KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி


I ஹர்ஷர் :


அறிமுகம் : குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியா பல சிற்றரசுகளாகச் சிதறுண்டது. ஹூணர்கள் ஆட்சி செய்த பகுதிகளைத் (தற்கால பஞ்சாப், ராஜஸ்தான், மாளவம்) தவிர பல சிற்றரசுகள் தோன்றியதின் வாயிலாக பிராந்திய வட்டார அடையாளங்கள் வெளிப்பட்டன. மைத்ரேயர்கள் சௌராஷ்டிரத்தில் (குஜராத்) வல்லபியை தலைநகராகக் கொண்டு பலம் மிக்க அரசை உருவாக்கியிருந்தனர். ஆக்ராவும் அயோத்தியும் மௌகரியர்களால் சுதந்திரமான இறையாண்மை மிக்க அரசாக உருவாக்கப்பட்டது. மேற்கு தக்காணத்தில் வாகாடகர்கள் தங்களது ஆட்சியதிகாரத்தை மீட்டெடுத்திருந்தனர். இந்த அரசுகளுக்கிடையில் அரசியல் போட்டிகளும் மோதல்களும் இருந்து வந்த போதிலும் தில்லிக்கு வடக்கே சட்லஜ், யமுனை நதிகளுக்கிடையில் இருந்த தானேஸ்வரம் புஷ்யபூதிகளால் சுதந்திரமான ஆட்சியதிகாரம் கொண்ட அரசாக உருவாக்கப்பட்டது. ஹர்ஷரின் ஆட்சியில் அது முக்கியத்துவத்தை அடைந்தது. குப்தர்களின் அரசிற்கு இணையாக இருந்த பெரிய அரசை ஹர்ஷர் பொ.ஆ. 606 முதல் 647 வரை ஆட்சி செய்தார்.


சான்றுகள் :


இலக்கியச் சான்றுகள் :


• பாணரின் ஹர்ஷ சரிதம்

• யுவான் சுவாங்கின் சியூகி


செப்புப் பட்டயம், கல்வெட்டுச் சான்றுகள் :


• மதுபன் செப்புப் பட்டயக் குறிப்புகள்

• சோன்பட்டு செப்பு முத்திரைக் குறிப்புகள்

• பன்ஸ்கெரா செப்புப் பட்டயக் குறிப்புகள்

• நாளந்தா களிமண் முத்திரைக் குறிப்புகள்

• ஐஹோல் கல்வெட்டு


உங்களுக்குத் தெரியுமா? பாணரின் ஹர்ஷ சரிதம் ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூலாகும். அது இந்தியாவில் புதிய இலக்கிய வகையைத் தொடங்கி வைத்தது.


8.1 புஷ்யபூதிகள் :


வர்த்தனவம்சத்தை நிறுவியவர் புஷ்யபூதி. அவர் தானேஸ்வரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். குப்தப் பேரரசர்களின் கீழ் படைத் தளபதியாக இருந்த அவர் குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தார். பிரபாகர வர்த்தனர் (பொ.ஆ. 580-605) ஆட்சியில் அமர்ந்த பின்னர் புஷ்யபூதிகளின் குடும்பம் வலிமை மிக்கதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் மாறியது. பிரபாகர வர்த்தனர் கூர்ஜரர்கள், ஹூணர்கள் ஆகியோருக்கு எதிராகப் போரிட்டுத் தன் ஆட்சியை மாளவம் மற்றும் குஜராத் வரை நிறுவினார். அவர் கன்னோசியை (தற்போதைய கான்பூருக்கு அருகிலுள்ள) ஆண்ட மௌகாரி வம்சத்தைச் சேர்ந்த கிரகவர்மனுக்குத் தன் மகளான ராஜ்யஸ்ரீயைத் திருமணம் செய்து கொடுத்து கன்னோசியை தன் கூட்டாளியாக்கிக் கொண்டார். ஒரு பேரரசை உருவாக்கும் பிரபாகர வர்த்தனரின் கனவு அவரது இளைய மகனான ஹர்ஷவர்த்தனரால் நிறைவேறியது.

பிரபாகர வர்த்தனரின் மூத்த மகனான ராஜ்ய வர்த்தனர் (பொ.ஆ. 605-606); தன் தந்தை இறந்த பிறகு ஆட்சியில் அமர்ந்தார். வங்காளத்தை ஆண்டு வந்த கௌட அரசன் சசாங்கனால் இராஜ்ய வர்த்தனர் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். இதன் விளைவாக அவரது தம்பி ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் அரசரானார். ஹர்ஷர் அண்டையிலிருந்த சிற்றரசுகளின் பலவீனத்தை அறிந்து கொண்டு அவற்றின் மீது படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டார். ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார். தானேஸ்வரம் வடமேற்கிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு ஏதுவாக அமைந்திருந்தது. கன்னோசி மேற்கு கங்கை சமவெளியில் செழிப்பான வேளாண் பகுதியில் அமைந்திருந்தது.


கன்னோசியின் அரசராக ஹர்ஷர் : கன்னோசியின் (மௌகரி அரசின் தலைநகர்) முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரையின்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தனர். தயக்கம் காட்டியஹர்ஷர் அவலோகிதேஷ்வர போதிசத்வரின் அறிவுரையின்படி ராஜ்புத்திரர், சிலாதித்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார். ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தானேஸ்வரமும் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன. பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரைக் கன்னோசிக்கு இடம் மாற்றிக் கொண்டார்.


8.2 ஹர்ஷரின் படையெடுப்புகள் :


ஹர்ஷர் பொ.ஆ. 606இல் ஆட்சியில் அமர்ந்ததும் முதலில் அவரது சகோதரியான ராஜ்யஸ்ரீயின் விவகாரத்தில் கவனம் செலுத்தினார். ராஜ்யஸ்ரீ தன்னை அடைய முயன்ற மாளவ அரசன் தேவகுப்தரின் தீய திட்டங்களுக்கு அஞ்சி விந்திய மலைப் பகுதிக்குத் தப்பிச் சென்றார். ஹர்ஷர் அந்தப் பகுதிக்குச் சென்று தேவகுப்தரைக் கொன்று தீக்குளிக்க முயன்ற தனது சகோதரியைக் காப்பாற்றினார். ஹர்ஷர் ராஜ்ய ஸ்ரீக்கு ஆறுதல் அளித்து தன்னுடன் கன்னோசி அரசிற்கு அழைத்து வந்தார். பின்னர் ராஜ்யஸ்ரீ பௌத்த மதத்தைத் தழுவினார். ஹர்ஷர் பௌத்த மதத்தைத் தழுவுவதற்கும் அவரே காரணமாக விளங்கினார். 

பாணரின் கூற்றின்படி பேரரசு ஒன்றை உருவாக்கும் முயற்சியாக ஹர்ஷர் பின் வரும் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது எதிர்த்துப் போரிடவோ வாய்ப்பினை அளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.

1. வங்காளத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்.

2. வல்லபியை ஆண்ட மைத்ரேயர்கள்; புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள்.

3. தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி.

4. சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒத்ரா (வடக்கு ஒடிசா), கொங்கோடா (பண்டைய ஒடிசாவின் ஒரு பகுதி) ஆகிய பகுதிகளை ஆண்ட அரசர்கள்.

ஹர்ஷரின் உடனடித் தேவை சசாங்கனைப் பழி வாங்குவதாக இருந்தது. தற்போதைய அஸ்ஸாம் நிலப் பகுதியான காமரூபத்தின் அரசனான பிரகியோதிஷருடன் அவர் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இருந்தாலும், ஹர்ஷருக்கும் சசாங்கனுக்குமிடையில் நடந்த போர் குறித்த விவரம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. எனினும் சசாங்கனின் மறைவிற்குப் பிறகே மகதம், கௌடம், ஒத்ரா, கொங்கோடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கௌடப் பேரரசை ஹர்ஷர் வெற்றிகரமாகத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. 

ஹர்ஷருக்கும் மைத்ரேயர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகைமை ஹர்ஷரின் மகளுக்கும் துருவபட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவிற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது. 


சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி : ஹர்ஷர் தனது ஆட்சியதிகாரத்தை தெற்கில் தக்காணப் பகுதிக்கு விரிவுப்படுத்த முனைந்தார். தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார். ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாகப் புலிகேசி “பரமேஷ்வரர்" என்ற பட்டத்தைப் பெற்றார். புலிகேசியின் தலைநகரான வாதாபியில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்த வெற்றிக்குச் சான்றாக விளங்குகின்றன. 


ஹர்ஷப் பேரரசின் எல்லைகள் : ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தர் (பஞ்சாபில் உள்ளது), காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது. வங்காளத்தை ஆண்ட சசாங்கன் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார். ஹர்ஷரது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பீகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது எனக் கூறப்பட்டாலும் அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிகளுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தைக் கடந்து செல்லவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு ஹர்ஷரின் பேரரசு சிற்றரசுகளாக சிதறியது.


ஹர்ஷரின் சீன உறவு : ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார். அவரது சமகால டான்ங் (Tang) பேரரசர் டாய் சுங், பொ.ஆ. 643ஆம் ஆண்டிலும் அடுத்து 647ஆம் ஆண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார். இரண்டாவது முறை வந்த போது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிந்தார். ஹர்ஷருக்குப் பிறகு ஆட்சியதிகாரம் தகுதியற்ற ஒரு நபரால் கைப்பற்றப்பட்டதை அறிந்த சீனத் தூதர் அபகரித்த அரசனை அகற்றும் பொருட்டுப் படை திரட்ட நேபாளத்திற்கும் அஸ்ஸாமிற்கும் விரைந்தார். பின்னர் அந்த அரசன் சிறைப்பிடிக்கப்பட்டுச் சீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.


நிர்வாகம் : வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டெய்னின் கூற்றுப்படி, மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகம் என்பது வல்லமை மிக்கவர்களாக இருந்த குப்தர்களின் ஆட்சிக் காலத்திலும் கூட இருந்திருக்கவில்லை. அது பாடலிபுத்திரம், மதுரா ஆகிய நகரங்களுக்கிடையிலிருந்த கங்கைச் சமவெளிக்குள்ளாகச் சுருக்கப்பட்டிருந்து. அந்தப் பகுதிக்கு அப்பால் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் காணப்படவில்லை. குப்தர்களுக்கும் வர்த்தனர்களுக்கும் இடையில் காணப்பட்ட ஒரே வேறுபாடு குப்தர்களுக்கு ஹூணர்கள் போன்ற வலுவான எதிரிகள் இருந்தனர்; வர்த்தனர்களுக்கு அத்தகைய எதிரிகள் இருக்கவில்லை என்பதுதான். 

பொ.ஆ. 632ஆம் ஆண்டின் செப்புப் பட்டயக் குறிப்புகள் இரண்டு பிராமணருக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. அளிக்கப்பட்ட கொடைக்குப் பாதுகாவலர்கள் எனச் சில அரசதிகாரம் பெற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலர் மஹாசமந்தர்கள் எனப்பட்டனர். அவர்கள் அரசருக்கு அணுக்கமாக இருந்தபோதிலும் கீழ்நிலையில் வைத்தே அறியப்பட்டனர். ஏனையோர் சுயேச்சையான மகாராஜாக்களாக இருந்த போதிலும் அவர்கள் ஹர்ஷருக்குக் கப்பம் கட்டக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட சிற்றரசர்களே ஆவர். இவர்களைத் தவிர மற்றொரு வகையான ஆட்சியாளர்களும் இருந்தனர். அவர்கள் ஹர்ஷருக்குத் தங்கள் விசுவாசத்தை உறுதி செய்ததுடன் அவருக்குச் சேவை புரியத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துக் கொண்டனர். வட இந்தியாவில் ஹர்ஷரது ஆட்சியதிகாரத்தின் தன்மை இவ்வாறாகவே இருந்தது.


அமைச்சரவை : ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அமைப்பு குப்தர்களின் காலத்தை ஒத்திருந்தது. பேரரசருக்கு அவரது கடமைகளை ஆற்றுவதில் அமைச்சரவை உதவி செய்தது. அரசரைத் தேர்ந்தெடுப்பதிலும் அரசின் அயலுறவுக் கொள்கையை வகுப்பதிலும் அமைச்சரவை முக்கியப் பங்காற்றியது. முதன்மை அமைச்சர் பதவியே அமைச்சரவையில் மிக முக்கியமான பதவியாகும்.


முக்கிய நிர்வாக அதிகாரிகள் :

1. அவந்தி - அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்

2. சிம்மானந்தா - படைத் தளபதி

3. குந்தலா – குதிரைப்படைத் தலைவர்

4. ஸ்கந்தகுப்தர் - யானைப் படைத் தலைவர்

5. திர்கத்வஜர் - அரச தூதுவர்கள்

6. பானு - ஆவணப் பதிவாளர்கள்

7. மஹாபிரதிஹரர் – அரண்மனைக் காவலர்களின் தலைவர்

8. சர்வகதர் - உளவுத் துறை அதிகாரி


வருவாய் நிர்வாகம் : பாகா, ஹிரண்யா, பலி என மூன்று வகையான வரிகள் ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்டன. பாகா என்ற நிலவரி பொருளாகச் செலுத்தப்பட்டது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது. ஹிரண்யா என்பது விவசாயிகளாலும் வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரியாகும். பலி என்ற வரியைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  • பாகம் 1 - அரசு விவகாரங்களை நடைமுறைப் படுத்துவதற்கானது.
  • பாகம் 2 - அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குவதற்கானது.
  • பாகம் 3 - அறிவில் சிறந்தவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கானது.
  • பாகம் 4 - மத நிறுவனங்களின் அறச் செயல்களுக்கு அளிப்பதற்கானது.  

நீதி நிர்வாகம் : குற்றவியல் சட்டங்கள் குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் கடுமையானதாக இருந்தன. இச்சட்டங்களை விசாரித்து நீதி வழங்க மீமாம்சகர்கள் எனப்பட்டோர் நியமிக்கப்பட்டனர். நாடு கடத்தப்படுவதும் உடல் உறுப்புகள் வெட்டப்படுவதும் வழக்கமான தண்டனைகளாக இருந்தன. கடும் சோதனைகளின் அடிப்படையிலான வழக்கு விசாரணை நடைமுறையில் இருந்தது. சட்ட மீறல்களுக்கும் அரசனுக்கு எதிராக சதி செய்வதற்கும் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சீனப் பயணியான யுவான் சுவாங் ஏறத்தாழ பதிமூன்று ஆண்டு காலம் (பொ.ஆ. 630 - 643) இந்தியாவில் கழித்தார். சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கெனப் புனித நூல்களையும் பழைய நினைவுச் சின்னங்களையும் சேகரித்தார். “பயணிகளின் இளவரசர்" என அறியப்பட்ட அவர் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கியமான புனித மையங்களுக்கு சென்றார். அவரது முக்கியமான நூலான சி - யூ - கி ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தின் போது நிலவிய சமூகம், பொருளாதாரம், மதம், பண்பாடு ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் வலுவாக இருந்ததால் நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த முக்கியமான தண்டனைகளையும் நீதி விசாரணை முறைகளையும் யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார். கடுமையான குற்றங்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கப்படுவதே நடைமுறையாக இருந்தது. ஆனால் மரணதண்டனை தவிர்க்கப்பட்டது. சமூக ஒழுக்கத்திற்கு எதிரான சட்டத்தை மதிக்காத குற்றங்களைப்புரிந்தோரது உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. மக்களோடு தன்னை அணுக்கப்படுத்திக் கொள்வதற்காக ஹர்ஷர் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். மக்கள் அவரை எளிதாகச் சந்திக்கக் கூடிய நிலை இருந்தது. அவர் தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசர்களைக் கண்காணித்து வந்தார்.


படை நிர்வாகம் : தமது இராணுவத்தின் ஒழுங்கு மற்றும் பலத்தின் மீது ஹர்ஷர் நேரடி கவனம் செலுத்தினார். அவரது சேனை யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. சாதாரண படை வீரர்கள் சாடர், பாடர் என அழைக்கப்பட்டனர். குதிரைப்படை அதிகாரிகள் பிரகதிஷ்வரர் என அழைக்கப்பட்டனர். காலாட்படை அதிகாரிகள் பாலதிக்ரிதர் எனவும், மகாபாலதிக்ரிதர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். ஹர்ஷரின் சேனை நான்கு பிரிவுகளாக (சதுரங்கம்) பிரிக்கப்பட்டிருந்தது என யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு படைப் பிரிவின் பலம், படைக்கு ஆளெடுக்கும் முறை, படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆகியவை குறித்து அவர் விவரங்களை அளித்துள்ளார்.


பேரரசின் பிரிவுகள் : ஹர்ஷரது பேரரசு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மாகாணங்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாகாணமும் பல ‘புக்தி’களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. புக்திகள் 'விஷ்யங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்களை ஒத்த விஷ்யங்கள் ‘பாதகா’க்களாகவும் பாதகாக்கள் பல கிராமங்களாகவும் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டிருந்தன. உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொண்ட அதிகாரிகள் பலர் குறித்து ஹர்ஷ சரிதம் குறிப்பிடுகிறது. அந்நூலின் வழி அவர்களின் பட்டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் அதிகாரங்கள் என்ன என அறிய முடியவில்லை . எடுத்துக்காட்டாக அவர்கள் போகபதி, ஆயுக்தா, பிரதிபாலக - புருஷா போன்ற பட்டங்களைக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் இவர்களின் பணிகள் குறித்து ஷர்ஷசரிதம் ஏதும் குறிப்பிடவில்லை.


நகரங்கள், சிறு நகரங்கள் : இந்தியாவின் நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றின் அமைப்பு, அழகியல், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியன பற்றி யுவான் சுவாங் தனது நூலில் விவரிக்கிறார். அவரது நோக்கில் ஹர்ஷப் பேரரசு சீனாவைப் போன்றே எண்ணற்ற கிராமங்களையும், எண்ணற்ற சிறு நகரங்களையும், பெரு நகரங்களையும் கொண்டிருந்தது. பாடலிபுத்திரம் அதன் செல்வாக்கை இழந்த நிலையில் கன்னோசி அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டதை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். கன்னோசியின் கம்பீரமான தோற்றம் அதன் கவின்மிகு கட்டிடங்கள், அழகிய பூங்காக்கள், அரிய பொருள்களின் இருப்பிடமாக விளங்கிய அருங்காட்சியகம் ஆகியன குறித்து அவர் விவரித்துள்ளார். அங்கு வாழ்ந்த மனிதர்களின் பொலிவான தோற்றம், அவர்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடைகள், கல்வி மற்றும் கலைகளின்பால் அவர்கள் கொண்டிருந்த நாட்டம் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயில்களையும் கொண்டிருந்தன. மதில்கள் அகலமாகவும், உயரமாகவும் இருந்தபோதிலும் வீதிகளும் தெருக்களும் குறுகியிருந்தன. வசிப்பிட இல்லங்களும் மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்புக் கலவையால் பூசப்பட்டிருந்தன. சுத்தத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் தரைகள் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தன. பெரும் சாத்திரங்கள், பொதுக் கட்டிடங்கள், பௌத்த மடாலயங்கள், விகாரைகள் ஆகியவை பெரிதாகவும், அடுக்கு மாடிக் கட்டிடங்களாகவும் அமைந்திருந்தன. அவை சூளையில் சுட்ட செங்கற்கள், சிவப்பு நிற மணல் கற்கள், சலவைக் கற்கள் கொண்டு கட்டப்பட்டன. ஹர்ஷர் கங்கையாற்றின் கரையில் பல விகாரைகளையும் மடாலயங்களையும் ஸ்தூபிகளையும் கட்டுவித்தார்.

பயணிகள், நோய்வாய்ப்பட்டோர், ஏழைகள் ஆகியோரின் நலனுக்காக ஹர்ஷர் தர்ம நிறுவனங்களைக் கட்டினார். சத்திரங்கள், மருத்துவமனைகள் ஆகியனவற்றையும் அவர் கட்டினார். சிறு நகரங்களில் இலவச மருத்துவமனைகளும், தர்மசாலைகளும் இருந்தன. பயணிகளும் வெளியாள்களும் அங்குத் தங்கி இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர்.


யுவான் சுவாங் : ‘பயணிகளின் இளவரசன்’ என்று புகழப்படும் யுவான் சுவாங் ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். பொ.ஆ. 612இல் பிறந்த யுவான் சுவாங் தனது இருபதாம் வயதில் துறவு பூண்டார். அவர் இந்தியாவில் தங்கியிருந்தபோது, வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு புனிதத் தலங்களைப் பார்வையிட்டார். நாளந்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார். புத்தர் மீதான யுவான் சுவாங்கின் ஆழமான பற்றும் பௌத்த மதத்தில் அவருக்கு இருந்த பரந்த அறிவும் ஹர்ஷரின் பாராட்டுக்குரியதாக இருந்தன. புத்தர் நினைவுச் சின்னங்களாக 150 பொருள்கள், தங்கத்திலும் வெள்ளியிலும் சந்தனத்திலும் ஆன புத்தரின் உருவச்சிலைகள், 657 தொகுதிகள் கொண்ட அரிய கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றார். 


மதக் கொள்கை : ஹர்ஷர் பொ.ஆ. 631ஆம் ஆண்டு வரை சிவ வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார். ஆனால் அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்தத் துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் அவர் பௌத்த மதத்தைத் தழுவினார். பௌத்த மதத்தின் மகாயானா பிரிவைப் பின்பற்றினார். ஆனாலும் அவர் எல்லா மதங்களையும் ஆதரித்தார். அம்மதங்களைச் சார்ந்த அறிஞர்களின் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார். விலங்குகளைக் கொல்வதும், மாமிசம் உண்பதும் தடை செய்யப்பட்டிருந்தன. ஹர்ஷர் பொ.ஆ. 643ஆம் ஆண்டில் இரண்டு பௌத்த மதக் கூட்டங்களைக் கூட்டினார். முதலாவது கன்னோசியிலும், இரண்டாவது பிரயாகையிலும் கூட்டப்பட்டது.

கன்னோசி கூட்டத்தில் காமரூபத்து அரசன் பாஸ்கர வர்மன் உள்ளிட்ட இருபது அரசர்கள் பங்கு கொண்டனர். பௌத்தம், சமணம், வேதம் கற்ற பல மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பலரும் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடினர். தங்கத்தாலான புத்தரின் சிலை ஒரு மடாலயத்தில் புனிதச் சடங்குடன் நிறுவப்பட்டு, புத்தரின் மூன்றடி உயர சிறிய சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.


பிரயாகையில் பௌத்த மதக் கூட்டம் : ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் “மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட பௌத்த மதக் கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார். தான் சேகரித்த செல்வத்தை பெளத்த மதத்தினர், வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார். கூட்டம் நடந்த நான்கு நாள்களும் புத்தத் துறவிகளுக்கு எண்ணற்ற பரிசுப் பொருள்களை வழங்கினார்.

பௌத்த மதக் கொள்கைகள் இந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவியிருந்ததை யுவான் சுவாங் உற்றுநோக்கிப் பதிவு செய்துள்ளார். மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். வேறுப்பட்ட மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது. ஹர்ஷர் புத்த பிட்சுக்களையும் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாகப் பாவித்து கொடைகளையும் சமமாகப் பகிர்ந்தளித்தார்.


சாதி அமைப்பு முறை : இந்து சமூகத்தில் சாதி அமைப்பு வலுவாக காலூன்றியிருந்தது. யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தின் நான்கு பிரிவினருக்கான தொழில்கள் முற்காலத்தில் இருந்ததைப் போலவே தொடர்ந்தன. மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர். கசாப்புக் கடையினர், மீனவர், நடனக்காரர்கள், துப்புரவுப் பணியாளர் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வசித்தனர். சாதி அமைப்பு இறுக்கமாகக் காணப்பட்ட போதிலும் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியில் மோதல்கள் எதுவும் நிகழவில்லை.


பெண்கள் நிலை : யுவான் சுவாங்கின் பதிவு, அக்காலத்தில் பெண்களின் நிலை குறித்தும், திருமண முறைகள் குறித்தும் தகவல்களை அளிக்கிறது. பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் உயர் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை . தனது சொற்பொழிவுகளைக் கேட்கும் போது ராஜ்யஸ்ரீ முகத்திரை அணிந்திருக்கவில்லை என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். உடன் கட்டை ஏறும் (சதி) வழக்கமும் நடைமுறையில் இருந்திருக்கிறது. பிரபாகரவர்த்தனரின் மனைவி யசோமதி தேவி தனது கணவன் இறந்த பிறகு இவ்வாறு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொண்டார்.


வாழ்க்கை முறை : யுவான் சுவாங்கின் குறிப்புகளிலிருந்து ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் அறிய முடிகிறது. மக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். பருத்தி, பட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர். மெல்லிய ரக துணிகளைத் தயாரிக்கும் கலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தங்கம், வெள்ளி அணிகலன்களைப் பயன்படுத்தினர். அரசர்கள் சிறப்பான அணிகலன்களை அணிந்தனர். மலர் மாலைகள், அரியவகைக்கல் பதித்த மாலைகள், மோதிரங்கள், காப்புகள், பதக்கங்கள் முதலியவை அரச அணிகலன்களில் சில. செல்வ வணிகர்கள் கைகளில் காப்புகளை அணிந்தனர். பெண்கள் அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தினர்.


உணவுப் பழக்கங்கள் : இந்தியர்கள் பெரும்பாலும் மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவே யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். சமையலில் வெங்காயம், பூண்டு ஆகியவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. உணவுத் தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது. சில தருணங்களில் மீனும், ஆட்டு இறைச்சியும் உட்கொள்ளப்பட்டன. மாட்டிறைச்சி உண்பதும், வேறு சில விலங்குகளின் இறைச்சியை உண்பதும் தடை செய்யப்பட்டிருந்தன.


கல்வி : மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது. கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது. மதம் சார்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை. சமஸ்கிருதமே கற்றறிந்தோரின் மொழியாக இருந்தது. கல்வி கற்கும் வயது 9 முதல் 30 வயது வரையாக இருந்தது. பலர் கல்வி கற்பதிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். அலைந்து திரியும் பிட்சுக்களும் சாதுக்களும் அவர்களது அறிவுத் திறத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்று விளங்கினர். ஒழுக்கமும் அறிவுத்திறமும் கொண்டிருந்த அத்தகைய மனிதர்களை மக்கள் பெரிதும் மதித்தனர்.


கலை, இலக்கியப் புரவலராக ஹர்ஷர் : ஹர்ஷர் இலக்கிய பண்பாட்டு செயல்பாடுகளை ஆதரித்தவர். அரசு தன் வருவாயில் கால் பங்கினை அத்தகைய செயல்பாடுகளுக்குச் செலவழித்தது. ஹர்ஷ சரிதத்தையும், காதம்பரியையும் இயற்றிய பாணர் ஹர்ஷரின் அரசவைக் கவிஞராக இருந்தார். பேரரசர் ஹர்ஷருமே புகழ் பெற்ற இலக்கியவாதி ஆவார். பிரியதர்சிகா, ரத்னாவளி, நாகானந்தா ஆகிய அவரது நாடக ஆக்கங்கள் அவரது புலமையை எடுத்துக் காட்டுகின்றன. கல்வியை ஊக்குவிக்க ஹர்ஷர் தாராளமாகக் கொடையளித்தார். கோவில்களும், மடாலயங்களும் கல்வி மையங்களாக விளங்கின. கன்னோசி, கயா, ஜலந்தர், மணிப்பூர் ஆகிய இடங்களில் இருந்த மடாலயங்களில் புகழ் பெற்ற அறிஞர்கள் கல்வி போதித்தனர். இதே காலகட்டத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் அதன் புகழின் உச்சத்தை அடைந்தது.


நாளந்தா பல்கலைக்கழகம் : யுவான் சுவாங் தனது நூலில் நாளந்தா பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். பௌத்த மதத்தைப் பின்பற்றும் சீனா, ஜப்பான், மங்கோலியா, இலங்கை, திபெத் ஆகிய நாடுகளிலிருந்தும், மேலும் மத்திய, தென் கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலிருந்தும் மாணவர்கள், அறிஞர்கள் வந்து அங்கே தங்கி கல்வி கற்றனர். யுவான் சுவாங் வருகையின் போது சிலாபத்ரர் என்ற புகழ் பெற்ற பௌத்த மத அறிஞர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி மையமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகம், பத்தாயிரம் மாணவர்களைக் கொண்டிருந்தது. தர்மபாலர், சந்திரபாலர், சீலபத்ரர், பத்ரிஹரி, ஜெயசேனர், தேவாகரர், மாதங்கர் ஆகியோர் அரசின் ஆதரவு பெற்ற முக்கியமான ஆசிரியர்களாக விளங்கினர்.


II பாலர்கள் : ஹர்ஷரின் மறைவிற்குப் பின்னர் கங்கை - யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட வடிநீர்ப் பகுதி, அதனைச் சூழ்ந்துள்ள நிலப்பகுதி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டிற்கு பிரதிகாரர்கள் (ஜலோர் ராஜஸ்தான்), பாலர்கள் (வங்காளம்), ராஷ்டிரகூடர் (தக்காணம்) ஆகியோர் மத்தியில் மும்முனைப் போட்டி நிலவியது கிழக்கு கங்கைச் சமவெளியின் பரந்து விரிந்த பகுதிகளை பாலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வேளாண்மையின் மூலம் ஈட்டிய வருவாய் தவிர, பாலர்கள் தென் கிழக்கு ஆசியாவில் தங்களது வணிகத் தொடர்புகள் மூலமாகவும் வருவாய் ஈட்டினர். வங்காளத்தில் பரவியிருந்த பௌத்த மதம் கிழக்கு இந்தியாவிற்கும் ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இணைப்பாக விளங்கியது.


 8.3 வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம் :


கௌட வம்சத்து அரசனான சசாங்கன் பொ.ஆ. 590-625 ஆண்டுகளுக்கு இடையில் வங்காளத்தை ஆண்டதாக நம்பப்படுகிறது. பழங்கால வங்காளத்தை ஆண்ட முக்கியமான அரசரும் அவரே. கௌட அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மைய அதிகாரம் என்று ஏதும் இருக்கவில்லை. அதன் விளைவாகச் சிறு குடித்தலைமை அரசர்களுக்கிடையில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. எனவே, பொ.ஆ. 750ஆம் ஆண்டில் அவர்கள் குழு ஒன்று கூடி தமக்கு அரசராக கோபாலர் என்ற சத்திரியத் தலைவரை நியமிப்பது எனத் தீர்மானித்தனர். இவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு ஒரு கதை உள்ளது. இதற்கு முன் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொன்ற அரக்கியைக் கொலை செய்யும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பதாலேயே கோபாலர் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். கோபாலரின் முன்னோர் எவரும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனாலும், அவர் தமக்கென ஒரு ராஜ்யத்தை அமைத்துக்கொள்வதில் வெற்றி கண்டார். கோபாலரின் அரசியல் அதிகாரம் சிறிய குறுநில அரசர்களால் விரைவில் அங்கீகரிக்கப்பட்டது. அவரது அரசு வங்கம் (அ) கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது.


ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பாலர்கள் பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கிழக்கு இந்தியாவை ஆண்டனர். அவர்களது நாட்டில் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. பாலர்கள் புத்த மதத்தின் மகாயான பிரிவைப் பின்பற்றினர்.


பாலர் வம்சத்து ஆட்சியாளர்கள் : முதலாம் கோபாலருக்கு அடுத்து அவரது மகன் தர்மபாலர் (பொ.ஆ. 770-815) ஆட்சிக்கு வந்தார். அவர் பாலர் ராஜ்யத்தை மதிக்கத் தக்க ஒன்றாக உருவாக்கினார். வங்காளமும் பீகாரும் அவரது நேரடி ஆட்சிக்குட்பட்டிருந்தன. கன்னோசி அவர் நியமனம் செய்த ஒருவரால் ஆளப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான், மாளவம், பீரார் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்கள் அவரது ஆட்சித் தலைமையை ஏற்றுக்கொண்டனர். அவர் பரமேஷ்வரர், பரமபட்டாரகா, மகாராஜாதிராஜா ஆகிய பட்டங்களை ஏற்றார்.

தர்மபாலர் பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார். அவர் பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா எனும் பௌத்த மடாலயத்தை நிறுவினார். அது பௌத்த மதக் கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்கும் சிறந்த மையமாக உருவானது. அவர் சோமபுரியில் (தற்போதைய பாகர்பூர், வங்காள தேசத்தில்) பெரிய பௌத்த விகாரம் ஒன்றையும் கட்டினார். தர்மபாலர் பீகாரில் உள்ள ஒதாண்டபுரியில் ஒரு பௌத்த மடாலயத்தையும் கட்டினார். ஹரிஷ்பத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.

பாலர்களின் ஆட்சியை கிழக்கில் காமரூபம் (அஸ்ஸாம்) வரை தர்மபாலரின் மகன் தேவபாலர் விரிவுபடுத்தினார். ராஷ்டிரகூடர்களைத் தமது பொது எதிரியாகக் கருதிய அரசுகளை எல்லாம் ஓரணியாகத் திரட்டி ராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷர் மீது போர்தொடுத்து வென்றார். தேவபாலரும் பௌத்த மதத்திற்குப் பெரும் ஆதரவாளராக விளங்கினார். சுவர்ணதீபத்தை (சுமத்ரா) ஆண்ட சைலேந்திர வம்சத்து அரசரான பாலபுத்ரதேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தைப் பராமரிப்பதற்காக ஐந்து கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார். அவரது ஆட்சியில் நாளந்தா பெளத்த மதக் கொள்கைகளைப் போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.

தேவபாலருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த விக்ரம் பாலர் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின்னர் அரியணையைத் துறந்து துறவறத்தை மேற்கொண்டார்.விக்ரமபாலரின் மகனான நாராயணபாலரும் சாந்தமான சுபாவம் கொண்டவராகவும் மதம் சார்ந்த மனப்போக்கு கொண்டவராகவும் விளங்கினார். ராஷ்டிரகூடர்களும் பிரதிகாரர்களும் இதனைத் தமக்குச் சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பாலர்களை வீழ்த்தினர். ஜலோரில் மிகிரபோஜரின் தலைமையில் பிரதிகாரர்களின் எழுச்சியும், பாலர்களின் ஆட்சிப் பகுதிக்குள் ராஷ்டிரகூடர்களின் ஆக்கிரமிப்பும் தவிர்க்கவியலாத நிலையில் பாலர்களுக்கு வீழ்ச்சியைக் கொண்டு வந்தன. அதுவரை பாலர்களுக்கு ஆதரவளித்து வந்த குறுநில அரசர்களும் சுயேச்சையாக இயங்கத் தொடங்கினர்.

அடுத்து வந்த ராஜ்யபாலர், மூன்றாம் கோபாலர், இரண்டாம் விக்ரமபாலர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பாலர் வம்சத்தின் வீழ்ச்சி மேலும் வேகம் பெற்றது. எனினும் இரண்டாம் விக்ரம் பாலரின் மகனான முதலாம் மஹிபாலரால் பாலர் வம்சத்தின் பெயர் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டது. பொ.ஆ. 1020-1025 ஆண்டுகளுக்கிடையில் தென்பகுதியைச் சேர்ந்த சோழ மன்னர் இராஜேந்திர சோழன் வட இந்தியாவிற்குப் படையெடுத்துச் சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். எனினும் இராஜேந்திர சோழனின் படையெடுப்பு கங்கையைக் கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.

மகிபாலரின் பதினைந்து ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் நான்கு திறமையற்ற ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர். பாலர் வம்சத்தின் இழந்து போன மகத்துவத்தை மீட்டெடுக்க முயன்ற கடைசி அரசர் ராமபாலர். அவர் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் பாலர் வம்சத்தின் இருப்பு மகதத்தின் (பீகார்) ஒரு பகுதியில் மட்டுமே என்று ஆனது. அதுவும் குறுகிய காலத்திற்கே நீடித்தது. அதே காலத்தில் வடக்கு வங்காளத்தில் வல்லமை மிக்கவராக உருவாகியிருந்த சேனர் வம்சத்து அரசர் விஜயசேனர் கடைசி ஆட்சியாளரான மதனபாலரை (பொ.ஆ. 1130-1150) ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, தான் சார்ந்த சேனர் வம்சத்து ஆட்சியை நிறுவினார்.


மதம் : பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானப் பிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் பாலர்களின் ராஜ்யத்தை நிறுவிய தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார். வங்காளம் பெளத்த மடாலயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது. வணிகர்களும் கைவினைஞர்களும் பெருமளவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதின் காரணமாகப் பாலர்களின் அரசும், பௌத்த மதமும் வீழ்ச்சியைச் சந்தித்தன.


கலையும் கட்டிடக் கலையும் : திமான், அவரது மகனான விடபாலர் ஆகிய இரு கலைஞர்களும் பாலர்களின் காலத்தினர். அவர்கள் இருவரும் பெரும் ஓவியர்களாகவும், சிற்பக் கலைஞர்களாகவும், வெண்கலச் சிலை வடிப்போராகவும் விளங்கினர். பாலர் ஆட்சிக் காலத்திய சிற்பக் கலை, குப்தர் காலத்துக் கலையின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. முதலாம் மகிபாலர் சாரநாத், நாளந்தா, புத்த கயா ஆகிய இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார். கோபாலர் ஒடாண்டபுரியில் (பீகார்) புகழ் பெற்ற பௌத்த மடாலயத்தை நிறுவினார். தர்மபாலர் விக்ரமசீலாவையும், சோம்புரத்தில் (வங்காள தேசம்) மகாவிகாரைகளையும் நிறுவினார். 


இலக்கியம் : அதிஷா, சரகர், திலோபா, தான்சில், தான்ஸ்ரீ, ஜினமித்ரர், முக்திமித்ரர், பத்மானவர், விராசன், சிலபத்ரர் ஆகியோர் விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கியமான அறிஞர்களாவர். பாலர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய தத்துவவியல் ஆக்கங்கள் கவுத் பாதரின் ஆகம சாஸ்திரம், ஸ்ரீதரபட்டரின் நியாய குண்டலி ஆகிய நூல்களை உள்ளடக்கியிருந்தன. சக்ரபாணி தத்தா, சுரேஷ்வர் கடதர வைத்தியா, ஜிமுடவாகனர் ஆகியோரால் பல மருத்துவ நூல்கள் இயற்றப்பட்டன. பாலர்கள் சமஸ்கிருத அறிஞர்களையும் ஆதரித்தனர். புத்தமதம் சார்ந்த பல தாந்திரீக நூல்கள் இயற்றப்பட்டு அவை சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தாந்திரீகம் குறித்த மூல நூல்கள் பல்வேறுபட்ட இந்திய, திபெத்திய நூல்களால் ஆனவை. நாட்டுப் புறப் பாடல்களின் தொகுப்பான “மகிபாலர் கீதங்கள்” இன்றும் வங்காளத்தின் கிராமப் புறங்களில் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. ராமசரிதம் என்ற காவியத்தை சந்தியாகர் நந்தி இயற்றினார். பாலர் வம்சத்து அரசர் ராமபாலரின் வாழ்க்கை வரலாற்று நூலான இது, வனங்களில் வாழ்ந்த பழங்குடியினத் தலைவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பதின் மூலம் அவர்கள் எவ்வாறு பாலர்களின் கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டனர் என விளக்குகிறது.


III ராஷ்டிரகூடர்கள் : பிரதிகாரர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் இடையில் நிலவிய பகைமை இரு வம்சங்களின் அழிவிற்கு வழிவகுத்தது. கன்னோசிக்கு வருகை தந்த அரபுப் பயணி அல் மாசூத் அரசாளும் இரு வம்சங்களுக்கிடையில் நிலவிய பகைமையைப் பதிவு செய்துள்ளார். ராஷ்டிரகூடர்கள் பிரதிகாரர்களிடமிருந்து கன்னோசியைக் கைப்பற்றுவதற்குத் தக்க சமயத்தை எதிர் நோக்கியிருந்தனர். பொ.ஆ. பத்தாம் நூற்றாண்டுவரை அவர்கள் வெற்றிகரமாக அரசாண்டனர். அவர்கள் கன்னட மொழி பேசும் பகுதியில் வாழ்ந்த முக்கியப் பிரிவாக அறியப்பட்ட ரஸ்திகர் அல்லது ரதிகர்களின் வழித்தோன்றல்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டனர். அசோகரின் கல்வெட்டுகளிலும் அவர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


8.4 ராஷ்டிரகூட மரபின் எழுச்சி :


தொடக்கத்தில் ராஷ்டிரகூடர்கள் வாதாபியை ஆண்டுவந்த மேலைச் சாளுக்கியர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாகவே இருந்தனர். அதற்கு முன்னர் அரசாண்டவர்கள் இருந்தபோதிலும் தந்திதுர்கர் என்பவரே ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசராவார். பிராரில் ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த தந்திதுர்கர் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யனின் (பொ.ஆ. 733-746) மறைவிற்குப் பின்னர் தன் அரசைச் சுற்றியிருந்த பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்று அவற்றைத் தனது அரசுடன் இணைத்துக் கொண்டார். அவர் நந்தி புரியின் கூர்ஜர ராஜ்யத்தையும், மாளவம், கிழக்கு மத்திய பிரதேசம், பிரார் முழுவதையும் கைப்பற்றினார். பொ.ஆ. 750ஆம் ஆண்டு வாக்கில், மத்திய மற்றும் தெற்கு குஜராத் பகுதியிலும் மத்திய பிரதேசம், பிரார் ஆகிய பகுதிகளிலும் தன் ஆதிக்கத்தை நிறுவினார்.

தந்திதுர்கர் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், வாதாபியை ஆண்ட கடைசி சாளுக்கிய அரசன் இரண்டாம் கீர்த்திவர்மனை (பொ.ஆ. 746-753) தோற்கடித்தார். அவர் மகாராஜாதிராஜர், பரமேஷ்வரர், பரமபட்டாரகர் ஆகிய பட்டங்களை ஏற்றார். பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் பல்லவர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார். பொ.ஆ. 756ஆம் ஆண்டில் தந்திதுர்கரின் மறைவிற்குப் பின்னர் அவரது சிற்றப்பாவான முதலாம் கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார்.


முதலாம் கிருஷ்ணரும் அவருக்குப் பின் வந்தவர்களும் : முதலாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 756-775) மைசூரை ஆண்ட கங்கர்களைப் போரில் வென்றவர். அவருக்கு அடுத்து அவரது மூத்த மகன் இரண்டாம் கோவிந்தர் பொ.ஆ. 775ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அவர் கீழைச் சாளுக்கியர்களைத் தோற்கடித்தார். பின்னர் தனது சகோதரரான துருவரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தார். துருவர் (பொ.ஆ. 780-794) தனக்குத்தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார். அவரது ஆட்சிக்காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு அதன் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. மேலைக் கங்கர் அரசனை வீழ்த்திய பின்னர் துருவர் பல்லவ அரசரான நந்திவர்மனைத் தோற்கடித்தார். வேங்கியை (தற்கால ஆந்திரம்) ஆண்ட அரசரும் துருவரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கில் தனது ஆதிக்கத்தை நிறுவிய பிறகு துருவர் கன்னோசியைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது தன் கவனத்தைத் திருப்பினார். அந்தப் பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டப் போட்டியிட்ட பிரதிகர வம்சத்து அரசரான வாத்சர்யர், பாலர் வம்சத்தின் தர்மபாலர் என இருவரையும் தோற்கடித்தார். வாரிசாக தனது மகன் மூன்றாம் கோவிந்தரை நியமித்தார்.

மூன்றாம் கோவிந்தர் (பொ.ஆ. 794-814) ஆட்சியில் அமர்ந்த காலம் முன்னெப்போதும் இருந்திராத விதத்தில் வெற்றிகரமான ஆட்சிக்கு வழி அமைத்தது. பல்லவ அரசர் தண்டிகர் வீழ்த்தப்பட்டார். வேங்கியை ஆண்ட விஷ்ணுவர்த்தனர் அவரது தாய்வழிப் பாட்டனாக இருந்ததால் அவர் மூன்றாம் கோவிந்தரின் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. கோவிந்தர் தக்காணத்தில் தனி ஆதிக்கம் செலுத்துபவராக ஆனார். ராஷ்டிரகூடர்களின் ராஜ்யம் அதன் புகழின் உச்சத்தை அடைந்தது.

மூன்றாம் கோவிந்தருக்குப் பின்னர் அவரது மகன் அமோகவர்ஷர் (சுமார் கி.பி. (பொ.ஆ) 814 - 878) ஆட்சிக்கு வந்தார். அமோகவர்ஷர் அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அதில் முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலைக் கங்கர்களுடன் போர் நீடித்தது. கங்கர் வம்சத்து இளவரசர் ஒருவருக்கு அமோகவர்ஷர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததின் மூலம் அப்பகுதியில் அமைதி திரும்பியது. அமோகவர்ஷர் கலை, இலக்கியத்திற்கு ஆதரவளித்தார். புகழ் பெற்ற திகம்பர ஆச்சார்யரான ஜீனசேனர், சமஸ்கிருத இலக்கண ஆசிரியரான சகடயானர், கணித மேதையான மஹாவீராச்சார்யர் ஆகியோருக்கு ஆதரவளித்தார். அமோகவர்ஷர் சிறந்த கவிஞராக இருந்தார். அவர் இயற்றிய “கவிராஜமார்க்கம்” கவிதையியல் பற்றிக் கன்னட மொழியில் இயற்றப்பட்ட முதல் நூலாகும். அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது வாரிசுகள் அரசாண்டனர். அவர்களுள் திறமையானவர் மூன்றாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 939 - 968) ஆவார்.

ராஷ்டிரகூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தனது மைத்துனர் புதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார். பொ.ஆ. 943ஆம் ஆண்டில் காஞ்சியும் தஞ்சாவூரும் கைப்பற்றப்பட்டன. ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை அவரது படை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பொ.ஆ. 949ஆம் ஆண்டில் தக்கோலம் (தற்கால வேலூர் மாவட்டம்) என்ற இடத்தில் நடந்த போரில் அவர் ராஜாதித்யனின் சோழர் படையைத் தோற்கடித்தார். மூன்றாம் கிருஷ்ணர் தெற்கே ராமேஸ்வரம் வரை படை கொண்டு சென்றார். அங்கு வெற்றியின் சின்னமாக ஒரு தூணை நிறுவினார். இவ்வாறு தக்காணம் முழுவதிலும் தன் ஆதிக்கத்தை நிறுவுவதில் அவர் வெற்றி கண்டார் அவரது ஆட்சியின் போதுதான் ராஷ்டிரகூடர்கள் கன்னோசியைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வர வட இந்திய ஆட்சியாளர்களுக்கிடையே நடந்த போட்டியில் இணைந்தனர். கன்னோசியைக் கைப்பற்றுவதற்கு அவர்களுக்கிடையே தொடர்ந்து நடந்த மோதலின் காரணமாக அந்தப் பிரதேசத்தின் குறுநில மன்னர்கள் சுயேச்சையாக இயங்கத் தலைப்பட்டனர். அவர்கள் காட்டிய எதிர்ப்பானது கன்னோசியை மையமாகக் கொண்டு வட இந்தியாவை ஆளும் ஒரு அரசு அமைவதின் வாய்ப்பைத் தகர்த்தது. வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்புகள் ஒரு வலுவான அரசை அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தடையாக இருந்தன. ஆனால் மூன்றாம் கிருஷ்ணருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் ராஷ்டிரகூட அரசை அதன் வீழ்ச்சியிலிருந்து காக்க முடியாத அளவிற்கு வலுவற்றவர்களாக இருந்தனர்.

முதலாம் அமோகவர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர்கள் சமண மதத்திற்கு ஆதரவளித்தனர். பௌத்த மதம் வழக்கொழிந்துவிட்ட நிலையில் அதன் முக்கியமான மையம் கன்கேரி என்ற இடத்தில் மட்டுமே இருந்தது.


மதம் : ராஷ்டிரகூடர்களின் ஆட்சிக் காலத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன. குடைவரைக் கோவிலாக உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற எல்லோரா சிவன் கோவில் முதலாம் கிருஷ்ணர் கட்டியதாகும். அரசு முத்திரைகளில் விஷ்ணுவின் வாகனமான கருடன், யோக நிலையில் அமர்ந்த சிவன் மற்றும் விஷ்ணுவின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. தந்தி துர்கர் உஜ்ஜையினியில் ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தினார். கோவில் தெய்வங்களுக்குத் தராசில் எடைக்கு எடை தங்கம் அளிப்பதான துலா தானத்தைக் குறித்த குறிப்புகள் கிடைத்துள்ளன.


ஹிரண்யகர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள். மதகுருக்கள் விரிவான சடங்குகளை நடத்திய பின்னர் தங்கத்தாலான கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் மேலுலக ஆற்றல் கொண்ட உடலைப்பெற்றவராக, மறுபடியும் பிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார். சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.


இலக்கியம் : ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வியைப் போற்றினார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. முதலாம் அமோகவர்ஷர் பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும், கவிராஜமார்க்கம் எனும் கன்னட நூலையும் இயற்றினார். ஜீனசேனர் சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார். இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார். பழங்காலக் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட கவிச்சக்கரவர்த்தி பொன்னா, ஆதிகவி பம்பா, கவிச்சக்கரவர்த்தி ரன்னா ஆகியோர் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணராலும், மேலைச் சாளுக்கிய அரசர்களான தைலபா, சத்யஷ்ரேய ஆகியோராலும் ஆதரிக்கப்பட்டனர்.


கட்டடக்கலை : ராஷ்டிரகூடர்கள் இந்தியச் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பைச் செய்துள்ளனர். தற்கால மஹாராஷ்டிரத்தில் அமைந்துள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோவில்கள் அவர்களது ஆட்சிக் காலத்தில் உருவானவையாகும். எல்லோரா குடைவரைக் கோவில் வளாகம் பௌத்த, சமண, இந்து மதச் சின்னங்களுக்கான கலை நுட்பத்தைக் கொண்டுள்ளது. முதலாம் அமோகவர்ஷர் சமண மதத்தை ஆதரித்தார். அவரது காலத்தியது எனக் கூறப்படும் ஐந்து சமண குகைக் கோவில்கள் எல்லோராவில் அமைந்துள்ளன.

எல்லோராவில் நமது கருத்தைக்கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோவிலாகும். எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். அது சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன், தான் பல்லவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக கர்நாடகத்தில் பட்டாடக்கல் என்னும் இடத்தில் எழுப்பிய லோகேஷ்வரர் கோவிலை ஒத்துள்ளது. தசாவதார பைரவர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன், விஷ்ணுவும் லட்சுமியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சிறந்த சான்றுகளாகும். 

எலிஃபண்டாவின் பிரதான கோவில் எல்லோராவில் அமைந்துள்ள கோவிலை விடவும் சிறந்ததாகும். நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அழகிலும் கலை நுட்பத்திலும் எல்லோரா சிற்பங்களை விட மேன்மை கொண்டவையாக விளங்குகின்றன. அர்த்த நாரீஸ்வரர், மகேசமூர்த்தி ஆகியோரின் சிலைகள் புகழ் பெற்ற சிற்பங்களாகும். இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச்சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும். கைலாசநாதர் கோவிலின் வெளித்தாழ்வாரத்திலும், எல்லோராவில் உள்ள கோவிலின் விதானத்திலும் கூரையிலும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் இன்றளவும் சிறப்புறக் காட்சி தருகின்றன.


பாடச் சுருக்கம் :


I ஹர்ஷர் :

  • குப்தர், வர்த்தனர் ஆகியோரது ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் சுயேச்சையான அரசுகள் தோன்றின. வட இந்தியா வலுவான மையப்படுத்தப்பட்ட அதிகாரமின்றிக் காணப்பட்டது.
  • ஹூணர், வல்லபியின் மைத்ரகர், கன்னோசியின் மௌகாரியர், மாண்டசோரின் வகடர், தானேஸ்வரத்தின் புஷ்யபூதி, மகதத்தின் பிற்கால குப்தர் ஆகியோர் பிரதேச முடியரசர்களாகத் திகழ்ந்தனர்.
  • ஹர்ஷர், சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார். சீனப் பயணியான யுவான் சுவாங் அக்காலத்தில் நிலவிய மக்களின் சமூக, மத சூழ்நிலைகளைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்திருந்தார்.
  • ஹர்ஷர் பௌத்த மதத்திற்கு ஆதரவளித்தார். கன்னோசியிலும் பிரயாகையிலும் பௌத்த மதக் கூட்டங்களைக் கூட்டினார்.

II பாலர்கள் :

• பாலர் வம்சத்தைத் தோற்றுவித்த கோபாலர் குறுநில மன்னர்களால் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• தர்மபாலர், தேவபாலர், முதலாம் மஹிபாலர் ஆகியோர் திறமையுடன் ஆட்சி புரிந்து பல பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

• விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழகங்களுக்குப் பாலர்கள் அளித்த ஆதரவு பெளத்த, சமண, சமஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.

III ராஷ்டிரகூடர்கள் :

• முதலாம் கிருஷ்ணர் முதல் மூன்றாம் கிருஷ்ணர் வரை வெற்றிகரமான ஆட்சியாளர்களின் காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு வலிமை மிக்க அரசாக உருவானது.

• இலக்கியம் ராஷ்டிரகூடர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. சமஸ்கிருத, கன்னட அறிஞர்கள் தழைத்தோங்கினர்.

• எல்லோராவிலும் எலிஃபண்டாவிலும் காணப்படும் கலை நுட்பம் இவர்களது பங்களிப்பே ஆகும்.


Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...