், உத்தேசமாக இரண்டாம் டெமிட்ரியஸ்தான் (சுமார் பொ.ஆ.மு.175), அறியப்பட்ட முதல் இந்தோ -கிரேக்க அரசராவார். இந்தோகிரேக்க அரசர்களின் நேர்த்திமிக்க நாணயங்களே அவர்களின் ஆட்சியை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சமாகும். கிரேக்க வெள்ளி நாணயங்களின் பாணியில் வடிக்கப்பட்டிருந்த அவை, ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசரின் உருவத்தையும், பெயரையும் தாங்கி இருந்தன. இவ்வாறாக அந்த நாணயங்கள், பல வகையான தலைக் கவசங்களோடு சித்திரிக்கப்பட்டுள்ள, கூடவே தனித்த முக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசர்களின் உருவத்தை நமக்குக் காட்டுகின்றன. இக்காலகட்டத்தைச் சேர்ந்த நாணயங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டுள்ளன; இவற்றைப் பயன்படுத்தி அரச வம்சாவளியை உறுதிப்படுத்துவது சாத்தியமாயிற்று.
அக்காலகட்ட இந்திய வரலாற்றுக் குறிப்புகள், அயோத்தி (சாகேதம்), அதனினும் கிழக்கேயுள்ள மகதம் ஆகிய பகுதிகள் மீதும் யவனர்கள் படையெடுத்து வந்ததைக் கூறுகின்றன. இருப்பினும், கிரேக்கர்கள் தமக்கிடையிலான உட்பூசல்களால் குழப்பத்திலிருந்ததாகத் தெரிவதால், இந்தப் பகுதிகள் எதையும் அவர்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்திருக்கவில்லை. மாறாக, கடைசி மௌரிய அரசனுக்குப் பிறகு ஆட்சியைக் பறித்துக்கொண்ட சுங்கப் பேரரசர் புஷ்யமித்ரனுக்கு நிலங்களை விட்டுக் கொடுத்தனர். டெமிட்ரியஸ் இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்புகளை நாணயச் சான்றுகளும் நிரூபிக்கின்றன. அவர் வெளியிட்ட சதுர வடிவ இருமொழி நாணயங்களில், முகப்புப் பக்கத்தில் கிரேக்கத்திலும் பின் பக்கத்தில் (வட மேற்குப் பாகிஸ்தானின் உள்ளூர் மொழியான) கரோஷ்டியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
சுமார் பொ.ஆ.மு. 165 வாக்கில் பாக்ட்ரியா பார்த்தியர் மற்றும் சாகர் வசமானது. இதன் பின்னர் மத்திய மற்றும் தெற்கு ஆஃப்கானிஸ்தான் பகுதிகள், வடமேற்கு இந்தியா ஆகிய இடங்களில் யவனர்களின் ஆட்சி தொடர்ந்தது. இருப்பினும் ஆட்சி அதிகாரத்துக்கான மோதல்கள் கிரேக்கர் இடையே நீடித்ததால் குழப்பம் தொடர்ந்தது; மேலும், முப்பதுக்கும் அதிகமான அரசர்களின் பெயர்களை அவர்களது நாணயங்களிலிருந்து அடையாளம் காணமுடிகிறது. அவர்கள் அனைவருமே முழுவுரிமை பெற்ற ஆட்சியாளர்களாகச் சிறிய பகுதிகளைச் சுதந்திரமாக ஆட்சி செய்ததோடு, தங்களின் சொந்த நாணயங்களை வெளியிட்டிருப்பதும் சாத்தியமே.
மினாண்டர் : இந்தோ - கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர் (சுமார் பொ.ஆ.மு. 165/145-130), நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன; மேலும் இது அவரது ஆட்சிப் பரப்பு குறித்த ஒரு நல்ல குறிப்பைத் தருகிறது. அவரது நாணயங்களில் காணப்படுவது போல் அவர் ஒரு மாபெரும், வீரதீரம் பொருந்திய படையெடுப்பாளராகத் தெரியவில்லை என்றபோதிலும் அவர் பாஞ்சாலம் மதுரா அரசர்களோடு சேர்ந்து கங்கைப் பகுதியைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது. அவரைக் கலிங்க (ஒடிஷா) அரசர் காரவேலனால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று ஹதிகும்பா கல்வெட்டு கூறுகின்றது. பாடலிபுத்திரத்தை மினாண்டர் வெற்றிகரமாகத் தாக்கிய போதிலும் தனது வெற்றியை நிலைப்படுத்திக்கொள்ளாமல் பின்வாங்கினார். அவரது நாணயங்களில் அவர் ஓர் “அரச”ராக, இரட்சகராக, மீட்பராக விவரிக்கப்பட்டுள்ளாரே தவிர ஒரு மாபெரும் வெற்றி வீரனாக விவரிக்கப்படவில்லை.
மிலிந்த - பன்ஹா (மிலிந்தவின் வினாக்கள்) எனும் பௌத்தப் பிரதியில்தான் மினாண்டர் ஒரு பெருமைக்குரிய தலைவராக அறியப்படுகிறார். அதில் ஆசிரியர் நாகசேனருடன் பௌத்தம் குறித்த ஒரு கேள்வி - பதில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஒரு பௌத்தராகி, பெளத்தத்தை ஊக்குவித்ததாக நம்பப்படுகிறது.
இந்தோ - கிரேக்க அரசர்களில் நன்கு அறியப்பட்ட மற்றொருவர் ஆன்டியால் சைடஸ் அல்லது ஆன்டியால் கிடாஸ் (சுமார் 110 ஆம் ஆண்டு) குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு இவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம். இவர் பாகபத்ர அரசரின் அரசவைக்குத் தூதராக அனுப்பப்பட்டார். ஹீலியோடோரஸ் அங்கு ஒரு தூணை நிறுவினார். தூணின் தலைப் பகுதி கருட உருவத்தை கொண்டது. கருட - துவஜ என்று அழைக்கப்பட்ட, வைணவக் கடவுள் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்யும் விதமாக இத்தூண் அமைக்கப்பட்டது. ஹீலியோடோரஸ் வைணவராக மாறியதாய் தெரிகிறது. (மத்திய பிரதேசம், விதிஷாவில் திறந்தவெளி மைதானத்தின் நடுவே அந்தத் தூண் காணப்படுகிறது).
கிரேக்கருடனான இந்தியத் தொடர்பு வெறும் இந்தோ - கிரேக்க அரசர்களுடனானது மட்டுமல்ல. மாறாக, துணைக்கண்டம் முழுவதும் கிரேக்கர் பிரபலமாகி இருந்தனர். அவர்களது இருப்பு குறித்த தகவல்கள் துணைக்கண்டம் முழுவதும் பதிவாகியுள்ளன. கிரேக்க வணிகர்கள், மாலுமிகள், மற்றும் பிறர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். அதனால் கிரேக்கர்களுடனான தொடர்பு தொடர்ந்தது.
6.2 சாகர், பார்த்தியர், குஷாணர் :
வடமேற்கு இந்தியாவிலிருந்த இந்தோ-கிரேக்க அரசுகள், சாகர் (சித்தியன்கள்), பார்த்தியர் (பஹ்லவிகள்), குஷாணர் (சீனத்தில் யுயி -சி அல்லது யுயசி (yuehchi or yuezhi) இனக்குழுக்கள்) என்றறியப்பட்ட பல்வேறு மத்திய ஆசிய நாடோடி இனக்குழுக்களால் அகற்றப்பட்டன. அவர்கள், கிரேக்கர்களின் பழக்கத்தைப் பின்பற்றி தங்களின் பெயர்களையும் பட்டங்களையும் (பெரும்பாலும் “அரசர்களின் அரசன்") கொண்ட நாணயங்களைப் பெருமளவில் வெளியிட்டனர். இருந்தபோதிலும் நமது வரலாற்றில் இது ஒரு குழப்பம் மிகுந்த காலமாகும். இந்தியாவுக்கு வந்து ஆட்சி அமைத்த பல்வேறு இனக்குழுக்களின் அரச பரம்பரையின் வம்சாவளிகளை கண்டறிவது ஒரு சவாலான பணியாகும்.
முதலில் எழுகின்ற கேள்வி யாதெனில், நாடோடிப் பழங்குடியினராக இருந்தவர்கள் ஏன் எப்படி போர் செய்பவர்களாக, கைப்பற்றுபவர்களாக மாறினார்கள். மத்திய ஆசியாவில் நடைபெற்ற சிக்கலான, அடுத்தடுத்து நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் குடிபெயர்வுகளின் விளைவாக இப்பழங்குடியினரின் இந்திய வருகை நிகழ்ந்தது. மத்திய ஆசியாவின் கிழக்குப் பகுதியில், நாடோடி இனத்தவரின் சூறையாடல்களைத் தடுக்கவும், சூறையாடல்களிலிருந்து தங்கள் கிராமங்களையும் வேளாண்மையையும் காத்துக்கொள்ளவும் சீனர்கள் பெருஞ் சுவரைக் கட்டினர். இதனால் யுயி - சி எனும் பழங்குடி மக்கள் மேற்கு நோக்கித் தள்ளப்பட்டனர். அப்பகுதியில் வசித்த சாகர்களைக் கிழக்கு ஈரானுக்குத் தள்ளினர். அங்கு செலுசியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தியர் ஆட்சி அமைத்திருந்தனர்.
சாகர்கள் : கிழக்கு ஈரானிலிருந்து பார்த்திய ஆட்சியாளர் மித்ரடேட்ஸால் வெளியே தள்ளப்பட்ட சாகர்கள், பிறகு வடமேற்கு இந்தியாவை நோக்கித் திரும்பி, இறுதியில் சிந்துவெளிக்கும் சௌராஷ்டிரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் குடியமர்ந்தனர். இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் மௌஸ் அல்லது மொ/மொகா (தோராயமாக, பொ.ஆ.மு.80) ஆவார். காந்தாரத்தைக் கைப்பற்றிய அவர், இந்தோ - கிரேக்க அரசுகளுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுத்தினார் என்றாலும் அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அஸிதான் இந்தோ - கிரேக்க அரசாட்சிகளின் கடைசி மிச்சங்களை இறுதியாக அழித்து, கிழக்கே மதுரா வரையிலும் சாகர்களின் ஆட்சியை விரிவுபடுத்தினார்.
இந்தியாவில் சாகர்கள், இந்து சமூகத்துக்குள் இரண்டறக் கலந்துவிட்டனர். இந்துப் பெயர்களையும் மத நம்பிக்கைகளையும் கைக்கொள்ளத் தொடங்கினர். அவர்களது நாணயங்களின் ஒரு பக்கத்தில் இந்துக் கடவுளர்களின் உருவம் பொறிக்கப்பட்டது. சாகர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க சத்ரப்களை மாகாண ஆளுநர்களாக நியமித்தனர். சத்ரபாக்கள் பலரும் தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் எனப் பட்டம் சூடிக்கொண்டதோடு, நடைமுறையில் சுதந்திர ஆட்சியாளர்களாயினர்.
புகழ்பெற்ற சாக சத்ரப்களில் ஒருவர்தான் ருத்ரதாமன் (பொ.ஆ. 130 முதல் 150). புகழ்பெற்ற ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் (குஜராத்) அவரது வெற்றிகள் போற்றப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின்படி, சாதவாகனர்களையும் கூட அவர் போரில் தோற்கடித்துள்ளார். இவர் காலத்தில் சாகர்கள் இந்திய சமூகத்தோடு இணைந்து கலந்துவிடும் செயல்முறையானது முழுமையடைந்து விட்டதை இவரது பெயரே சுட்டிக் காட்டுகிறது.
குஷாணர் : காபூலை முதலில் கைப்பற்றிய (சுமார் பொ.ஆ. 43) பார்த்திய கோண்டோபெர்னெஸ் என்பவரால் சாகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். காபூல் பள்ளத்தாக்கைக் குஷாணரிடம் அவர் இழந்தார் என்றாலும் இந்தியாவில் சாகர்களை எதிர்த்து அதிக வெற்றி பெற்றது அவர்தான். அவரது ஆட்சி குறித்த பதிவுகள் பெஷாவர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பார்த்தியருக்கு எதிராக தங்களுக்கு உதவுமாறு சாகர்கள், குஷாணர்களை (யுயி - சி) அணுகினர். ஆப்கானிஸ்தானை வென்றடக்கிய முதல் குஷாண அரசர், குஜிலா காட்பிசெஸ் ஆவார். அவரைத் தொடர்ந்து வந்தவர் விமா காட்பிசெஸ். இவ்விரு அரசர்களும் குஷான ஆட்சிப் பகுதியைக் காந்தாரத்துக்கும் பஞ்சாபுக்கும் கிழக்கே மதுரா வரையில் கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் விரிவுபடுத்தினர்.
கனிஷ்கர் : குஷாண அரசர்களில் நன்கு அறியப்பட்டவர் கனிஷ்கர் ஆவார். பொ.ஆ. 78 தொடங்கி பொ.ஆ. 101 அல்லது 102 வரையிலும் ஆட்சி புரிந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய நாள்காட்டியில் சக சகாப்தத்தின் தொடக்கமாக பொ.ஆ. 78 கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கனிஷ்கரின் காலம் பற்றி வரலாற்றாளர்கள் மாறுபடுவதோடு அவரது ஆட்சி, பொ.ஆ. 78க்கும் பொ.ஆ. 144க்கும் இடையில் எப்போதோ தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆர்வமிக்க ஒரு பௌத்த ஆதரவாளரான கனிஷ்கர், நான்காம் பௌத்த மகாசங்கத்தை கூட்டிய புரவலர் ஆவார். (மூன்றாம் மகாசங்கம் அசோகரின் ஆட்சி காலத்தில் பாடலிபுத்திரத்தில் நடந்தது.) இக்காலத்தில் மஹாயான பெளத்தம் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவாகியிருந்தது. பெளத்தத்தைப் போதிப்பதற்காகச் சீனாவுக்கு அனுப்பப்பட்ட மதப் பரப்புநர்களைக் கனிஷ்கர் ஆதரித்தார்.
குஷாணரின் நாணயங்கள் உயர்ந்த தரமுள்ளவை என்பதோடு ரோமானிய நாணயங்களின் எடைத் தரங்களுக்கு ஒத்திருந்தன. அவை குஷாண ஆட்சியாளர்களை “அரசர்களின் அரசர்', “ஸீசர்', “அகிலத்தை ஆள்பவன்” என்பன போன்ற பிற பட்டப் பெயர்களால் குறிப்பிடுகின்றன. அதே நேரம், இந்த நாணயங்களில் அரசர்களின் உண்மையான பெயர்கள் அதிகமாக இடம் பெறவில்லை. எனவே குஷாண அரசர்கள் குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் மிகவும் உறுதியற்றவனவாக உள்ளன. கனிஷ்கரின் நாணயங்களும் கூடவே மதுரா அருகே காணப்படும் அவரது சிலையும் அவர் மத்திய ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதற்குச் சான்று கூறும் விதத்தில், வார் பூட்டிய அங்கி, நீண்டமேலங்கி, காலணிகளும் அணிந்தவராகக் காணப்படுகிறார்.
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட, 1979ஆம் ஆண்டு நிறைவு பெற்ற, காரகோரம் நெடுஞ்சாலைத் திட்டம், தொல்லியலாளர்களுக்கும் வரலாற்றாளர்களுக்கும் பெரும் பலன்களை அளித்துள்ளது. ஹுஸ்னா பாறைக் கல்வெட்டு முதல் இரண்டு காட்பிசெசுகள் குறித்து குறிப்பிடுவதுடன், குஷாண தேவபுத்ர (கடவுள் மகன்), மஹாராஜா என்று கனிஷ்கர் குறித்தும் சுட்டப்படுகிறது. கனிஷ்கரின் பேரரசு மத்திய ஆசியா முதல் கிழக்கு இந்தியா வரை பரவி,
விரிந்திருந்ததை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது. அவர், மகதத்தையும் காஷ்மீரையும் கூடவே சின்கியாங்கிலுள்ள கோடனையும் கைப்பற்றியதாக பௌத்த சான்றுகள் பதிவுசெய்துள்ளன.
காரகோரம் நெடுஞ்சாலை நெடுகிலும் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருள்கள், பௌத்தத்தைப் பரப்புகிற தங்களின் பணிக்காகப் பௌத்தத் துறவிகள் சீனாவுக்குச் சென்றது இச்சாலையில்தான் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. பௌத்த மதத் துறவிகளைப் பின்பற்றி வணிகர்களும் இச்சாலை வழியாகச் சென்றுள்ளனர். இதனால், சீனாவிலிருந்து பட்டு, மேற்காசிய நாடுகளிலிருந்து குதிரைகள் ஆகியனவற்றை இந்தியா இறக்குமதி செய்ய இச்சாலை ஒரு முக்கிய வணிக வழியாக மாறியது. மேற்கு நாடுகளின் வணிகர்கள் மத்திய ஆசியாவுக்கு அப்பால் மேலும் கிழக்கே செல்ல விரும்பவில்லை. இந்திய வணிகர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய ஆசியாவின் பல்வேறு நகரங்களில் தங்களை நிறுவிக்கொண்டு, சீனாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையேயான ஆடம்பரப் பொருள் வணிகத்தில் இடைத்தரகர் ஆவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.
பெரும்பாலும் ‘ஷ்க’ என்று முடிகிற பெயர்களைக் கொண்ட (இவர்களுள் ஹுவிஷ்கா, வசிஷ்கா, கூடவே பிந்தைய கனிஷ்கர்களும் ஒரு வாசுதேவர் உள்ளிட்ட) குஷாண அரசர்கள் குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சி செய்தனர் என்றாலும் அவர்கள் குறித்து அதிகம் தெரியவில்லை. பேரரசு, சிதையத் தொடங்கியது என்பது தெளிவு என்பதோடு சத்ரப்கள் (மாகாணங்களை ஆள்வதற்கு சத்ரப்களை நியமிக்கும் வழக்கத்தைக் குஷாணரும் தொடர்ந்தனர்), பல்வேறு மாகாணத் தலைநகரங்களில் தங்களைச் சுதந்திரமான ஆட்சியாளர்களாக அமைத்துக்கொள்ள முடிந்தது.
கலையும் இலக்கியமும் : குஷாணர் காலத்தில் நிலவிய பெருமளவிலான படைப்பாற்றலின் காரணமாகக் கலையும் இலக்கியமும் செழித்திருந்தன. அரசர்கள் நல்கிய ஆதரவும் இதற்கு ஓரளவிற்குக் காரணமாகும். மஹாயான பௌத்த மத வளர்ச்சி போன்றவை பிற காரணங்களாகும். மஹாயான பௌத்த மதம் புத்தரை மனித வடிவில் சித்தரிப்பதை அனுமதித்தது. சிலை வடிப்புக் கலையில் கிரேக்க தாக்கத்தின் காரணமாக இந்திய - கிரேக்கக் கூறுகள் ஒன்றிணைந்து புதிய முறை உருவானது. அது பொதுவாகக் காந்தாரக் கலை என்றழைக்கப்படுகிறது. இது இந்தோகிரேக்க பாணியிலான சிற்பங்களும் கலையும் தோன்றுவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக, தட்சசீலத்திலும் வட-மேற்குப் பகுதிகளிலும் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள், கிரேக்க மரபால் ஊக்கம் பெற்று, கண்ணியமான ஆடைகளில், தேவ தூதர்களாலும் இலைகளாலும் சூழப்பட்டுள்ளதாக அவரைக் காட்டுகின்றன. எனினும், மதுரா அருகே செம்மணற்கல்லில் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ள பல சிற்பங்களையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அஜந்தா குகைகள் முதல் மும்பையில் கன்ஹேரி குகைகள் வரை பௌத்தர்கள் மேற்கிந்தியாவிலுள்ள குன்றுகளில் பாறைகளைக் குடைந்து குகைகளை அமைத்தனர். விகாரங்களையும் சைத்தியங்களையும் கொண்டிருந்த அவை பௌத்த மத மையங்களாக செயல்பட்டன. இவ்வாறான குகைகள் மஹாயான மரபின் ஒரு பகுதியாக இந்தக் குகைகளில் புத்தரின் பெரிய அளவு சிலைகள் செதுக்கப்பட்டன. மேலும் பிந்தைய நூற்றாண்டுகளில் அவை, அஜந்தா குகைகளில் காணப்படுவதைப் போல அசாதாரண அழகுள்ள சுவர்ச் சித்திரங்களால் மேலும் ஒப்பனை செய்யப்பட்டன.
காந்தாரக் கலை : பண்பாட்டுத் தாக்கங்கள் சங்கமிக்குமிடத்தில் அமைந்துள்ள காந்தாரம் கிரேக்க மற்றும் ரோமானியப் பண்பாடுகளின் செல்வாக்குக்கும் உட்பட்டது. பொ.ஆ. முதல் நூற்றாண்டில் காந்தாரக் கலை வடிவங்கள் வளர்ச்சியடைந்தன. குஷாணப் பேரரசுக் காலத்தில், ரோமுடனான அதன் தொடர்புகளினால் ரோமானியக் கலை நுட்பங்கள் இந்தியக் கலை நுட்பங்களோடு கலந்து, வட மேற்கு இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டன. ஆன்ம நிலையில் - கண்கள் பாதி மூடிய நிலையில் - தியானத்திலிருக்கிற புத்தரைச் சித்தரித்ததற்காகக் காந்தாரக் கலை புகழ்பெற்றது.
பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்தத் தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தார். அஸ்வகோஷர், அவரது புத்த சரிதம் நூலுக்காகப் புகழ்பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார். மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்தக்காலத்தைச் சேர்ந்தவராவார். பாசன் எழுதிய நாடகங்கள் சென்ற நூற்றாண்டில்தான் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்து மத நூல்களில் மனுஸ்மிருதி, வாத்சயாயனரின் காமசூத்ரம், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் இதே பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டில்தான் இறுதி வடிவம் பெற்றன என்பதையும் அறிகிறோம்.
6.3 தமிழக அரசாட்சிகள் :
நாட்டின் வட பகுதியில் நிகழ்ந்துவந்த அரசியல் மாறுதல்களால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ . ஆ. முதல் நூற்றாண்டு வாக்கில், நவீன ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தக்காணப் பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது. எனினும் இது, மௌரியர்களின் மையப்படுத்தப்பட்ட பேரரசைப் போல இருக்கவில்லை. அதோடு சாதவாகனர்களின் மாகாண ஆட்சியாளர்கள் கணிசமான அளவுக்குத் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தினர்.
வடக்கே பேரரசுகள் விரிந்து பரந்த பேரரசுகள் தழைத்தோங்கியதற்கு மாறாக, தமிழ்ப் பகுதியின் அரசியல் நிலப்பரப்பு சிறு சிற்றரசுகளாகத் துண்டுபட்டிருந்தது. தமிழ்ப் பகுதி, மதுரையைத் தங்களின் தலைநகராகக் கொண்டு பாண்டியர், உறையூரைத் (தற்போதைய திருச்சியின் ஒருபுற நகர்) தங்களின் தலைநகராகக் கொண்டு சோழர், வஞ்சியிலிருந்து (நவீன கால கரூர் நகரம்) சேரர் என மூவேந்தர்களால் ஆளப்பட்டது. பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மௌரிய அரசர்கள் தமிழ் மூவேந்தர்களை அறிந்திருந்தனர் என்பது நாமறிந்ததே. மேலும் அசோகரின் இரண்டாவது பாறைக் கல்வெட்டாணை அவர்களைத் தனது பேரரசின் எல்லையிலிருந்த அரசுகள் என்று குறிப்பிடுகிறது. மேலும், அவற்றுடன் சிறிய பகுதிகளை ஆட்சி செய்த பல போர்ப் பிரபுக்களும் சிற்றரசர்களும் (இவர்கள் வேளிர் எனக் குறிப்பிடப்படுவோர்) இருந்தனர்.
பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியைச் சேர்ந்த, சங்க இலக்கியம் என்று அறியப்படுகிற தமிழ் இலக்கியங்களின் தொகுப்பிலிருந்து தமிழ்ப் பகுதி குறித்த விரிவான தகவல்களை பெறமுடிகிறது. இவற்றுடன் ஓரளவு பிற்காலத்தில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழ்ப் பகுதியுடன் மேற்கொள்ளப்பட்ட மிக பெருமளவிலான வணிகம் ரோமானிய, கிரேக்க வரலாற்றாளர்களிடத்திலும் புவியியலாளர்களிடத்திலும் ஒரு பெரும் ஆர்வத்தைத் தூண்டியது; மேலும் அவர்களின் விவரங்கள், தமிழ் சான்றுகளில் விடுபட்டுள்ள, குறிப்பாக வணிகம் தொடர்பான தகவல்களை நிறைவு செய்வதாக அமைகிறது. பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்று ஆவணமாக ”எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ்” (Periplus of the Erythrean Sea) (Periplus Maris Erythreai) இந்தியக் கடற்கரையிலிருந்த துறைமுகங்கள், அங்கு நிகழ்ந்த வணிகம் ஆகிய தகவல்களை வழங்கும் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட சான்றாகும். தொல்லியல் கண்டுபிடிப்புகள் இந்தச் சான்றுகள அனைத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை உறுதிசெய்கின்றன.
பன்னாட்டு வணிகத்தின் வரையறைகள் : பொது ஆண்டின் தொடக்க வாக்கில் இரண்டு முக்கியமான வளர்ச்சிகள், ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமான வணிகத்தின் வரையறைகளை மாற்றியமைத்தது. பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில், கிரேக்க அரசுகளை அகற்றிவிட்டு மத்திய தரைக் கடல் உலகின் வல்லரசாக ரோம் மேலெழுந்தது. மேலும் ரோமானியக் குடியரசு, பொ.ஆ.மு. 27இல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று. அநேகமாக, ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவித்திருந்த மிகப் பெரும் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரோம்தான் உலகிலேயே ஆகப் பெரியதும் செல்வச் செழிப்பு மிக்கதுமான நகரமாகும். ரோமின் செல்வச் செழிப்பு, இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பொருள்களின், குறிப்பாக தமிழ் நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் துணி வகைகளின், தேவையை அங்கு பெருமளவிற்கு அதிகரித்து ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
பொ.ஆ. முதல் நூற்றாண்டில், எகிப்தியக் கடலோடி ஹிப்பாலஸ் என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டறிந்தார். இது இரண்டாவது வளர்ச்சியாகும். அது வரை, இந்தியாவுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடையிலான கடல் வணிகம், அரபியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும், ரோமாபுரிக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட இலவங்கப்பட்டை போன்ற பொருள்களின் உற்பத்தி மையங்கள் தென்னிந்தியாவில் எங்கிருந்தன என்பதைப் பற்றிய அறிவை அரபியர்களே ஏகபோகமாக கொண்டிருந்தனர். ஆனால் நேரடி கடல் வழி குறித்த தகவல் அனைவருக்கும் தெரிந்த செய்தியாக ஆன போது, ரோமானியக் கப்பல்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு நேரடியாகப் பயணிக்கத் தொடங்கின. இதனால் அவர்கள், கடற்கொள்ளையர்களின் பயம் நிறைந்த, பயண வழிகளைத் தவிர்க்க முடிந்தது. மேலும் தரை வழித் தடமும் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது. ஏனெனில், தரை வழித் தடத்தில் வணிகர்கள், இரானில் பார்த்தியரின் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு இருந்தது. அதிகரித்த வண்ணமிருந்த ரோமானியரின் தேவைகளும், இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பும் இணைந்ததின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்ந்தது. ஆண்டொன்றுக்கு இருபது கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஒரு கப்பல் என்பதாக அதிகரித்தது.
6.4 தமிழகத்துக்கும் ரோமுக்கும் இடையிலான வணிகம் :
ரோம் ஒரு குடியரசாக இருந்தபோதே ரோமுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான வணிகம் செழித்திருந்தது. அக்காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயங்களும் கலைப் பொருள்களும், “இந்தோ - ரோமானிய வணிக நிலையம்” என்று கூறப்பட்டு வந்த, புதுச்சேரிக்கு அருகேயுள்ள அரிக்கமேட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பொது ஆண்டு முதல் நூற்றாண்டுக்கு முன்னர் ரோமானியக் கப்பல்கள், இந்தியாவின் மேற்குக் கரையைத் தாண்டிக் குமரி முனையைச் சுற்றிக்கொண்டு பயணப்பட முயலவில்லை. எனவே, மேற்குக் கரையிலிருந்த துறைமுகங்களே இவ்வணிகத்தில் ஈடுபட்ட முக்கியமான துறைமுகங்களாக இருந்தன. மேற்குக் கரையிலிருந்து , ரோமானிய வணிகர்கள் நிலவழியே பாலக்காடு கணவாயைக் கடந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு வந்தனர். கொடுமணல் (ஈரோடு), படியூர் (திருப்பூர்), வாணியம்பாடி (வேலூர்) ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த ஒரு நவரத்தினக் கல்லான கோமேதகம் கிடைக்கிற சுரங்கங்களிருந்தன. மேலும், ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையில், உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. (உருக்காலை மற்றும் உருக்கு எச்சங்கள் இங்கே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.) இதனால்தான் முற்பட்ட காலத்திய ரோமானிய நாணயங்கள், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் கிடைப்பதைக் காண்கிறோம்.
பொ.ஆ. முதல் நூற்றாண்டின் முடிவில், ரோமானியக் கப்பல்கள் தமிழகத்தின் கோரமண்டல் [சோழ மண்டலம் என்பதன் திரிபு] எனப்படும் கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களுக்குப் பயணிக்கத் தொடங்கின. மேலும் இந்தத் துறைமுகங்களில் பலவும் பெரிப்பிளஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த முக்கியத் துறைமுகங்கள் நவுரா (கண்ணனூர்), தொண்டி (பொன்னானி) ஆகியனவாகும். இவை சேர மன்னர்களால் ஆளப்பட்ட தமிழ் நிலப்பரப்பின் வடக்கு எல்லையில் அமைந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. முசிறி அல்லது முசிரிஸ் என்பது மேலும் தெற்கே அமைந்திருந்த ஒரு முக்கியத் துறைமுகமாகும். இது, பாரம்பரியமாகக் கொடுங்களூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மையில் முசிறியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு, இத்துறைமுகம், ஒரு சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள பட்டணம் என்னும் ஊரில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. அநேகமாக மேற்குக் கடற்கரையில் இருந்த துறைமுகங்களில் மிகவும் பரபரப்பான வணிக மையம் முசிறியாகும். முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்கும் அலெக்சாண்ட்ரியாவைச் சேர்ந்த ஒரு வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. கோரைப்புல் தாளில் எழுதப்பட்ட அந்த ஒப்பந்தம், தனி வணிகர்களாலும்கூடப் பெருமளவிலான சரக்குகள் கப்பலில் கொண்டு செல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறது. சங்கப் பாடல்களின்படி முசிறி நகரம் இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக இருந்துள்ளது. நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றி வந்த படகுகள், திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன; இது, அடிப்படையான நுகர்வுப் பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதைச் சுட்டுகிறது. அதே நேரத்தில், சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்குப் பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு, பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்தியாவிலிருந்து ரோமுக்குச் சென்ற கப்பல்கள், மிளகு, அதிக அளவில் முத்துக்கள், தந்தம், பட்டுத் துணி, செல்வமிக்க ரோமானியர்களிடையே தனிப் பயன்பாட்டுக்கென மிகுதியாக தேவைப்பட்ட ஒருவகை நறுமணத் தைலமான கங்கைப் பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட விளாமிச்சை வேர்த் தைலம், இலவங்கப் பட்டை மர இலையான தாளிசபத்திரி எனும் நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு ஆகியவற்றைச் சுமந்து சென்றன. ரோமானியக் கப்பல்கள் சோழமண்டலக் கடற்கரையுடன் வணிகத்தைத் தொடங்கியதும், இந்தப் பகுதியின் நேர்த்தியான பருத்தித் துணிகளும்கூட முக்கியமான ஏற்றுமதிப் பண்டமாயின.ரோமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கியமான பொருள்கள்: நாணயங்கள், புஷ்பராகக் கல், அஞ்சனம், பவழம், கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் ஆகியனவாகும். தமிழ்ப் பகுதியிலிருந்து ஏற்றுமதியான பொருள்களின் மதிப்பு, ரோமிலிருந்து இறக்குமதியான பொருள்களின் மதிப்பைக் காட்டிலும் மிக அதிகம் என்பதோடு, பொ.ஆ. முதல் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், பேரரசர் டைபீரியஸ் ஆட்சியின் போது வணிகத்தின் அளவு உச்சத்தை எட்டியது. அதிகரித்துவந்த வணிகச் சமமின்மையை நாணயங்களையும் வெள்ளியையும் ஏற்றுமதி செய்வதன் மூலம் சமப்படுத்துவது கவலைக்குரிய ஒரு விசயமாயிற்று. ஒவ்வோராண்டும் இந்தியாவுடனான வணிகத்தால் ரோமாபுரிக்கு 55 மில்லியன் செஸ்டர் செஸ் (பண்டைய ரோமானியப் பணம்) இழப்பு ஏற்பட்டது என்றொரு புகார் எழுந்தது. இறுதியாக, பேரரசர் வெஸ்பேசியன் ரோம் நாட்டுச் செல்வ வகுப்பினரின் ஆடம்பரப் பொருள் நுகர்வைத் தடை செய்து சட்டமியற்றினார்; அதையடுத்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்புடைய பண்டங்களாக பருத்தித் துணிகள், மிளகு ஆகியவை மட்டுமே என்றாயிற்று.
பாரம்பரியத் தரை வழிப்பாதையான பட்டுப் பாதை வழி வணிகம் மேற்கொள்வது ஆபத்தானதாக ஆகிவிட்டதால் வணிகப் பாணியில் மேலும் ஒரு மாறுதல் தோன்றியது. சீனாவிலிருந்து பட்டுத் துணியும் நூலும் கடல் வழியே சோழமண்டல துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவை மீண்டும் கப்பல்களில் ஏற்றப்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டன. தென் கிழக்கு ஆசிய நாடுகள், தூர கிழக்கு ஆசிய நாடுகளோடான தமிழ்ப் பகுதியின் வணிக உறவுகள் குறித்து கிடைக்கும் தகவல்கள் மிகச் சொற்பமே. இருப்பினும் ஆமை ஓடுகள் (ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியமான பொருள்), இந்தியப் பெருங்கடலில் மலேயாவுக்கு அருகிலுள்ள தீவுகளிலிருந்து பெறப்பட்டது. அதே நேரத்தில், சீனத்திலிருந்து பட்டு இறக்குமதியானது. ஏறக்குறைய தமிழ் நாட்டின் நீட்சியாகத் தமிழ் இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் ஜாவா மற்றும் இலங்கையுடன் நிரந்தரத் தொடர்பும் இருந்தது. அநேகமாக பௌத்த மதம் இணைப்புச் சங்கிலியாக இருந்து, இந்த நாடுகளை இணைத்திருக்க வேண்டும்.
அயல்நாட்டு வணிகர்கள் (யவனர்) : கடல் கடந்த வணிகம், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் விரிவாக்கம் அயல்நாடுகளின் வணிகர்களையும் கடலோடிகளையும் தமிழ்ப் பகுதிக்கு அழைத்து வந்தது. பருவக் காற்றுகளின் காலமுறை இயல்பு, மற்றும் நடப்பிலிருந்த தொழில் நுட்பங்களின் இயல்புகள், நீண்ட கடற்பயணங்கள், ஆகியவை வணிகம் செய்யச் சென்ற நாடுகளில் நெடுநாள்கள் தங்கியிருப்பதை அவசியப்படுத்தின. இந்த அயல்நாட்டு வணிகர்களின் இருப்பைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட விதத்தில் சுவாரஸ்யமான செய்திகளைக் காண்கிறோம். சோழமண்டலக் கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம் புகார் (பூம்புகார்) ஆகும். இங்கே யவன வணிகர்கள், துறைமுகப் பகுதியில் குறிப்பாக அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்தனர். அவர்கள், சுதந்திரமாக வணிகம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். தமிழக மக்களால் இவர்கள் வெளியாட்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், கடினமாக ஒலிக்கின்ற ஒருமொழியைப் பேசுபவர்களாகவும் கருதப்பட்டனர். இதனால் அவர்களுடன் தமிழ்ப்பகுதி மக்கள் தயக்கத்துடன் பழகினர்.
வணிகர்களுடன் பிற யவனர்களும் வந்தனர். மதுரையிலிருந்த கோட்டை, பெரிய வாள்கள் தாங்கிய யவனர்களால் பாதுகாக்கப்பட்டது. யவன உலோகப் பணியாளர்களையும் மரவேலை செய்பவர்களையும் பற்றிய குறிப்புகளும் உள்ளன; அநேகமாக, அவர்களது கண்கள் சாம்பல் அல்லது நீல நிறத்தில் இருந்ததால் வன்கண் யவனர் எனச் சுட்டப்பட்டுள்ளனர். இச்சொல், கிழக்கத்திய மத்திய தரைக் கடல் பகுதிகளிலிருந்து வருகை தந்த அனைவரையும் குறிக்கிற ஒரு பொதுப் பெயராகிப்போனது. யவனர் என்ற சொல்லுக்கு கிரேக்கர்கள் என்ற பொருள் இருப்பதினால் மட்டுமே இவர்கள் அனைவரும் கிரேக்கர்கள் என முடிவு செய்ய இயலாது.
வணிகமும் பொருளாதாரமும்: விரிவான விவரங்கள் : இக்காலகட்டத்தில் வணிகம் மிகப் பெருமளவில் விரிவடைந்தது என்பது உண்மை . இத்தகைய சாதனையானது, பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களின் காரணமாகவே எட்டப்பட்டிருக்க வேண்டும். கோமேதகம் போன்ற வெட்டியெடுக்கப்பட்ட நவரத்தினக் கற்கள் போன்ற முதல்நிலை உற்பத்திப் பொருள்கள் விஷயத்தில் கூட, அதிகரித்த தேவை சுரங்கத்தில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை செய்வதையும், அதிக கருவிகளையும் அதிக மூலதனத்தையும் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். துணிகளைப் பொறுத்தமட்டில், நெசவுச் செயல்பாட்டிலும் நெசவுக்கான நூலைத் தயாரிக்கிற நூற்பு போன்ற துணைச் செயல்பாடுகளிலும், மேலும் ஒருக்கால் கச்சாப்பொருளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காக அதிக பருத்தியை விளைவிப்பதிலும் ஒரு கணிசமான பெருக்கம் இருந்திருக்கவேண்டும். வளர்ந்து வருகிற வணிகம் இவ்வாறாக ஒரு கணிசமான அளவில் பொருளாதார விரிவாக்கத்துக்கு இட்டுச்சென்றிருக்கும்.
வணிகம் வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி முக்கியமானோராயும் ஆயினர். பெரு நகரங்களின் அங்காடிகளில் உணவு தானியங்கள், துணி, தங்கம், நகைகள் போன்றவற்றில் குறிப்பான ஒரு பொருளை மட்டுமே வணிகம் செய்வோர் இருந்தனர். வணிகர்கள் கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்டனர். அதைப் போலவே வெளிநாடுகளோடு தரைவழியாகவும் வணிகம் செய்தனர். நிறுவனமயப்பட்ட ஏற்பாடுகளால் வணிகச் சுற்றுகள் மேலும் சிறப்புத்தன்மை கொண்டவை ஆயின. இவ்வளர்ச்சி விரிவடைந்துவரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
வணிகத்தில் பணம் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டது என்ற மிக முக்கியமான ஒரு வினா எழுகிறது. இதற்கு விடையளிப்பது கடினம். நவீனத்துக்கு முந்தைய அனைத்துப் பொருளாதாரங்களிலும் பரிமாற்றத்துக்கு ஒரு முக்கியமான ஊடகமாகப் பண்டமாற்றுமுறை விளங்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த உப்பு வணிகர்கள், கிழக்கு உட்புறக் கடற்கரைப் பகுதிகளிலிருந்துத் தங்களின் வண்டிகளில் உப்பை ஏற்றிக்கொண்டு, குழுக்களாகச் சேர்ந்து சென்றனர். அவர்கள் தங்களின் உப்பைப் பணத்துக்கு விற்காமல் ஏனைய பண்டங்களுக்காகவும் இதரத் தேவைகளுக்காகவும் பண்டமாற்று செய்து கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். இருப்பினும், தரை வழி, கடல் வழி வணிகம் ஆகியவற்றின் அளவும், கூடவே நகர அங்காடிகள் குறித்து இலக்கியத்திலுள்ள சித்தரிப்புகளில் பணம்தான் பரிமாற்றத்துக்கான முக்கிய ஊடகமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன.
இந்த அனுமானத்தைப் பல்வேறு மையங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கிற ரோமானிய நாணயங்கள் மெய்ப்பிக்கின்றன. சுழற்சியில் உள்ள பணஅளவை அதிகரிப்பதற்காக உள் நாட்டிலேயே போலி ரோமானிய நாணயங்களும் கூட அச்சடிக்கப்பட்டன. அமராவதி ஆற்றுப் படுகையில் பெரிய அளவுகளில் சேர நாணயங்களும் கூடக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் மிகப் பெரிய அளவுகளில் இந்தோ - கிரேக்க , குஷாண நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை, பணமயமாக்கத்தின் அளவு குறித்து அதே போன்ற ஒரு முடிவுக்கே இட்டுச்செல்லும். இவையனைத்தும், பண்டைய காலத்தில் பரிமாற்ற ஊடகமாகப் பணம், கணிசமான அளவுக்குப் பயன்பட்டது என்ற ஊகத்துக்கே இட்டுச்செல்லும்.
முடிவு : இவ்வியலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூற்றாண்டுகள் அரசியல் உறுதித்தன்மை நிலவிய காலகட்டமல்ல. கனிஷ்கர் தவிர, வடக்கே படையெடுத்து வந்தவர்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து வலுவான பேரரசுகளை நிறுவவில்லை. கனிஷ்கரும்கூட ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலம் மட்டுமே ஆட்சிபுரிந்தார். மேலும் அவரது மரணத்துக்குப் பிறகு அவரது பேரரசு மெதுவாக வீழ்ச்சியுற்றது. தமிழ்ப் பகுதி, ஒரு பேரரசு உருவாவதற்குத் தேவைப்படும் ஒன்றுபடுத்துகிற சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு ஒப்பீட்டளவில் சிறிய அரசாட்சிகளாகவும் மேலும் சிறிய சிற்றரசுகளாகவும்கூடத் துண்டுபட்டிருந்தது. வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளுக்கும் இக்காலத்திய மிக முக்கியமான வளர்ச்சி என்பது மாபெரும் வணிக விரிவாக்கமாகும். வடக்கிலிருந்து வணிக உறவுகள், கிழக்கே சீனா வரையிலும், மேற்கே மத்திய தரைக்கடல் உலகம் வரைக்கும் விரிந்திருந்தது. தெற்குப் பகுதியைப் பொறுத்த வரை, உள்நாட்டு வணிகம் மற்றும் பண்டமாற்று சுழற்சிகளுடன் அயல்நாடுகளுடனான வணிகம் மேற்கு ஆசிய நாடுகள் வரையிலும், கிழக்கில் சீனா வரையிலும் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது. இதன்விளைவினைக் கணிசமான அளவுக்குப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியிலும் அதிகரித்த செழிப்பிலும் காணலாம். தொல்லியல் அகழ்வாய்வுகளும் சங்க இலக்கியங்களில் நகரங்கள் குறித்த வர்ணணைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
பாடச் சுருக்கம் :
• இந்தியாவில் அலெக்சாண்டர் இறந்த பிறகு, அவரது தளபதி செலியுகஸ் நிகேடர், தொடர்ந்து வட மேற்கு இந்தியப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இராஜாங்க உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
• செலுசியப் பேரரசு வலுவிழந்தது. அதன் ஒரு விளைவாக, அவரை அடுத்து வந்த ஓரிருவருக்குப் பிறகு, இந்தோ - கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவரான மினாண்டர் பேரரசை ஆட்சி செய்தார்.
• இந்தோ - கிரேக்க அரசாட்சி சாகர்களாலும் அதைத் தொடர்ந்து பார்த்தியர் மற்றும் குஷாணர்களால் அகற்றப்பட்டது. தங்களின் ஆட்சிப் பகுதிகளை ஆள்வதற்கு சத்ரப்கள் அல்லது மாகாண ஆட்சியாளர்களை சாகர்கள் நியமித்தனர்.
• சாகர் ஆட்சியாளர்களில் மிகவும் புகழ்பெற்றவர் ருத்ரதாமன். அவருக்குப் பிறகு சாகர்களை, பார்த்தியர்கள் குடிபெயரச் செய்தனர்; பார்த்தியரைத் தொடர்ந்து குஷாணர்கள் வந்தனர்.
• குஷாணர்களில் புகழ் பெற்றவர் கனிஷ்கர். பௌத்தத்தின் மகாயானப் பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது.
• அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், நாகார்ஜுனர் ஆகிய பௌத்தத் தத்துவஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.
• தென்னிந்தியாவில் சாதவாகனர் அரசாட்சி பொ.ஆ. முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தமிழ்ப் பகுதியில் (சோழ, சேர, பாண்டிய) மூவேந்தர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
• தமிழ்நாட்டுக்கும் ரோமுக்கும் இடையே வணிகம் வளர்ச்சி அடைந்தது. சோழமண்டலக் (கிழக்குக்) கடற்கரையில் புகார் நகரம் ஒரு முக்கியமான துறைமுகமாக விளங்கிற்று. யவன வணிகர்கள் துறைமுக நகரங்களில் வாழ்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக