அறிமுகம்
பதின்மூன்று முதல் பதினாறாம் நூற்றாண்டு முற்பகுதி வரையான காலத்தில் (1200 - 1550) இஸ்லாமிய அரசு (தில்லி சுல்தானியம்) நிறுவப்பட்டது. இதன் விளைவாக இஸ்லாமிய நிறுவனங்களும் இஸ்லாமியப் பண்பாடும் இந்தியாவில் காலூன்றின. இக்காலகட்டத்தின் வரலாற்றை வெவ்வேறு கண்ணோட்டத்தில் வரலாற்றாசிரியர்கள் விளக்கியுள்ளனர். தனிப்பட்ட சுல்தான்களின் சாதனைகளையும் தோல்விகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு சுல்தானிய ஆட்சியை மதிப்பிடுவது வழக்கம். தனிநபரை முன்வைத்து வழக்கமாக எழுதப்படும் வரலாற்றை ஏற்க மறுக்கிற வரலாற்றாசிரியர்கள, சுல்தானிய ஆட்சி பொருளாதாரம், பண்பாட்டு வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது என்றும், இதன் மூலம் இந்தியாவில் ஒரு பன்முகப் பண்பாடு தோன்றுவதற்கு வழிவகுத்தது என்றும் கூறுகின்றனர். வர்க்க உறவுகளின் அடிப்படையில் வரலாற்றைக் கணிக்கும் வரலாற்றாசிரியர்களின் பார்வையில் மத்திய கால அரசுகள், ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாகவே செயல்பட்டன; எனவே, முகலாயர் ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் சுல்தானிய ஆட்சியில் அமைப்பு ரீதியான முன்னேற்றம் மிகக் குறைவு என்று கருதுகின்றனர். இவ்வாறாக, சுல்தானிய ஆட்சியின் இயல்பை முடிவு செய்வதில் அறிஞர்களிடையே இன்னமும் கருத்தொற்றுமை இல்லை.
இப்பாடம் இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது: (அ) சுல்தானிய ஆட்சிக் கால அரசர்கள், நிகழ்வுகள், கருத்துகள், மக்களின் நிலை குறித்த ஒரு வழக்கமான கற்றலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வது. (ஆ) மாணவர்கள் அதன் சரி, தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து, புதிய வினாக்களை எழுப்புகிற விதத்தில் பாடத்தின் உள்ளடக்கத்தை அமைத்தல்.
அரபியரின் வருகை: பின்னணி
இந்தியாவுக்கும் அரபியாவுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் ஏற்பட புவியியல் ரீதியான அமைவிடம் உதவியது. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, கடல்வழி வணிகத்தில் அரபியர் ஈடுபட்டிருந்தனர். இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளுடன் கடல்வழி வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிந்தியாவின் மேற்கு (மலபார்), கிழக்குக் (கோர மண்டல்/ சோழமண்டல) கடற்கரைகளில் குடியேறினர். மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியமர்ந்த அரபியர், “மாப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டனர். பொ .ஆ. 712இல் மேற்கொள்ளப்பட்ட அரபியப் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து நடந்த கஜினி, கோரி மன்னர்களின் படையெடுப்புகளும் இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தைக் கொண்டு மத்திய ஆசியாவில் அவர்கள் ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தன. இதனுடன், கஜினி மாமுதுவும், முகமது கோரியும் நிகழ்த்திய திடீர்த் தாக்குதல்கள், ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்புக்குள்ளானவர்கள் என்ற உறவை ஏற்படுத்தின. குரசன் நாட்டு (கிழக்கு ஈரான்) ஷா, பின்னர் செங்கிஸ்கான் ஆகியோர் ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்ததும், வட இந்திய சுல்தான் ஆட்சிக்கு ஆஃப்கானிஸ்தானுடனிருந்த உறவுகளைத் துண்டித்தன. மங்கோலியப் படையெடுப்புகள், கோரி சுல்தானிய ஆட்சியையும் கஜினியையும் அழித்து உச், மற்றும் முல்தானின் அரசர் சுல்தான் நசுருதீன் குபாச்சாவின் (1206-28) கருவூலத்தைக் காலியாக்கின. இவ்வாறாக, வட இந்தியாவில் தமது செல்வாக்கை விரிவுபடுத்துகிற நல்வாய்ப்பு சுல்தான் இல்துமிஷுக்கு இருந்தது. இது, தில்லியைத் தலைநகராகக் கொண்டு இந்திய மாகாணங்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் ஆள்வதற்கு வழிவகுத்தது.
இக்காலகட்டத்தை இஸ்லாமிய ஆட்சிக் காலம் என்று விவரிப்பது வழக்கம். இருப்பினும் மத்திய இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள், பல்வேறு பிரதேசங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்களாவர்; அரபியரும், துருக்கியரும், பாரசீகத்தவரும், மத்திய ஆசியரும் இராணுவத்திலும் நிர்வாகத்திலும் பங்கு கொண்டிருந்தனர். இல்துமிஷ் ஓர் இல்பாரி துருக்கியர் (Ilbari Turk) என்பதோடு அவரது இராணுவ அடிமைகள் பலரும் புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் ஆகிய இடங்களைச் சேர்ந்த வணிகர்களால் தில்லிக்கு அழைத்துவரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டோர் துருக்கிய, மங்கோலிய வழி வந்தவர்களாவர். பிற இனங்களைச் சேர்ந்த அடிமைகளும் (குறிப்பாக, மத்திய இந்தியாவின் மிஹிரிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட ஹிந்து கான்) இருந்தனர் என்றாலும், இல்துமிஷ் அவர்கள் அனைவருக்கும் துருக்கியப் பெயர்களையே சூட்டினார்.
இக்காலகட்ட (1206-1526) தில்லி சுல்தானியம் ஒரே மரபைச் சேர்ந்த ஆட்சியாளர்களால் ஆளப்படவில்லை. அதன் ஆட்சியாளர்கள் ஐந்து வெவ்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள் அ) அடிமை வம்சம் (1206-1290), ஆ) கில்ஜி வம்சம் (1290-1320), இ) துக்ளக் வம்சம் (1320-1414), ஈ) சையது வம்சம் (1414-1451), உ) லோடி வம்சம் (1451-1526).
டெல்லி சுல்தானியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகள்
- அல்-பெருனி : தாரிக்-அல்-ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்)
- மின்ஹஜ் உஸ் சிராஜ்: தபகத்-இ-நசிரி (1260) (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு)
- ஜியாவுத்தின் பாரனி : தாரிக்-இ-பெரோஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு
- அமிர் குஸ்ரு: மிஃப்தா உல் ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்); கஜைன்; உல் ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் - பாரசீக மொழியில்)
- துக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)
- சம்ஸ்-இ-சிராஜ் அஃபிஃப்: தாரிக் இ ஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது)
- குலாம் யாஹ்யா பின் அஹ்மத்: தாரிக் இ-முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)
- ஃபெரிஷ்டா : இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி)
சிந்து மீது அரபுப் படையெடுப்பு
ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ்-பின்-யூசுஃப், கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி, சிந்து அரசர் தாகிரை எதிர்த்து, தரை வழி, கடல் வழி என இரு தனித்தனி படைப் பிரிவுகளை அனுப்பினார். ஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன; அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர். பிறகு ஹஜஜ், கலிபாவின் அனுமதியுடன் 6000 வலுவான குதிரைப் படை, போர்த் தளவாடங்களைச் சுமந்து வந்த ஒரு பெரிய ஒட்டகப் படை ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான இராணுவத்தைப் 17 வயது நிரம்பிய தனது மருமகன் முகமது பின் - காசிம் தலைமையில் அனுப்பினார்.
முகமது-பின்-காசிம்
காசிமின் படை, பிராமணாபாத் வந்து சேர்ந்த நேரத்தில் சிந்துப் பகுதியில் தாகிர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியை தாகிரின் முன்னோர்கள் பெளத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி நடத்தி வந்தனர். ராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் பிராமணர்களே இருந்தனர். இதனால் அந்நகரம் பிராமணாபாத் எனப்பட்டது. அரசர் தாகிர் அவரது முதன்மை அமைச்சர் ஆகியோருக்கிடையே அப்போது கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. முகமது காசிம் படையெடுத்தபோது, முதன்மை அமைச்சர் அவருக்குத் துரோகம் இழைத்ததால் தாகிருடைய படையின் ஒரு பகுதி விலகிக்கொண்டது. மக்களும் மன்னர் மீது அதிருப்தி அடைந்திருந்த சூழலில், முகமது–பின்-காசிம், பிராமணாபாத்தை எளிதில் கைப்பற்றினார். தாகிரை விரட்டிச் சென்ற காசிம் ரோஹ்ரியில் நிகழ்ந்த ஒரு மோதலில் அவரைக் கொன்றார். அதன் பிறகு காசிமின் படை, சிந்துவின் தேபல் துறைமுக நகரத்தை அழித்து மூன்று நாள்கள் கொள்ளையடித்தது. சிந்து மக்களைச் சரணடையுமாறு காசிம் கேட்டுக்கொண்டார்; அவர்கள் தத்தமது மதத்தைப் பின்பற்றுவதற்கு முழுப் பாதுகாப்பு தருவதாகவும் வாக்களித்தார். தான் கொள்ளை அடித்ததில் வழக்கமான ஐந்தில் ஒரு பங்கைக் கலிபாவுக்கு அனுப்பிவைத்த காசிம், எஞ்சியதைத் தனது படைவீரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
அரேபியரின் சிந்து படையெடுப்பானது ஒரு "விளைவுகளற்ற வெற்றியாகவே" குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது நாட்டின் எல்லைப்பகுதியை மட்டுமே தொட்டதோடு காசிமின் படையெடுப்பிற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் பல்வேறு முற்றுகைகள் இன்றி அமைதியாக இருந்தது.
கஜினி மாமுது
இதனிடையே, மத்திய ஆசியாவிலிருந்த அரபியப் பேரரசு உடைந்து, அதன் பல மாகாணங்கள், தங்களைச் சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டன. இவற்றில் ஒன்றுதான் சாமானித் (Shamanid) பேரரசு. பிறகு இதுவும் உடைந்து, பல சுதந்திர அரசுகள் தோன்றின. சாமானித் பேரரசில் குரசன் ஆளுநராக இருந்த துருக்கிய அடிமை அல்ப்டிஜின், 963இல் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்த கஜினி நகரைக் கைப்பற்றி, ஒரு சுதந்திர அரசை நிறுவினார். பிறகு விரைவிலேயே அல்ப்டிஜின் இறந்துபோனார். தொடர்ந்து அவரது வாரிசாக வந்த மூவரின் தோல்வியால், உயர்குடிகள் சபுக்தஜின்னுக்கு முடிசூட்டினர்.
இந்தியாவில் இஸ்லாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை சபுக்தஜின் தொடங்கிவைத்தார். ஆப்கானிஸ்தான் ஷாஹி அரசர் ஜெயபாலரைத் தோற்கடித்து, அம்மாகாணத்தில் தனது மூத்த மகன் மாமுதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். 997இல் சபுக்தஜின் இறந்த போது, கஜினி மாமுது குரசனில் இருந்தார். இதனால், சபுக்தஜினின் இளைய மகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிறகு, தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்தேழு வயது கஜினி மாமுது ஆட்சியில் அமர்ந்தார். கஜினி மாமுது ஆட்சிப் பொறுப்பு ஏற்றதை , ஒரு பதவியேற்பு அங்கியை அளித்தும் யாமினி - உத்-தவுலா (‘பேரரசின் வலது கை’) என்ற பட்டத்தை வழங்கியும் கலிபா அவரை அங்கீகரித்தார்.
அரபியரும் இரானியரும் இந்தியாவை 'ஹிந்த்' என்றும், இந்தியர்களை ‘ஹிந்துக்கள்’ என்றும் குறிப்பிட்டனர். இருப்பினும் இந்தியாவில் இஸ்லாமிய சமுதாயம் தோன்றிய பிறகு ‘ஹிந்து’ எனும் பெயர் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களைக் குறிப்பதாயிற்று.
கஜினி மாமுதின் தாக்குதல்கள்
32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினி மாமுது, பதினேழு முறை இந்தியா மீது தாக்குதல்களை நடத்தினார். செல்வக் களஞ்சியமாக இருந்த இந்துக் கோவில்களில் கொள்ளை அடிப்பதே முதன்மை நோக்கம். இருப்பினும் கோவில்களை இடிப்பது, சிலைகளைத் தகர்ப்பது ஆகிய நடவடிக்கைகளும் நடந்தன. இதை கஜினி மாமுதுவின் படைவீரர்கள், தங்களது கடவுளின் வெல்லப்பட முடியாத ஆற்றலின் விளைவாகக் கண்டனர். ‘பிற மதத்தினரை’ வெட்டிக் கொல்வதிலும், அவர்களது வழிபாட்டுத் தலங்களை அழிப்பதிலும் கஜினி மாமுதுவின் படையினரின் மதப்பற்று வெளிப்பட்டது. எனினும் மக்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. தங்களது உயிரையும் உடைமைகளையும் காத்துக்கொள்வதற்காக இஸ்லாமியராக மாறியவர்கள் கூட கஜினி மாமுதுவின் படையெடுப்பு முடிவுக்கு வந்ததும் தங்களின் மதத்துக்கே திரும்பினர்.
ஷாஹி அரசன் அனந்த பாலரைத் தோற்கடித்த கஜினி மாமுது, பிறகு பஞ்சாபைக் கடந்து கங்கைச் சமவெளிக்குள் நெடுந்தொலைவு உள்ளே வந்தார்; கன்னோசி சென்றடைவதற்கு முன்னர் மதுராவைச் சூறையாடினார். தொடர்ந்து கஜினி மாமுது, 1025இல் குஜராத் கடற்கரையிலுள்ள கோவில் நகரமான சோமநாதபுரத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்தார். சோமநாத புரக் கோவில் கொள்ளை பற்றிய ஆங்கிலேய காலனிய, மற்றும் இந்திய தேசியவாதிகளின் வரலாற்றியல்கள் மாமுதுவைக் கொடும் படையெடுப்பாளராக சித்தரிக்கின்றன. கஜினியின் இக்கொள்ளைகளை, மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதைவிட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதே பொருந்தும் எனப் பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மத்திய கால இந்தியாவில் வழிபாட்டிடங்களைச் சூறையாடுவதும் கடவுள் திருவுருவங்களை அழிப்பதும் பேரரசின் ஏகபோக அதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவே கருதப்பட்டன. கஜினி மாமுதின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே. மேலும், கஜினி மாமுது கொள்ளை அடித்தது, அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடுசெய்யும் தேவையினால் ஏற்பட்டது. துருக்கியப் படை என்பது நிரந்தரமான, தொழில் நேர்த்திப் பெற்ற படையாகும். அது தெரிந்தெடுத்து தகுதி உயர்த்தப்பட்ட வில்லாளிகள் பிரிவை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது; இவர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளாவர்; இவர்களுக்குப் பயிற்சியளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் இந்து அரசாட்சிகளிலிருந்தும் ஈரானின் இஸ்லாமிய அரசாட்சிகளிலிருந்தும் அடிக்கப்பட்டப் போர்க் கொள்ளையிலிருந்து இவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது.
இந்தப் போர்க் கொள்ளைகளில் கைப்பற்றப்பட்ட செல்வம் குறித்துப் பாரசீகக் குறிப்புகள் மிகைப்படுத்திக் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, 1029இல் ரேய் என்ற ஈரானிய நகரத்தைச் சூறையாடியதில் கஜினி மாமுதுவுக்கு 500,000 தினார்கள் மதிப்புள்ள ஆபரணங்கள், நாணயங்களாக 260,000 தினார்கள், 30,000 தினார்கள் மதிப்புடைய தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இது போலவே, சோமநாதபுரத்தைச் (1025) சூறையாடியதில், 2 கோடி தினார் மதிப்புடைய கொள்ளைப் பொருள்கள் கஜினி மாமுதுவுக்குக் கிடைத்ததாக நம்பப்படுகிறது. வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், “சோமநாதபுரப் படையெடுப்பு குறித்த தகவல்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழிப் பதிவுகளில் காணப்படுகின்றன. ஆனால், இதன் சமகால சமண மதச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்தவில்லை” என்கிறார். “இத்தகைய திடீர் இராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்புவாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர்முறையிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையையுமே அவை வெளிப்படுத்துகின்றன” என்கிறார்.
கஜினி மாமுது இறந்த பிறகு கஜினி வம்சத்தில் உறவினர்களிடையே அரச வாரிசுரிமை தொடர்பாக முடிவற்ற மோதல்கள் நிகழ்ந்தன. இருப்பினும், 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த சுல்தான் இப்ராஹிம், 17 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த அவரது மகன் மசூத் போன்ற சில விதிவிலக்குகளும் இருந்தனர். வடக்கே கோரிகளிடமிருந்தும் மேற்கே செலிஜுக் துருக்கியரிடமிருந்தும் கஜினி வம்ச ஆட்சிக்கு நிரந்தர அபாயம் இருந்து வந்தது. இது அரசாட்சிக்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால், கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் லாகூர் பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது; இதுவும் கூட முப்பது ஆண்டுகளே நீடித்தது. 1186இல் கோரி அரசர் மொய்சுதீன் முகமது என்கிற கோரி முகமது, பஞ்சாப் மீது படையெடுத்து லாகூரைக் கைப்பற்றினார். கஜினி வம்சத்தின் கடைசி அரசர் குரவ் ஷா, 1192இல் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்துடன் கஜினி அரசு முடிவுக்கு வந்தது.
கணிதவியலாளரும் தத்துவஞானியும் வானியலாளரும் வரலாற்று ஆசிரியருமான அல்-பெருனி, கஜினி மாமுதுவுடன் இந்தியா வந்தார். கிதாப்-உல்-ஹிந்த் என்ற தனது நூலை இயற்றுவதற்கு முன்பு அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார்; இந்து மத நூல்களையும் தத்துவ நூல்களையும் கற்றார். யூக்ளிடின் கிரேக்க நூலைக்கூட அவர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். ஆரியபட்டரின் முக்கிய நூலான ஆர்யபட்டியம் (புவி, அதன் அச்சில் சுழல்வது இரவு பகலை ஏற்படுத்துகிறது போன்ற செய்திகளை உள்ளடக்கிய நூல்) என்பதை அவர் மேலை நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். இந்தியாவுக்கும் பிற உலக நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார்.
கோரி முகமது
கஜினியின் படையெடுப்புகள் கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டவை. இதனை விரிவுபடுத்திக் கொள்ளையடித்த செல்வமும், திறையும் தொடர்ந்து சீராக வந்து சேர்வதை உறுதி செய்துகொள்ள படையரண் நகரங்களை கோரிகள் அமைத்தனர். கோரி முகமது, தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். 1180களிலும் 1190களிலும் நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். விரைவிலேயே இந்தப் படை மையங்களில், ராணுவத்தில் சேர வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்த கூலிப்படை வீரர்கள் குடியேறினர். இப்படைவீரர்கள், சுல்தானிய அரசின் வருவாய், படை விவகாரங்களை ஒழுங்கமைக்கப் பணியமர்த்தப்பட்டனர். வட இந்தியாவில் 1190இலிருந்து சுல்தானின் படைத் தளபதிகள், அடிமைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். போர் முறையிலும் நிர்வாகத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற இந்த அடிமைகள், நிலத்தோடும் விவசாய உழைப்போடும் வீட்டு வேலைகளோடும் தொடர்புடைய அடிமைகளிலிருந்து மாறுபட்டவர்கள். தொடக்கத்தில், உச், லாகூர், முல்தான் ஆகியன குறிப்பிடத்தக்க அதிகார மையங்களாகக் கருதப்பட்டன. 1175இல் முல்தான் மீது படையெடுத்த கோரி முகமது, அதை அதன் இஸ்மாயிலி வம்ச ஆட்சியாளரிடமிருந்து கைப்பற்றினார். தொடர்ந்து உச் கோட்டையும் தாக்குதல் இன்றியே பணிந்தது. எனினும், குஜராத்தின் சாளுக்கியர் அபு மலையில் கோரி முகமதுவுக்கு ஒரு பயங்கரத் தோல்வியைக் கொடுத்தனர் (1179). இந்தத் தோல்விக்குப் பிறகு கோரி முகமது, தமது படையெடுப்பின் போக்கை மாற்றிக்கொண்டு சிந்துவிலும் பஞ்சாபிலும் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார்.
பிருத்விராஜ் சௌகான்
அஜ்மீர் சௌகான்களின் இராணுவ முக்கியத்துவத்துவம் வாய்ந்த தபர்ஹிந்தா (பட்டிண்டா) கோட்டையை முகமது கோரி தாக்கினார். அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகான், தபர்ஹிந்தாவுக்கு அணிவகுத்துச் சென்று 1191இல் முதலாவது தரெய்ன் போரை நிகழ்த்தினார். இந்தப் போரில் ஒரு முழுமையான வெற்றியை பிருத்விராஜ் பெற்றார். எனினும் இதை ஓர் எல்லைப்புறச் சண்டையாக மட்டுமே கருதியதால் அங்கே தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், கோரிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துவார்கள் என்றும் அவர் எதிர்ப்பார்க்கவில்லை . தரெய்ன் போரில் முகமது கோரி காயமடைந்தார்; ஒரு குதிரை வீரன் அவரை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றார். பிருத்விராஜ் சௌகான் நினைத்ததற்கு மாறாக, அடுத்த ஆண்டில் (1192) முகமது கோரி அஜ்மீர் மீது மீண்டும் படையெடுத்தார். கோரியின் ஆற்றலைப் பிருத்விராஜ் குறைத்து மதிப்பிட்டார். கோரிக்கு எதிராக ஒரு சிறிய படைக் குழுவுக்குத் தலைமையேற்றுச் சென்றார். இந்த இரண்டாவது தரெய்ன் போரில், பிருத்விராஜ் தோல்வி அடைந்தார்; இறுதியில் சிறைப் பிடிக்கப்பட்டார். இந்திய வரலாற்றின் திருப்புமுனைகளுள் ஒன்றாக இந்தப் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி, மீண்டும் அஜ்மீரின் ஆட்சியை பிருத்விராஜிடமே ஒப்படைத்தார். பின்னர், இராஜதுரோகக் குற்றம் சாட்டி, அவரைக் கொன்றார்; தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப் பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.
கன்னோசி அரசர் ஜெயசந்திரர்
கன்னோசி அரசர் ஜெயசந்திரரை எதிர்த்துப் போர்புரிய மீண்டும் விரைவிலேயே முகமது கோரி இந்தியா வந்தார். கோரியை எதிர்த்த போரில் ராஜபுத்திரத் தலைவர்கள் யாரும் ஜெயச்சந்திரனை ஆதரிக்கவில்லை. அவர்கள் பிருதிவிராஜ் பக்கம் நின்றனர். ஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தாவைப் பிருதிவிராஜ் கடத்திச் சென்றதையொட்டி இருவருக்குமிடையே பகை இருந்தது. இதனால் தனிமைப்பட்டு நின்ற ஜெயசந்திராவை எளிதாக வென்ற முகமது கோரி, ஏராளமான கொள்ளைச் செல்வத்துடன் திரும்பினார். திரும்பும் வழியில், சிந்து நதிக் கரையில் தங்கியிருந்த போது, அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டார்.
ராஜபுத்திர அரசுகள்
பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜபுத்திர அரசான கூர்ஜர பிரதிகார் மற்றும் ராஷ்டிரகூடர் ஆகிய வலுவான இரண்டு அரசுகள் தங்களின் அதிகாரத்தை இழந்தன. டோமர் (தில்லி), சௌகான் (ராஜஸ்தான்), சோலங்கி (குஜராத்), பரமர் (மால்வா), கடவாலா (கன்னோசி), சந்தேலர் (பந்தேல்கண்ட்) ஆகியவை வட இந்தியாவின் முக்கியமான அரச வம்சங்கள் ஆகும். முதன்மையான இரு சௌகான் அரசர்களான விக்ரகராஜ், பிருத்விராஜ், பரமர் வம்சத்தின் போஜர், கடவாலா அரசன் ஜெயசந்திரா, சந்தேலரான யசோவர்மன், கீர்த்தி வர்மன் ஆகிய அனைவரும் வலுவாக இருந்தனர்.
ராஜபுத்திரர்கள் போர்ப் பாரம்பரியம் கொண்டவர்கள். துருக்கியரும் ராஜபுத்திரரும் ஒரே மாதிரியான ஆயுதங்களையே பயன்படுத்தினர். எனினும், படை ஒழுங்கிலும் பயிற்சியிலும் ராஜபுத்திரர்கள் கவனமின்றியிருந்தனர். அதே நேரத்தில் நிலைமைகளுக்குத் தக்கவாறு உத்திகள் வகுப்பதில் துருக்கியர் வல்லவர்களாயிருந்தனர். துருக்கிய குதிரைப் படை, இந்திய குதிரைப் படையை விட மேம்பட்டதாயிருந்தது. ராஜபுத்திரப் படை யானைகளை மையப்படுத்தி இருந்தது. யானைகளுடன் ஒப்பிடுகிறபோது குதிரைகள் பன்மடங்கு வேகம் கொண்டவை. இது, போரில் துருக்கியர்களுக்குச் சாதகமாக அமைந்தது. எனவே, அவர்கள் பகைவரை எளிதில் வென்றனர்.
லட்சுமணர் கோவில், விஸ்வநாதர் கோவில், கந்தரியா மகாதேவர் கோவில் உள்பட பல கோவில்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோவில் வளாகம், கஜுராஹோவிலிருந்து ஆட்சிபுரிந்த பந்தேல்கண்ட் சந்தேலர்களால் கட்டப்பட்டது.
தில்லி சுல்தானியத்தின் தோற்றம்
அடிமை வம்சம்
முகமது கோரி இறந்த பிறகு அதிகாரத்துக்கு மூவர் போட்டியிட்டனர். ஒருவர் குத்புதீன் ஐபக். இவர், தில்லியில் அரியணை ஏறினார்; ஆனால் அவரது மாமனார் இல்திஸ், ஆட்சிக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தார். இந்த வம்சத்தின் மூன்று முக்கியமான ஆட்சியாளர்கள் : குத்புதீன் ஐபக், இல்துமிஷ், பால்பன்.
அடிமை வம்சத்தை மம்லக் வம்சம் என்றும் கூறுவர். மம்லக் என்பதற்கு உடைமை என்று பொருளாகும். இது, 'ஓர் அடிமை' என்பதற்கான அரபுத் தகுதிப் பெயருமாகும்.
குத்புதீன் ஐபக் (1206-1210)
குத்புதீன் ஐபக், சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார். அவரது திறமையையும் விசுவாசத்தையும் கண்ட முகமது கோரி, இந்தியாவில் தான் வெற்றிபெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார். பீகாரையும் வங்கத்தையும் கைப்பற்றுவதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த முகமது - பின் – பக்தியார் கில்ஜி என்ற ஒரு துருக்கியத் தளபதி குத்புதீன் ஐபக்-கிற்கு உதவினார். குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206-1210) ஆட்சி புரிந்தார்; அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். 1210இல் லாகூரில் சௌகான் (குதிரை போலோ) எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார்.
புகழ்பெற்ற நாளந்தா பௌத்தப் பல்கலைக் கழகத்தை அழித்தவர் பக்தியார் கில்ஜி என்று கருதப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில் நாளந்தா குறித்து விரிவாகக் - குறிப்பிட்டுள்ளார். நாளந்தா நூலகத்தில் இருந்த இலக்கணம், இலக்கியம், தர்க்கம், வானியல், மருத்துவம் குறித்த நூறாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் நூல்களும் துருக்கியச் சூறையாடலில் அழிந்தன.
இல்துமிஷ் (1211-1236)
சம்சுதீன் இல்துமிஷ் (1211-1236) துருக்கிய இனத்தைச் சார்ந்த குத்புதீன் ஐபக்கின் அடிமை. இல்துமிஷ்-இன் மேல் தட்டு அடிமைகள் பலரும் துருக்கிய, மங்கோலிய வழித்தோன்றல்கள். அவர்களை புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் போன்ற வணிக மையங்களிலிருந்து வணிகர்கள் தில்லிக்கு அழைத்துவந்தனர். எனினும் இவர்கள் அனைவருக்குமே துருக்கியப் பட்டங்களை சம்சுதீன் இல்துமிஷ், கொடுத்தார். தனது மேல்தட்டு இராணுவ அடிமைகளையே (பண்டகன்) அவர் நம்பியிருந்தார். தொலைவிலுள்ள இடங்களில் அவர்களையே ஆளுநர்களாகவும் தளபதிகளாகவும் நியமிக்கிற வழக்கத்தையும் கைக்கொண்டார். இக்காலகட்டத்தில் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த அனுபவமிக்க இராணுவத் தளபதிகள் வட இந்தியாவுக்குள் குடிபெயர்ந்த போதிலும், பழைய வழக்கத்தை இல்துமிஷ் மாற்றிக்கொள்ளவில்லை.
குத்புதீனின் அடிமையும் மருமகனுமான சம்சுதீன் இல்துமிஷ், குத்புதீன் ஐபக்கின் மகன் ஆரம் ஷா ஆட்சிக்கு வருவதைத் தடுத்து, தானே தில்லியின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். தனது ஆட்சிக்காலத்தில் அவர் குவாலியர், ரான்தம்பூர், அஜ்மீர், ஜலோர் ஆகிய இடங்களில் ராஜபுத்திரர்களுக்கிடையே நிலவிய குழப்பங்களை முடித்துவைத்தார். லாகூரிலும் முல்தானிலும் நசுருதீன் குபச்சாவின் படையை எதிர்த்து வெற்றிபெற்றார். வங்க ஆளுநர் அலிவர்தனின் சதியையும் முறியடித்தார். மங்கோலியசெங்கிஸ்கானுக்கும் மத்திய ஆசியாவின் கவாரிஸ்மி ஷா ஜலாலுதீனுக்கும் இடையே போர்ப்பகை இருந்தது. இல்துமிஷிடம் ஜலாலுதீன் ஆதரவு கேட்டார். இல்துமிஷ், அவரை ஆதரிக்க மறுத்துவிட்டார். ஜலாலுதீனை அவர், ஆதரித்திருந்தால் இந்திய வரலாறு பெரிதும் மாறி இருந்திருக்கும்; மங்கோலியர்கள் இந்தியாவை எளிதில் நாசம் செய்திருப்பார்கள். இல்துமிஷ்-இன் ஆட்சி, தில்லியில் 243 அடி உயரமுள்ள குதுப்மினார் என்ற ஒரு வெற்றித்தூணைக் கட்டிமுடித்ததற்கும் சுல்தான்கள் ஆட்சி காலத்தின் இரண்டு அடிப்படை நாணயங்களான செப்பு, வெள்ளி தங்காவை அறிமுகம் செய்ததற்கும் குறிப்பிடத்தகுந்தது
பண்டகன் என்பது பண்ட என்பதன் பன்மையாகும்; இச்சொல்லுக்குப் படை அடிமை என்று பொருள். இராணுவப் பணி அனுபவம், பேரரசருடனான நெருக்கம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தரம் பிரிக்கப்பட்டார்கள். இந்த நம்பிக்கை, அவர்கள் ஆளுநர்களாகவும் தளபதிகளாகவும் நியமிக்கப்படுவதற்கு வழிகோலியது. வட இந்தியாவில் குரித் பண்டகன், மொய்சுதீன் கோரியின் அடிமைகளாவர். இந்த அடிமைகளுக்கு சொந்தச் சமூக அடையாளம் இல்லை ; இதனால் அவர்களது எஜமானர்கள் அவர்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டினர்; நிஸ்பா என்பதையும் உள்ளடக்கிய அப்பெயர்கள் அவர்களது சமூக அல்லது பிரதேச அடையாளத்தைக் குறித்தன. அடிமைகள், தங்களது எஜமானர்களின் நிஸ்பாவைக் கொண்டிருந்தனர்; எனவே மொய்சுதீன் அடிமை, மொய்சு எனும் நிஸ்பாவைக் கொண்டிருப்பார்; சுல்தான் சம்சுதீன் இல்துமிஷின் அடிமை, ஷம்ஸி பண்டகன் என்று குறிப்பிடப்படுவார்.
அடிமை வம்ச மரபுகள் பலவீனமானவை என்பதால், இல்துமிஷ் இறந்த பிறகு அவரது வாரிசுகள் ஆட்சிக்கு வருவது எளிதாக இல்லை . ஒரு பத்து ஆண்டுகளுக்குள், ஒரு மகன், ஒரு மகள் (சுல்தானா இரஸியா), மற்றொரு மகன், ஒரு பேரன் எனப் பலரும் ஆட்சிக்கு வந்தனர்; இறுதியில் அவரது கடைசி மகன் சுல்தான் இரண்டாம் நசிர் அல்லுதீன் முகமது (1246-66) அரசரானார். இல்துமிஷின் வாரிசுகள் தங்கள் தந்தையாரால் நியமிக்கப்பட்ட தளபதிகளையும் ஆளுநர்களையும் எதிர்த்து போரிட்டுத்தோற்றனர். மூத்த பிரபுக்களாகிய அவர்கள் தொடர்ந்து தில்லி அரசியலில் தலையிட்டனர். இல்துமிஷ் வாரிசுகளுக்கு நிபந்தனைகள் விதித்து வந்தனர். மூத்த அரச குடும்ப அடிமைகளுக்கு மாற்றாக இளைய தலைமுறையினரை சுல்தான் நியமித்தபோது, அவர்களுக்கு முன்னே அதிகாரம் செலுத்தியவர்களுக்கு நிகரான வலிமையான ஒன்றுபட்ட சுல்தானிய அரசு பற்றி அரசருக்கிருந்த கண்ணோட்டத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை
கிழக்கே லக்னோவதி (நவீன வங்கம்), மேற்கே பஞ்சாப், சிந்து மாகாணங்களில் நியமிக்கப்பட்ட அடிமை ஆளுநர்கள் தில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி சுதந்திர அரசுகளாக அறிவித்தனர். தில்லி சுல்தானின் மைய ஆட்சிப் பகுதிகளிலிருந்த (தில்லி மற்றும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகள்) அடிமை ஆளுநர்களும், தங்களை நிலைப்படுத்திக் கொண்டும் பக்கத்திலுள்ள குறுநிலத் தலைவர்களுடன் அணி சேர்ந்தும் சுல்தானுக்குக் கட்டுப்பட மறுத்தனர். ஷம்ஸியின் அடிமைகளுக்கும் அடுத்தடுத்து வந்த தில்லி சுல்தான்களுக்கும் இடையில் இருபதாண்டுகளுக்கு மோதல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு 1254 இல், வடமேற்கில் ஷிவாலிக் ஆட்சிப் பகுதிகளின் தளபதியாக இருந்த உலுக் கான், தில்லியைக் கைப்பற்றினார். உலுக் கான், இல்துமிஷ் ஆட்சியின்போது அடிமையாகவும் இளைஞராகவும் இருந்தவர். அவர் (சுல்தானுக்குத் துணையாக இருந்த) ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்று பொருள்படும், நயிப்-இ முல்க் என்று பட்டம் சூட்டிக்கொண்டார். பிறகு 1266இல் சுல்தான் கியாஸ்-உத்-தின் பால்பனாக தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.
பால்பன் (1266-1287)
பால்பன் அரசரானதும் தில்லி சுல்தானியத்தில் குழப்பங்கள் விளைவித்த பிரபுக்களின் அரசியல் சூழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. பால்பன், தனது ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, அடங்க மறுத்த ஆளுநர்கள் மீதும் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகள் மீதும் தாக்குதல் தொடுத்தார். தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை பரணி குறிப்பிடுகிறார். இந்தத் தாக்குதல்களின் போது காடுகள் அழிக்கப்பட்டன; புதிய சாலைகள் அமைக்கப்பட்டன; காடுகள் அழிக்கப்பட்ட புதிய நிலங்கள், புதிதாகப் படையில் சேர்ந்த ஆஃப்கானியர்களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகையில்லா நிலங்களாக (மஃப்ருஸி) வழங்கப்பட்டு, அவை பயிரிடப்பட்டன. வணிகத் தடங்களையும் கிராமச் சந்தைகளையும் பாதுகாக்கப் புதிய கோட்டைகள் கட்டப்பட்டன.
இரஸியா சுல்தானா (1236-1240) : இவர் பேரரசர் இல்துமிஷின் மகள். இரஸியா அரியணை ஏறுவதற்கு துருக்கிய பிரபுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏராளமான தடைகளைக் கடந்தே இரஸியா பேரரசியாகப் பதவி ஏற்றார். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி, இபின் பதூதாவின் கூற்றுப் படி ‘குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதைப் போல், கையில் வில் அம்புடன், அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை’ . இருப்பினும் அவர் மூன்றரை ஆண்டுகளே ஆட்சி புரிந்தார். ஜலாலுதீன் யாகுத் என்ற ஓர் அபிசீனிய அடிமையை அவர் குதிரை இலாயப் பணித்துறைத் தலைவராக (அமீர்-இ-அகுர்) ஓர் உயர்ந்த பதவியில் அமர்த்தினார். இது, துருக்கிய பிரபுக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாகுத்துக்கும் அரசி இரஸியாவுக்கும் இருந்த நெருக்கத்தைப் பெரிதுபடுத்த, பிரபுக்கள், அரசியைப் பதவியிலிருந்து இறக்க முயன்றனர். இரஸியாவுக்குப் பொதுமக்கள் ஆதரவு இருந்ததால், தில்லியில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை . தெற்குப் பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவைத் தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைச் சதிகாரர்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினர்.
பால்பனும் சட்ட ஒழுங்கும்
கங்கை, யமுனை நதிகள் இடையிலான தோவாப் பகுதிகளில் சட்ட ஒழுங்கு நிலைமை சீர்குலைந்தது. ராஜபுத்திர ஜமீன்தார்கள் கோட்டைகள் அமைத்தனர்; சுல்தானின் ஆணைகளை மீறினர். வட மேற்கில், மேவாரைச் சுற்றிய அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மியோ என்ற ஓர் இஸ்லாமியச் சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது. இதை ஒரு சவாலாக ஏற்ற பால்பன் தாமே முன்னின்று மேவாரைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். அவரின் படை வீரர்கள், மியோக்களைத் தேடிப் பிடித்துக் கொன்றனர். தோவாப் பகுதியில் ராஜபுத்திர அரண்கள் அழிக்கப்பட்டன; காடுகள் அழிக்கப்பட்டன. சாலைகளைப் பாதுகாக்கவும் கலகங்களைக் கையாளவும் அப்பகுதி முழுவதிலும் ஆஃப்கன் படை வீரர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
துக்ரில் கானை தண்டிக்கின்ற தாக்குதல்
பால்பன், கலகங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார். தனக்குப் பிடித்த ஓர் அடிமையான துக்ரில் கானை வங்கத்தின் ஆளுநராக நியமித்தார். ஆனால், விரைவிலேயே துக்ரில் கான் வெளிப்படையாகவே கலகம் செய்தார். அதை ஒடுக்குவதற்கு, பால்பன் அனுப்பிவைத்த அவத் ஆளுநர் அமின் கான், பணிந்து பின்வாங்கினார். இதனால் ஆத்திரமடைந்த பால்பன் மேலும் இரு படைப் பிரிவுகளை அனுப்ப அவையும் தோல்வியைத் தழுவின. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தப் பின்னடைவுகளால் அவமானப்பட்ட பால்பன், தாமே வங்கத்திற்குச் சென்றார். பால்பன் நெருங்கிவிட்டதைக் கேள்வியுற்ற துக்ரில் கான் தப்பியோடினார். பால்பன், அவரைப் பின் தொடர்ந்து முதலில் லக்நௌதிக்கும் பிறகு திரிபுராவை நோக்கியும் சென்றார். அங்கே துக்ரில் கானைப்பிடித்த பால்பனின் படைவீரர்கள் அவரைக் கொன்றனர். பிறகு வங்கத்தின் ஆளுநராக பால்பனின் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார். பால்பன் இறந்த பிறகு புக்ரா கான் ஒரு சுதந்திர அரசாட்சியாகப் பிரிந்து போனாரேயன்றி தந்தையின் அரியணையைக் கோரவில்லை. இதனால் தில்லியில் ஒரு தலைமை நெருக்கடி ஏற்பட்டது; மேலும், அவரது மகன் கைகுபாத், சிற்றின்பத்தில் வீழ்ந்து கிடந்தார்.
மங்கோலிய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள்
மங்கோலியர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக தனது ராணுவத்தை பால்பன் பலப்படுத்திக் கொண்டார். படிண்டா, சுனம், சாமானா ஆகிய இடங்களில் இருந்த கோட்டைகளில் கூடுதல் படைகளை நிலைநிறுத்தி வலுப்படுத்தினார். அதே நேரத்தில், ஈரானின் மங்கோலிய பொறுப்பு ஆளுநரும் செங்கிஸ் கானின் பேரனுமான ஹுலுக் கானுடன் நல்லுறவைப் பேணுவதற்கு அவர் முயற்சி செய்தார். சட்லெஜுக்கு அப்பால் முன்னேறி வரமாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியரிடமிருந்து பால்பன் பெற்றார். இதை, 1259 இல் தில்லிக்கு ஒரு நல்லெண்ணக் குழுவை அனுப்பிவைத்து உலுக்கான் குறிப்பால் உணர்த்தினார். மங்கோலியத் தாக்குதல்களிலிருந்து எல்லைப் பகுதிகளைக் காப்பதற்காக தனது விருப்பத்துக்குரிய மகன் முகமது கானுக்கு முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்தார் பால்பன். உலுக்கானுடன் நட்புறவு இருந்தபோதிலும் ஒரு மங்கோலிய ரோடு ஏற்பட்ட ஒரு மோதலில் முகமது கான் கொல்லப்பட்டார். இதனால் மனமுடைந்த பால்பன், 1286இல் இறந்து போனார்.
கில்ஜிகள் (1290-1320)
ஜலாலுதீன் கில்ஜி (1290-1296):
பால்பனின் மகன் கைகுபாத் அரசராகும் தகுதியற்றவராக இருந்தார். இதனால் அவரது மூன்று வயது மகன் கைமார்ஸ் அரச கட்டிலில் அமர்த்தப்பட்டார். பேரரசின் அமைச்சர்கள், பொறுப்பு ஆளுநர் போன்றோரை நியமிப்பதில் ஒத்த கருத்து ஏற்படவில்லை; இதையொட்டிப் பிரபுக்கள் சதி செய்தனர். இக்குழப்பத்திலிருந்து ஒரு புதிய தலைவராகப், படைத் தளபதி மாலிக் ஜலாலுதீன் கில்ஜி மேலெழுந்தார். கைகுபாத்தின் பெயரால் அரசாட்சி செய்த ஜலாலுதீன், அவரைக் கொல்வதற்கு ஒரு அதிகாரியை அனுப்பினார். விரைவிலேயே ஜலாலுதீன் முறைப்படி அரசரானார். ஜலாலுதீன் ஓர் ஆஃப்கானியர்; துருக்கியர் அல்லர் என்ற அடிப்படையில் அவருக்கு எதிர்ப்பிருந்தது. உண்மையில் கில்ஜிகள், ஆஃப்கானிஸ்தானில் துருக்கிய ஆட்சி நிறுவப்படுவதற்கு முன்பே அங்கு குடியமர்ந்தவர்கள்; எனவே அவர்கள் ஆஃப்கானியமயமான துருக்கியர்களாவர். எப்படியிருப்பினும், பிரபுக்கள் பலரையும் விரைவிலேயே ஜலாலுதீன் வசப்படுத்திவிட்டார். இதனால், கில்ஜிகள் மீது தொடக்கத்தில் அவர்களுக்கு இருந்த வெறுப்பு மறைந்து அவர் பல சண்டைகளில் வெற்றிபெற்றார், மேலும் தமது முதிய வயதில் கூட மங்கோலியக் கூட்டங்களை எதிர்த்து அணிவகுத்த அவர், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைவதை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தினார் (1292)
மங்கோல் என்ற பெயர், மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசிய நாடோடிக் குழுக்கள் அனைத்தையும் குறிக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அவர்கள் செங்கிஸ் கான் தலைமையில் ஒரு மிகப் பெரிய அரசாட்சியை நிறுவினர். நவீன ரஷ்யாவின் பெரும்பகுதி, சீனா, கொரியா, தென் கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா, மத்தியக் கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றை அவரது அரசாட்சி உள்ளடக்கி இருந்தது. அவர்களின் விரைவான குதிரைகளும் சிறந்த குதிரைப் படை உத்திகளும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்கும் மனப்பாங்கும் அரசியலைச் சூழ்ச்சித் திறத்துடன் கையாளும் செங்கிஸ்கானின் திறனும் மங்கோலியரின் வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
காராவின் பொறுப்பு ஆளுநரான ஜலாலுதீன் கில்ஜியின் ஓர் உடன் பிறந்தார் மகனும் மருமகனுமான அலாவுதீன், இச்சமயத்தில் மால்வா மீது படையெடுத்தார்; இந்தப் படையெடுப்பில் பெருமளவு செல்வம் கிடைத்தது. இந்த வெற்றி, தக்காணத்திலிருந்த யாதவ அரசின் தலைநகர் தேவகிரியைச் சூறையாடுவதற்கான ஓர் உந்துதலை அவருக்கு அளித்தது. டெல்லி திரும்பிய அலாவுதீனின் ஏற்பாட்டில் ஜலாலுதீன் கொல்லப்பட்டார் அலாவுதீன் அரியணை ஏறினார். இவ்வாறாக, ஜலாலுதீனின் ஆறாண்டுக் கால ஆட்சி 1296இல் முடிவுக்கு வந்தது.
அலாவுதீன் கில்ஜி (1296-1316):
அலாவுதீனும் பிரபுக்களும்
அலாவுதீன், எதிரிகளை ஒழித்து தில்லியில் தமது இடத்தைப் பலப்படுத்திக்கொள்வதில் முதலாண்டு முழுவதும் கழித்தார். விரைவிலேயே அவர், பிரபுக்கள் மீது ஒரு உறுதியான பிடியை வைத்துக்கொள்வதில் தமது கவனத்தைச் செலுத்தினார். உயர் அதிகாரிகள் பலரையும் பணி நீக்கம் செய்தார். குறிப்பாக, ஜலாலுதீனுக்கு எதிராகத் தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டு, சந்தர்ப்பத்துக்கேற்பத் தம்மிடம் இணைந்த பிரபுக்களிடத்தில் அவர் மிகக் கடுமையாக நடந்துகொண்டார்.
மங்கோலிய அச்சுறுத்தல்கள்
மங்கோலியப் படையெடுப்புகள் அலாவுதீனுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தன. அவரது இரண்டாவது ஆட்சி ஆண்டில் (1298) மங்கோலியர் தில்லியை உக்கிரமாகத் தாக்கினர். அலாவுதீனின் படையால் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. அடுத்த ஆண்டில் மேலும் அதிக படைகளுடன் மங்கோலியர் மீண்டும் தாக்கிய போது, தில்லியின் புறநகர மக்கள் நகரத்துக்குள் தஞ்சமடைந்தனர். இந்தச் சவாலை அலாவுதீன், தானே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் விளைவாக நிகழ்ந்த மோதலில் மங்கோலியர் நிலைகுலைந்தனர். இருப்பினும் 1305இல் தோஆப் சமவெளிப் பகுதியின் வழியே நுழைந்து மீண்டும் தாக்கினர். இம்முறை மங்கோலியரை தோற்கடித்த சுல்தானின் படை, அதிக எண்ணிக்கையில் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொன்றது. ஆனாலும் மங்கோலியர் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. கடைசி மங்கோலியத் தாக்குதல் 1307-08இல் நிகழ்ந்தது. இது மிகப் பிரமாண்டமாக இருந்தது. ஆனாலும், மங்கோலியருக்குக் கிடைத்த கடுமையான பதிலடி, அதன் பிறகு அவர்கள் உள்ளே நுழைந்து தாக்காதவாறு தடுத்தது.
இராணுவத் தாக்குதல்கள்
சுல்தானியம் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்கு, அதன் வட இந்திய நிலப்பரப்புக்களின் வேளாண் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை. இது, கொள்ளைப் பொருள் தேடி இடைவிடாமல் அவர்கள் நடத்திய சூறையாடல்களால் தெளிவாகிறது. தேவகிரி (1296, 1307,1314), குஜராத் (1299-1300), ரான்தம்பூர் (1301), சித்தூர் (1303), மால்வா (1305) ஆகிய இடங்களின் மீது அலாவுதீன் நடத்திய தாக்குதல்கள், அவருடைய ராணுவ, அரசியல் அதிகாரத்தைப் பறைசாற்றவும், செல்வவளத்தைப் பெருக்கவுமே நடத்தப்பட்டன. தீபகற்பத்தில் அவருடைய முதல் இலக்கு மேற்கு தக்காணத்தில் இருந்த தேவகிரியாகும்.
1307ஆம் ஆண்டு, தேவகிரி கோட்டையைக் கைப்பற்றுவதற்காக மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பகுதியிலிருந்த வாரங்கல்லின் காகதீய அரசர் பிரதாபருத்ரதேவா 1309இல் தோற்கடிக்கப்பட்டார். 1310இல் தோல்வியடைந்த ஹொய்சாள அரசர் மூன்றாம் வீரவல்லாளன், அவரது செல்வங்கள் அனைத்தையும் தில்லித் துருப்புகளிடம் ஒப்படைத்தார்.
பிறகு மாலிக் காஃபூர் தமிழ் நாட்டுக்குப் புறப்பட்டார். கனத்த மழை, வெள்ளத்தால் காஃபூர் முன்னேறுவது தடைப்பட்டபோதும். சிதம்பரம், திருவரங்கம் ஆகிய கோவில் நகரங்களையும், பாண்டியர் தலைநகரம் மதுரையையும் சூறையாடினார். தமிழ்ப் பிரதேசங்களிலிருந்த இஸ்லாமியர், மாலிக் காஃபூரை எதிர்த்து, பாண்டியர் தரப்பில் நின்று போரிட்டனர் என்பது இங்குக் குறிப்பிடத்தகுந்தது. 1311இல் ஏராளமான செல்வக் குவியலுடன் மாலிக் காஃபூர், தில்லி திரும்பினார்.
அலாவுதீன் உள்நாட்டு சீர்திருத்தங்கள்
பரந்த நிலப்பரப்புகளைவென்றதைத் தொடர்ந்து, அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரபுக்கள் குவித்துவைத்திருந்த செல்வம், அவர்களுக்கு ஓய்வையும் சதிகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகளையும் அளிப்பதாக அலாவுதீன் கருதினார். அவர் எடுத்த முதல் நடவடிக்கை அதை அவர்களிடமிருந்து பறித்ததுதான். சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன. பரிசாகவோ, மதம் சார்ந்த அறக்கொடையாகவோ அளிக்கப்பட்டுச் சொத்துரிமை அடிப்படையில் வைத்திருந்த கிராமங்களை மீண்டும் அரச அதிகாரத்தின் கீழ் கொண்டுவர சுல்தான் ஆணையிட்டார். கிராம அலுவலர்கள் அனுபவித்துவந்த மரபுரிமைகளைப் பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களைத் தடை செய்தார். ஊழல் வயப்பட்ட அரச அலுவலர்களைக் கடுமையாகத் தண்டித்தார். மதுவும் போதை மருந்துகளின் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. சூதாட்டமும் தடை செய்யப்பட்டது; சூதாடிகள் நகரத்துக்கு வெளியே விரட்டப்பட்டனர். இருப்பினும் மது விலக்கு பெருமளவில் மீறப்பட்டதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் கட்டாயம் அலாவுதீனுக்கு ஏற்பட்டது.
உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டன. இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது. அலாவுதீன் விதித்த வரிச்சுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல. தனது பேரரசின் அனைத்துப் பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
நாற்பதின்மர் (சகல்கானி) : தகுதியிலும் வரிசையிலும் சுல்தானை அடுத்துப் பிரபுக்கள் இருந்தனர். அரசை நிர்வகிப்பதில் அவர்கள் ஒரு தீர்மானகரமான பங்கு வகித்தனர். பிரபுக்களே ஆளும் வர்க்கமாக இருந்தபோதிலும் அவர்கள், துருக்கியர், பாரசீகர், அரபியர், எகிப்தியர், இந்திய முஸ்லீம்கள் போன்ற வெவ்வேறு இனக்குழுக்களிலிருந்தும் இனங்களிலிருந்தும் வந்தனர். இல்துமிஷ், நாற்பதின்மர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அவர்களிலிருந்து தெரிவு செய்து இராணுவத்திலும் குடிமை நிர்வாகத்திலும் நியமித்தார். இல்துமிஷ் இறந்த பிறகு, ருக்னுத்தின் ஃபெரோஸை அரசனாக்க வேண்டும் என்ற இல்துமிஷின் விருப்பத்தைப் புறந்தள்ளும் அளவுக்கு அந்த நாற்பதின்மர் குழு வலுமிக்கதாயிற்று. இரஸியா, தனது நலன்களைக் காத்துக்கொள்வதற்காக, அபிசீனிய அடிமை யாகுத் தலைமையில் துருக்கியரல்லாத பிரபுக்களையும் இந்திய முஸ்லீம் பிரபுக்களையும் கொண்ட ஒரு குழு அமைத்தார். எனினும் இதை, அவ்விருவரையும் கொலை செய்ய வைத்த துருக்கிய பிரபுக்கள் எதிர்த்தனர். இவ்வாறாக, அரசரின் மூத்த மகனே ஆட்சிக்கு வாரிசு என்ற விதி இல்லாத நிலையில் அரசுரிமை கோரிய ஏதோ ஒருவர் தரப்பில் பிரபுக்கள் சேர்ந்துகொண்டனர். இது, சுல்தானைத் தெரிந்தெடுக்க உதவியது அல்லது ஆட்சி நிலைகுலைவதற்குப் பங்களித்தது. பிரபுக்கள் பல குழுக்களாக சுல்தானுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டனர். எனவே அந்த நாற்பதின்மர் அமைப்பு சுல்தானியத்தின் நிலைத்தன்மைக்குப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி, அதை பால்பன் ஒழித்தார்; இதன் மூலம் “துருக்கிய பிரபுக்கள்” ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது ஆணையை மீறுகிற பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார். அலாவுதீன் கில்ஜி, ஒற்றர்களைப் பணியமர்த்தி, துருக்கியப் பிரபுக்களின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் தம்மிடம் நேரடியாகத் தெரிவிக்குமாறு பணித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
சந்தைச் சீர்திருத்தங்கள்
அலாவுதீன் ஒரு பெரிய, திறமை வாய்ந்த படையைப் பராமரிக்க வேண்டியிருந்தது. படை வீரர்களுக்குக் கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார். படை வீரர்களுக்குக் குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டது; இதனால், விலைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல் வலைப்பின்னலை ஏற்படுத்தினார். சந்தைகளில் நடந்த கொடுக்கல்- வாங்கல், வாங்குவது, விற்பது, பேரங்கள் என அனைத்து விவரங்களையும் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டார். அத்தியாவசியப் பொருள்களின் விலை குறித்துச் சந்தை கண்காணிப்பாளர்களும் அறிக்கை அளிப்பவர்களும் ஒற்றர்களும் அவருக்கு அன்றாடம் அறிக்கை அளித்தல் வேண்டும். விலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஏதேனும் எடைக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண் முன்னேயே வீசப்பட்டது.
அலாவுதீன் வாரிசுகள்
அலாவுதீன், தனது மூத்த மகன் கிசர் கானை தமது வாரிசாக நியமித்தார். இருப்பினும் அந்நேரத்தில் அலாவுதீனின் நம்பிக்கைக்குரியவராக மாலிக் காஃபூர் இருந்தார். எனவே, மாலிக் காஃபூர் தாமே அரசாங்க அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். ஆனால் ஆட்சிக்கு வந்த வெறும் முப்பத்தைந்தே நாள்களில் பிரபுகளால் அவர் கொல்லப்பட்டார். இதன் பிறகு வரிசையாகக் கொலைகள் நிகழ்ந்தன. இதன் காரணமாக மங்கோலியருக்கு எதிரான பல படையெடுப்புகளில் பங்கேற்ற திறமைசாலியான காஸி மாலிக், 1320இல் கியாசுதீன் துக்ளக் ஆக ஆட்சியில் அமர்ந்தார். பதவியிலிருந்த கில்ஜி ஆட்சியாளர் குஸ்ரௌவைக் கொன்றதன் மூலம் கில்ஜி வம்சத்திலிருந்து எவரும் அரசுரிமை கோருவதைத் தடுத்தார். இவ்வாறாக, 1414 வரையிலும் நீடித்த துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது.
துக்ளக் வம்சம்
கியாசுதீன் துக்ளக் (1320-1325)
கியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையைப் பின்பற்றினார். அவரது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் (1325) கியாசுதீன் இறந்தார். மூன்று நாள்கள் கழித்து ஜானாகான் என்ற இயற்பெயர் கொண்ட அவரது மகன் ஆட்சிக் கட்டில் ஏறியதோடு முகமது-பின்-துக்ளக் எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார்
முகமது-பின்-துக்ளக் (1325-1351)
முகமது-பின்-துக்ளக், கற்றவர், நற்பண்பு நிறைந்தவர், திறமை வாய்ந்த அரசர் என்றபோதிலும் இரக்கமற்றவர், கொடூரமானவர், நியாயமற்றவர் என்றும் பெயர் பெற்றிருந்தார். தில்லிக்கு அருகே மீரட் வரையிலும் அணிவகுத்து வந்த மங்கோலியப் படையை முகமது பின் துக்ளக் திறமையாகப் பின்வாங்கச் செய்தார். ஆனால், அலாவுதீன் போல் தமது திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் மனவுறுதி முகமதுக்கு இல்லை.
தலைநகர் மாற்றம்
தில்லியிலிருந்து தென்னிந்தியாவை ஆள்வது கடினம் என்று முகமது-பின்-துக்ளக் கருதினார். எனவே, தலைநகரை தௌலதாபாத்துக்கு மாற்றும் துணிவான முயற்சியை மேற்கொண்டார். மகாராட்டிரத்திலுள்ள தேவகிரிக்கு முகமது-பின்-துக்ளக் சூட்டிய மறுபெயரே தௌலதாபாத் இந்தியாவின் நடுவில் அமைந்திருக்கிறதேவகிரிக்குப், பாறைப்பாங்கான மலையின் உச்சியில் ஒரு வலுவான கோட்டையைக் கொண்டிருக்கிற சாதகமான அம்சமும் இருந்தது. இராணுவ, அரசியல் சாதகங்களை மனத்தில் கொண்டு முக்கியமான அதிகாரிகளையும் சூஃபி துறவிகள் உள்பட பல முன்னணிப் பிரமுகர்களையும் தேவகிரிக்கு இடம் மாறுமாறு சுல்தான் ஆணையிட்டார். ஆயினும் இந்தத் திட்டம் தோல்வியைத் தழுவியது. தௌலதாபாதிலிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்று முகமது-பின்-துக்ளக் விரைவிலேயே உணர்ந்தார். எனவே மீண்டும் தலைநகரை தில்லிக்கு மாற்ற உத்தரவிட்டார்.
அடையாள நாணயங்கள்
முகமது-பின்-துக்ளக் மேற்கொண்ட அடுத்த முக்கியமான பரிசோதனை அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியதாகும். இந்த நாணய முறை ஏற்கெனவே சீனாவிலும் ஈரானிலும் நடைமுறையிலிருந்தது. இந்தியாவில் நாணயங்களின் மதிப்பு அதிலிருந்த வெள்ளி உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால் துக்ளக்கின் முயற்சி காலத்திற்கு முன் எடுத்த முயற்சியாகிவிட்டது. வெண்கல நாணயங்களைப் போலியாக அடிப்பது எளிதாயிருந்தது; அரசாங்கம் அதைத் தடுக்க முடியவில்லை. வெண்கல நாணயங்களைத் திரும்பப்பெற வேண்டிய அளவுக்குப் புதிய நாணயங்கள் மதிப்பிழக்கத் தொடங்கின. இதனால் மீண்டும் வெள்ளி நாணயங்களை அரசாங்கம் வெளியிட்டு அதை ஈடுசெய்ய வேண்டியதாயிற்று.
சுல்தான் மேற்கொண்ட புதுமை நடவடிக்கைகள்
வேளாண்மையை விரிவாக்குகிற முகமது-பின்-துக்ளக்கின் திட்டம் புதுமையானது என்றாலும் அதுவும் துயரகரமாகத் தோற்றது. தோவாப் சமவெளிப் பகுதியில் ஒரு நீண்டகாலக் கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்த நேரத்தில் இம்முயற்சி எடுக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடுமையாக நடத்தப்பட்டனர்; கொடூரமாகத் தண்டிக்கப்பட்டனர். இந்தப் பஞ்சம், தாங்கமுடியாத முறையற்ற நில வரி வசூலுடன் இனங்காணப்பட்டது. வேளாண்மையைக் கவனித்துக்கொள்ள ஒரு தனித் துறையை (திவான்-இ-அமிர் கோஹி) சுல்தான் ஏற்படுத்தினார். கால்நடைகளையும் விதைகளையும் வாங்க, கிணறுகள் வெட்ட விவசாயிகளுக்குக் கடன் தரப்பட்டது என்றாலும் இது பயன்தரவில்லை. பயிர்களைக் கண்காணிக்கப் பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் திறம்படச் செயல்படவில்லை . பிரபுக்களும் முக்கியமான அலுவலர்களும் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். சுல்தானின் எதேச்சதிகாரப் போக்கு அவருக்கு நிறைய எதிரிகளைச் சம்பாதித்துக் கொடுத்தது.
தொலைவிலுள்ள பகுதிகளை பயனளிக்கும் வகையில் நிர்வகிக்க இயலாது என்பதை நன்கறிந்த அலாவுதீன் அவற்றை இணைத்துக் கொள்ளவில்லை. அவற்றின் மீது தமது மேலாண்மையை நிறுவுவதையே அவர் விரும்பினார். ஆனால், முகமது பின் - துக்ளக், தான் வென்ற அனைத்து பகுதிகளையும் இணைத்துக்கொண்டார். எனவே, அவரது இறுதி காலத்தில் அடுத்தடுத்து கிளர்ச்சிகளை சந்தித்தார்; அவரது ஒடுக்குதல் நடவடிக்கைகள் மக்களை மேலும் அவரிடமிருந்து அந்நியப்படுத்தின. வங்கம், மதுரை, வாரங்கல், ஆவாத், குஜராத், சிந்து ஆகிய தொலைதூரப் பகுதிகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக கிளர்த்தெழுந்தன. கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடுவதிலேயே முகமது தமது கடைசி நாட்களைக் கழித்தார். குஜராத்தில் ஒரு கிளர்ச்சித் தலைவரை விரட்டிச் செல்வதில் ஈடுபட்டிருந்தபோது உடல் நலம் கெட்டு, தனது 26வது ஆட்சியாண்டின் (1351) முடிவில் முகமது பின் துக்ளக் இறந்தார்.
ஃபெரோஸ் ஷா துக்ளக் (1351-1388)
ஃபெரோஸின் தந்தை ரஜப், கியாசுதீன் துக்ளகின் தம்பி ஆவார். இருவருமே அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் குரசனிலிருந்து வந்தவர்கள். ரஜப், ஒரு ஜாட் இளவரசியை மணந்திருந்தார். ஃபெரோஸுக்கு ஏழு வயதான போது அவர் இறந்துவிட்டார். கியாசுதீன் ஆட்சிக்கு வந்த போது, ஃபெரோஸை, 12,000 குதிரை வீரர்களைக் கொண்ட சிறப்புப் படைக்குத் தளபதியாக்கினார். பின்னர், சுல்தானியத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் பொறுப்பு ஃபெரோஸிடம் கொடுக்கப்பட்டது. முகமது-பின்-துக்ளக், தனது வாரிசை அறிவிக்காமலேயே இறந்திருந்தார். முகமதுவின் சகோதரி, தனது மகனுக்கு ஆட்சி உரிமை கோரியதைப் பிரபுக்கள் ஆதரிக்கவில்லை . முகமதுவின் வாழ்நாள் நண்பர் கான்-இ-ஜஹன் பரிந்துரைத்த முகமதுவின் மகன் ஒரு குழந்தையாக இருந்தார். எனவே ஃபெரோஸ் ஆட்சியில் அமர்ந்தார்.
ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஓர் உயரதிகாரியாக இருந்த புகழ் பெற்ற கான்-இ-ஜஹான், இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர். ஆதியில், கண்ணு என்று அறியப்பட்ட அவர், (தற்போதைய தெலங்கானாவின்) வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானியப் படையெடுப்பு ஒன்றின் போது சிறைப் பிடிக்கப்பட்டவர்.
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை
பிரபுக்கள் வகுப்பினரிடமும் மதத் தலைவர்களிடமும் ஃபெரோஸ் துக்ளக், சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அலாவுதீன் ஆட்சியில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. அலாவுதீன் ஆதரிக்காத ஒரு நடைமுறையான, அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையை ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார். அரசாங்க அலுவலர்களின் ஊதியத்தை அதிகப்படுத்தினார். வருவாய் நிர்வாகத்தை ஒழுங்கு செய்கிற போது, பல வரிகளைக் குறைத்தார். அதே நேரத்தில் அரசு நிதி வீணாகச் செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டார். அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார். அடிமைகள் குறித்து ஃபெரோஸுக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது. அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத்துறையை ஏற்படுத்தினார். 1,80,000 அடிமைகளின் நல்வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது. கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை
ஃபெரோஸ் துக்ளக், போர்கள் எதுவும் தொடுக்கவில்லை. இருப்பினும், கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரது வங்கப் படையெடுப்பு ஒரு விதிவிலக்காகும். அவரது படை வங்கத்திலிருந்து திரும்புகிற வழியில் திடீரென்று ஒரிசாவுக்குள் நுழைந்தது; திறை செலுத்த ஒப்புக்கொள்ளும் வாக்குறுதியை அப்பகுதி அரசரிடமிருந்து பெறுவதற்கு இது உதவியது. அவரது காலத்தில் இரண்டு மங்கோலிய தாக்குதல்களே நிகழ்ந்தன; அவ்விரண்டுமே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. அவரது காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு, சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும் (1362). எதிரிகளை வழியிலேயே நிலைகுலைய வைத்து ஃபெரோஸ் வெற்றிபெற்றார். எனினும் அவரது எதிரிகளும் அப்போது ஏற்பட்ட ஒரு பஞ்சமும் சுல்தானுக்கும் அவரது படைக்கும் ஒரு கடுமையான சோதனையை ஏற்படுத்தின. இருப்பினும் ஃபெரோஸின் இராணுவம் சமாளித்து சிந்துவை அடைந்தது. சிந்துவின் அரசர், சுல்தானிடம் சரணடையவும் திறை செலுத்தவும் இணங்கினார்.
மதக் கொள்கை
வைதீக இஸ்லாமை ஃபெரோஸ் ஆதரித்தார். மதத் தலைவர்களை மன நிறைவுறச் செய்வதற்காக தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தார். மதவிரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்; மேலும் இஸ்லாமிய விரோத நடைமுறைகள் என கருதப்பட்டவை தடை செய்யப்பட்டன. இஸ்லாமியர் அல்லாதவருக்கு ‘ஜிஸியா’ எனும் வரியை விதித்தார். பிராமணர்களும் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இருப்பினும் புதிய இந்துக் கோவில்கள் கட்டுவதை ஃபெரோஸ் தடை செய்யவில்லை. அவரது பண்பாட்டு ஆர்வம், மதம், மருத்துவம், இசை தொடர்பான பல சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்ப்பதற்கு வித்திட்டது. பல்வகைப் பண்புகள் நிறைந்த ஓர் அறிஞரான ஃபெரோஸ், இஸ்லாமியர் - அல்லாதார் உள்படக் கற்றிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார். இசையில் விருப்பம் கொண்டிருந்தார். பல கல்வி நிறுவனங்களையும், மசூதிகளையும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் நிறுவினார்.
ஜிஸியா என்பது இஸ்லாமிய அரசுகளால் அவர்களின் நிலத்தில் வாழும் இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வசூலிக்கப்பட்ட ஒரு வரியாகும். இதன் மூலம் அவர்கள் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதார் மீது ஜிஸியா விதித்தவர் குத்புதீன் ஐபக். முகலாய அரசர் அக்பர், பதினாறாம் நூற்றாண்டில் ஜிஸியாவை ஒழித்தார் என்றாலும், பதினேழாம் நூற்றாண்டில் ஒளரங்கசீப் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
பொதுப் பணிகள்
பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார். சட்லெஜ் நதியிலிருந்து ஹன்ஸிக்கு வெட்டிய கால்வாயும் யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப் பணி வளர்ச்சிக் கொள்கையைச் சுட்டுகின்றன.
தனது மகன் பதே கானையும் பேரன் கியாசுதீனையும் தில்லி சுல்தானியத்தின் இணை ஆட்சியாளர்களாக ஆக்கிய பிறகு, 1388இல் ஃபெரோஸ் இறந்தார்.
பிரபுக்கள் வகுப்பினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பரம்பரை உரிமை, இராணுவத்திலும் செயல்படுத்தப்பட்டது. இது தில்லி சுல்தானியத்தை வலுவிழக்கச் செய்தது. அதிகாரத்தை மீண்டும் பெற்ற பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச்சென்றது. ஃபெரோஸ் துக்ளக் இறந்த ஆறு ஆண்டுகளுக்குள் அவரைத் தொடர்ந்து நால்வர் ஆட்சி புரிந்தனர்.
தைமூரின் படையெடுப்பு
கடைசி துக்ளக் அரசர் நசுருதீன் முகமது ஷா (1394-1412); இவரது ஆட்சியின் போதுதான் மத்திய ஆசியாவிலிருந்து தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. தைமூர், பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் மங்கோலிய அரசர் செங்கிஸ்கானுடன் இரத்த உறவு இருப்பதாகக் கூறத்தக்க துருக்கியர். உள்ளபடியே எந்த எதிர்ப்புமின்றித் தைமூர் தில்லியைச் சூறையாடினார். தைமூர் வந்து சேர்ந்த செய்தியைக் கேட்ட சுல்தான் நசுருதீன் தில்லியை விட்டுத் தப்பி ஓடிவிட்டார். கொல்லர், கல்தச்சர், தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களைச் சிறைபிடித்துச் சென்ற தைமூர், தனது தலைநகர் சாமர்கண்டில் கட்டடங்களை எழுப்புவதில் அவர்களை ஈடுபடுத்தினார். நசுருதீன் 1412 வரையிலும் சமாளித்து ஆட்சி செய்யமுடிந்தது. பிறகு வீழ்ந்து கொண்டிருந்த பேரரசை சையது லோடி வம்சங்கள் 1526 வரையிலும் தில்லியிலிருந்து ஆண்டனர்.
சையது வம்சம் (1414-1451)
பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர் கானைத் தனது துணையாக நியமித்தார் தைமூர். கிசர் கான் (1414-1421) தானே சென்று தில்லியைக் கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை நிறுவினார். கிசர் கான் நிறுவிய சையது வம்சத்தில், 1451 வரையிலும் நான்கு சுல்தான்கள் ஆண்டனர். முற்பட்ட சையது சுல்தான்கள், தைமூரின் மகனுக்குத் திறை செலுத்தி ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சியை, யாஹியாபின்-அஹ்மத் சிரிந்தி இயற்றிய தாரிக்-இ-முபாரக்-சாஹி குறிப்பிடுகிறது. அவர்களது ஆட்சியின் இறுதியில், பேரரசு தில்லி நகரத்துக்குள் சுருங்கி விட்டது.
உங்களுக்குத் தெரியுமா?
தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையைத் தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று, முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சய்யித் வம்சத்தில் வந்த ஆலம் 6241 – Abraham Eraly, The Age of Wrath.
லோடி வம்சம் (1451-1526)
லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி ஆவார். இவரது ஆட்சியின் போது வங்கத்தில் ஆட்சி புரிந்த ஷார்கி அரசு கைப்பற்றப்பட்டது. இவரது மகன் சிக்கந்தர் லோடி (14891517) 1504இல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். கடைசி லோடி ஆட்சியாளரான இப்ராஹிம் லோடி, முகலாய வம்ச ஆட்சியை நிறுவிய முதலாம் பானிபட் போரில் (1526) பாபரிடம் தோற்றார்.
சுல்தானிய ஆட்சி நிர்வாகம்
அரசும் சமூகமும்
சுல்தானிய அரசு முறையானதோர் இஸ்லாமிய அரசாகக் கருதப்பட்டது. சுல்தான்கள் பலரும், கலிபாவின் தலைமையைத் தாங்கள் ஏற்பதாகக் கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினர். இராணுவத் தலைவர் என்ற வகையில் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைமைத் தளபதி எனும் அதிகாரம் அவர்களிடமிருந்தது. நீதி நிர்வாகத் தலைவர் என்ற முறையில் மேல்முறையீட்டு உச்சநீதிமன்றமும் அவர்கள்தான். பூமியில் கடவுளின் பிரதிநிதியாகத் தாம் ஆட்சி செய்வதாக பால்பன் கூறினார். மதத்தின் பரிந்துரைகள் குறித்துத் தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு அலாவுதீன் கில்ஜி முழு அதிகாரத்தைக் கோரினார். இருப்பினும் அரசு மக்கள் நலனுக்கு இன்றியமையாதவற்றையே செய்தார்.
தில்லி சுல்தான் ஆட்சி, ஓர் அனைத்திந்தியப் பேரரசாகக் கருதப்பட வேண்டிய தகுதி கொண்டது. முகமது பின் துக்ளக் ஆட்சியின் முடிவுக் காலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளைத் தவிர, எதிரெதிர் முனைகளிலுள்ள காஷ்மீரத்தையும் கேரளத்தையும் உள்ளடக்கிய இந்தியா முழுவதும் தில்லியின் நேரடி ஆட்சிக்குள் வந்தது. அரச வாரிசுரிமை தொடர்பாக நன்கு வரையறுக்கப்பட்ட, ஒப்புக்கொண்ட விதிகள் இல்லை. எனவே, சுல்தானிய காலத்தில் வாரிசுரிமைப் போட்டி எழுவது வழக்கமாக நடந்தது. இக்தா (முக்திகள் அல்லது வாலிகள்) உரிமையாளர்கள் வரிகள் வசூலித்தனர்; அரச சேவைக்குப் படைக் குழுக்களைப் பராமரிப்பதற்கு சுல்தான்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர். சுல்தான்கள், குறிப்பிட்ட சில பகுதிகளைத் தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக்கொண்டனர். இத்தகைய பகுதிகளில் வசூலிக்கும் வருவாயிலிருந்தே சுல்தான்களின் சொந்த படைக்குழுக்களின் (ஹஷ்ம்-இ-கால்ப்) அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டது.
பிரதேச விரிவாக்கத்திற்கு ஏற்றாற்போல் நிதி ஆதாரமும் பெருகியது. உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது. பரம்பரையாக வரி வசூலித்து வந்தோர் (சௌத்ரிகள்), கிராமத் தலைவர் (கோட்கள்) ஆகியோரின் நிதித் தேவைகள் கடுமையாகக் குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன. தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட வரி வசூல் ஒரு கடுமையான விவசாயக் கிளர்ச்சியை, குறிப்பாக தில்லி அருகே தோ-ஆப்-இல், தூண்டிவிட்டது (1332-34). இதுவும், தொடர்ந்து வந்த பஞ்சமும் தில்லிப் பகுதியிலும் தோ-ஆப்-இலும் உழவர்களுக்குக் கடன் வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண் வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வருமாறு முகமது-பின் -துக்ளக்கை நிர்ப்பந்தித்தன.
இராணுவப் படையெடுப்புகள், பதுக்கிய செல்வத்தை வெளிக்கொண்டு வந்தன, காடுகளை அழித்து நிலமாக்கியது, பிரதேசங்களுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான வணிகம் போன்றவை மக்கள் இடப்பெயர்ச்சியை ஊக்குவித்தது. அறிவாளிகளையும் மதப்பற்றுள்ளவர்களையும் ஒருங்கிணைத்தது. சுல்தானிய ஆட்சியின் படையரண் நகரங்களிலும் அவர்களின் வலுவான பிடியிலிருந்த பகுதிகளிலும் சமூகப் படிநிலை, குடியமர்வு ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் நிர்வாகச் சிக்கல்களை உண்டாக்கின, பதினான்காம் நூற்றாண்டு முழுவதும் சுல்தான் ஆட்சி, அதிகரித்து வந்த அதன் வேறுபட்ட மக்கள்தொகையை, முக்தி (muqthi) எனும் மாகாண ஆளுநர்கள் மூலம் கட்டுப்படுத்த விரும்பியது. ஆனால், அவர்களது வல்லமையும் நிதி ஆதாரமும், இருப்பிடத்தில் இருந்த அரசியல் குழுக்களுடன் அணி சேர்வதற்கான சந்தர்ப்பமும் முகமது பின் துக்ளக் போன்ற கடுமையான, எதேச்சாதிகாரப் பேரரசர்களால் கூட அவர்களை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கின.
துருக்கிய – ஆஃப்கானிய அரசியல் வெற்றிகளைத் தொடர்ந்து மத்திய ஆசியாவிலிருந்து பெரிய அளவுக்கு இஸ்லாமிய சமூகங்கள் குடிபெயர்ந்தன. இந்தியா வாய்ப்புகளின் நாடாக கருதப்பட்டது. அனைத்து நிலைகளிலும் சமூகம், சிறப்புரிமைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. மதத்திற்கு அப்பாற்பட்டு பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக - பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர். சமகாலத்தில் உலகம் முழுவதும் இருந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுகிற போது சுல்தான்களும் பிரபுக்களும் சிறப்புரிமைகளுடன் வளமான வாழ்க்கையை அனுபவித்தனர். தொடக்கத்தில் துருக்கியர் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். நீண்ட காலத்திற்கு ஆஃப்கானியரும் ஈரானியரும் இந்திய இஸ்லாமியரும் பிரபுக்கள் வகுப்பிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். இஸ்லாத்தில் ஒரு தனிநபரின் தனிப்பட்ட தகுதிநிலை, பிறப்பின் அடிப்படையில்லாமல் திறமைகளையும் செயல்களையும் மட்டுமே சார்ந்திருந்ததால் இஸ்லாமுக்கு மதம் மாறியவர்கள் சமூகத்தில் சமமாகவே பாவிக்கப்பட்டனர்
சமயம்
பல கடவுளர்களை வழிபட்ட இந்துக்களைப் போலன்றி, இஸ்லாமியர் ஓர் இறை வழிபாட்டைப் பின்பற்றினர். நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களின் ஓர் அடிப்படைத் தொகுப்பையும் அவர்கள் கடைப்பிடித்தனர். பகவத் கீதை குறிப்பிடுவதைப் போல, இந்துமதத்தில் வெகு நீண்ட காலமாக ஓரிறைப் போக்கு இருந்துவந்தது. இருப்பினும், அல்பெருனி சுட்டியதைப் போல, ஓரிறைக் கொள்கைக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள நெருக்கம், இக்கோட்பாட்டை ஓரத்திலிருந்து மையத்திற்குக் கொண்டுவர உதவியது.
பதிமூன்றாம் நூற்றாண்டில், கர்நாடகத்தில் பசவண்ணர் நிறுவிய லிங்காயத் பிரிவு ஒரு கடவுளையே (பரமசிவன்) நம்பியது. அப்பிரிவு சாதிப் பாரபட்சங்களை நிராகரித்தது, பெண்களுக்கு உயர் நிலையை அளித்தது, கூடவே பூசாரி பிராமணர்களின் ஏகபோகம் என்பதை இல்லாமல் ஆக்கியது. இதற்கு இணையாகத் தமிழ் நாட்டில் சித்தர்கள் விளங்கினர். ஒரு கடவுளைப்பாடிய அவர்கள், சாதியை, வைதீகத்தை மறுபிறப்பைச் சாடினர். தென் இந்திய பக்தி இயக்கத்தையும் ஓரிறைக் கொள்கையையும் வட இந்தியாவுக்குக் கொண்டு சென்றதில் இரண்டு பேர் முக்கியமான பங்கு வகித்தனர். அதிகம் அறியப்படாதவர்கள் : மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நாமதேவர் ஒருவர்; உருவ வழிபாட்டையும் சாதிப் பாகுபாடுகளையும் இவர் எதிர்த்தார், ஓரிறைக் கொள்கையைக் கடுமையாகப் பின்பற்றினார். இரண்டாமவர் இராமானுஜரைப் பின்பற்றிய இராமானந்தர்.
பொருளாதாரம்
தில்லி சுல்தானியம், சில முக்கியப் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. இதில் ஒன்று நில வரியைப் பணமாக வசூலித்தது. இதன் காரணமாக, உணவு தானியங்களும் இதர கிராமப்புறத் உற்பத்திப் பொருள்களும் நகரங்களை நோக்கி நகர்ந்தன; இதன் மூலம் நகர வளர்ச்சி ஒரு புதிய கட்டத்தை எட்டியது. பதினான்காம் நூற்றாண்டில், தில்லியும் தௌலதாபாத்தும் (தேவகிரி) உலகின் மாபெரும் நகரங்களாக விளங்கின. முல்தான், காரா, அவத், கௌர், கேம்பே (கம்பயத்), குல்பர்கா போன்ற இதர பெரிய நகரங்களும் இருந்தன.
இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவம் என்னவென்றால், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள், அபகரிப்புகள் இருந்தாலும், நீண்ட காலம் இந்து மதத்துடன் சக வாழ்வு வாழ்வதற்கான மன ஏற்பு தொடக்க காலம் முதல் காணப்படுவதே. இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார். 1325இல் முகமது-பின்- துக்ளக், சமணத்துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார். அவரேகூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.
'பல கடவுள் வழிபாட்டாளர்களையும், இந்துக்களையும், மங்கோலியர்களையும், நாத்திகர்களையும் பஞ்சணையில் அமர வைத்து சகல மரியாதைகளும் செய்கிறார்கள்’ என்று இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குறித்து பரணி வெறுப்புடன் எழுதுகிறார். மேலும், இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோவில்கள் கட்டிக்கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இஸ்லாமிய வேலையாட்களை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, தாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்படுகின்றன என்றும் பரணி எழுதுகிறார்.
பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே செப்புக் காசுகளோடு தங்க, வெள்ளிக் காசுகளையும் தில்லி சுல்தான்கள் வெளியிடத் தொடங்கினர்; இது வணிகம் விறுவிறுப்பாக நடந்ததை குறிக்கிறது. மேற்கு எல்லைப்பகுதிகளில் மங்கோலியப் படையெடுப்புகள் வெற்றிபெற்றபோதிலும், தரை வழியிலும் கடல் வழியிலும் நிகழ்ந்த இந்தியாவின் அயல் வணிகம், இக்காலத்தில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்கிறார் இர்ஃபான் ஹபீப்
வணிகமும் நகர்மயமாக்கமும்
சுல்தான்களும் பிரபுக்களும் ஆடம்பரப் பொருள்களை மிகவும் விரும்பியதால் உள்நாட்டு வணிகம் புத்துயிர் பெற்றது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் அரிதாக வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சியைக் குறிக்கும் விதத்தில் மீண்டும் வெளிவரத் தொடங்கின. ஆயினும் பண்டைக் காலத்தில் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்த வணிகக் குழுக்கள் சுல்தான்கள் காலத்தில் இருந்ததற்குச் சான்று இல்லை. சுல்தான்கள் ஆட்சி, பல முக்கியமான நகரங்களையும் பெருநகரங்களையும் உள்ளடக்கிய ஒரு நகர்ப்புறப் பொருளாதாரத்தால் இயங்கியது. தில்லி, லாகூர், முல்தான், காரா, லக்னோ, அன்ஹில்வாரா, கேம்பே, தௌலதாபாத் ஆகிய நகரங்கள் சமண மார்வாரிகள், இந்து முல்தானிகள், முஸ்லிம் போராக்கள், குரசானியர், ஆஃப்கானியர், ஈரானியர் ஆகியோரின் வணிக நடவடிக்கைகளால் செழித்திருந்தன. ஏற்றுமதி - இறக்குமதி வணிகம், தரை வழி, கடல் வழி என இரண்டின் மூலமும் நன்கு செழித்திருந்தது. குஜராத்திகளும் தமிழர்களும் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். அதே நேரத்தில் இந்து முல்தானிகளும் முஸ்லிம் குரசானியரும் ஆஃப்கானியரும் ஈரானியரும் மத்திய ஆசியாவுடன் தரை வழி வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.
தொழில்துறை வல்லமை
சீனர் கண்டுபிடித்து அரபியர் கற்றுக்கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம், தில்லி சுல்தானியர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது. சீனர் கண்டுபிடித்த நூற்புச் சக்கரம், பதினான்காம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது; இது நூற்பவர்களின் உற்பத்தித் திறனை ஆறு மடங்கு அதிகரிக்க உதவியது; நூல் உற்பத்தியை மாபெரும் அளவுக்குப் பெருக்கியது. அதைத் தொடர்ந்து தறிகளில் மிதிப்பொறிகள் அறிமுகம் செய்யப்பட்டன. நூலுற்பத்தி பெருகியது போலவே நெசவு வேலையை விரைவுபடுத்த இது உதவியது. பதினைந்தாம் நூற்றாண்டில் வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்டன. அதிகமாக செங்கல், கலவை பயன்படுத்தி நிலவறைத் தொழில்நுட்பத்தோடு கூடிய கட்டட நடவடிக்கைகள் ஓர் புதிய உச்சத்தை எட்டின.
கல்வி
இஸ்லாமிய உலகக் கல்வி மரபுகள் அறிமுகமாயின. அடிப்படையாக இருந்தது மக்தப்; இங்கே ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்குப் படிக்கவும் எழுதவும் கற்றுத்தந்தார். மேலும் உயர் நிலையில், பல்வேறு பாடங்களிலுள்ள முக்கியமான பிரதிகளைக் கற்க அறிஞர்களிடத்தில் தனி மாணவர்கள் படித்தனர். உயர் கல்வியின் மேலும் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவம் மதரஸா (நேர்ப் பொருள்: கற்றுக்கொள்கிற இடம்). பதினோறாம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலும் ஈரானிலும் இது பரவலாக நிறுவப்பட்டது. மேலும் அங்கிருந்து இதர இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவியது. வழக்கமாக மதரஸாவுக்கு ஒரு கட்டடம் இருந்தது; தனி ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர். அங்கே மாணவர்கள் தங்கி இருக்கவும் நூலகத்துக்கும் தொழுகைக்கும் எனச் சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஃபெரோஸ் துக்ளக், தில்லியில் ஒரு பெரிய மதரஸாவைக் கட்டினார்; அந்த அற்புதமான கட்டடம் இன்றும் இருக்கிறது; முதன்மையாக அங்கே “குர்ஆன் உரை, இறைதூதரின் வாக்குகள், இஸ்லாமியச் சட்டங்கள் (ஃபிக்)” கற்பிக்கப்பட்டன என்று பரணியின் விவரணையிலிருந்து தெரிகிறது. சிக்கந்தர் லோடி (1489-1517), தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்தப்களிலும் மதரஸாக்களிலும் ஆசிரியர்களை நியமித்தார். அவர்களுக்கு நிலமும் மானியமும் ஒதுக்கினார் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
வரலாற்றியல்
அரபு பாரசீகக் கல்வியறிவுடன் மதம் - சாரா அறிவியல்களும் இந்தியாவுக்கு வந்தன. கூடுதலாக வந்த இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம் முறையான வரலாறெழுதுதலாகும். அரபியரின் சிந்துப் படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் சச்நாமா (ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரபிய மூல நூலின் பதிமூன்றாம் நூற்றாண்டுப் பாரசீக மொழிபெயர்ப்பு). தில்லியில் சுமார் 1260இல் எழுதப்பட்ட மின்ஹஜ் சிராஜின் தபகத்-இ-நசிரியைப் போன்று பிற்கால வரலாறெழுதுதலின் ஒத்திசைவும் தர்க்க ஒழுங்கும் இல்லாமல் இருக்கிற போதிலும் அது வரலாற்று ஆராய்ச்சியில் முன்னேற்றத்தை காட்டுவதாக உள்ளது.
சூஃபியிசம்
பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் சூஃபிகள் மத்தியில் செல்வாக்கு மிக்க இரு பிரிவுகள் தோன்றின : முல்தானை மையமாகக் கொண்ட சுஹ்ரவார்தி, தில்லியிலும் பிற இடங்களிலும் கோலோச்சியசிஸ்டி ஆகியன. மிகப்பிரபலமான சிஸ்டி துறவி ஷெய்க் நிசாமுதீன், தமது உரையாடல்களில் (1307-1322) இறை நம்பிக்கைக்கு முற்பட்ட கட்டத்திலிருந்த சூஃபியிசம் பற்றிச் செம்மையான ஒரு விளக்கமளித்தார். ஜலாலுதீன் ரூமி (1207-1273), அப்துர் ரஹ்மான் ஜமி (1414-1492) ஆகியோரின் பாரசீகக் கவிதைகள் வழியாகவும், பிறகு இந்தியாவில் அஷ்ரஃப் ஜஹாங்கிர் சிம்நனி (பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) மேற்கொண்ட முயற்சிகள் வழியாக (1240இல் இறந்த) இப்ன் அல்அரபியின் கருத்துக்கள் செல்வாக்கு பெறத் தொடங்கிய போது சூபிசம் இறை நம்பிக்கை கொண்டதாக மாறியது. குறிப்பாக, ஏற்கப்பட்ட இறை நம்பிக்கை இந்திய இஸ்லாமிய சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய அதே காலத்தில் ஆதி சங்கரின் இறை நம்பிக்கை கோட்பாடு வைதீக சிந்தனைக்குள் கூடுதல் செல்வாக்கை பெற்றுக் கொண்டிருந்தது.
கலீபா
முகமது நபியின் வாரிசாகக் கருதப்படும் கலீபாக்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் குடிமை, மதம் தொடர்பான விவகாரங்களின் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர். 1258 இல் பாக்தாத் நகரை மங்கோலியர் கைப்பற்றும்வரை கலீபா அந்நகரை ஆட்சி செய்தார். பின்னர் எகிப்தில் 1516-17ஆம் ஆண்டுகளில் ஆட்டோமானியர் வெற்றி பெரும்வரை ஆட்சி செய்தார். இதன் பின்னர் ஆட்டோமானிய சுல்தான்களே இப்பதவியை வகித்து வந்தனர். ஆட்டோமானியப் பேரரசு நீக்கப்பட்டு (1920) முஸ்தபா கமால் அத்தாதுர்கின் தலைமையில் துருக்கியக் குடியரசு உருவானபோது இக்கலீபா பதவி ஒழிக்கப்பட்டது.
சாதியும் பெண்களும்
“இந்திய நிலப்பிரபுத்துவ”த்திலிருந்து சுவீகரித்துக்கொண்ட சமூக நிறுவனங்கள் பலவற்றை சுல்தான்கள் மாற்றி அமைக்கவில்லை. அடிமை முறை ஏற்கெனவே இந்தியாவில் நிலவியது. இருப்பினும், பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் அடிமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. போர், வரி செலுத்தத் தவறுதல் ஆகிய இரு நேர்வுகளாலும் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். வீட்டுவேலை செய்வதிலும் கூடவே கைத்தொழிலிலும் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். கிராம சமுதாயமும் சாதி அமைப்பும் மாற்றமின்றி நீடித்தன. பாலினச் சமத்துவமின்மை, தடையின்றி நடைமுறையில் நீடித்தது. மத்திய கால இந்தியப் பெண்களிடம் கல்வியின்மை பரவலாகக் காணப்பட்டது. மேலும் சில இந்து சாதிகளில், உயர்குடிப் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவமானத்திற்கு உரியதாகவும் கருதப்பட்டது. மேல் தட்டு இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது; மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர் தவிர வேறெந்த ஆண்களோடும் எவ்விதத் தொடர்புமின்றி ஸெனானாவில் (பெண்கள் வசிப்பிடத்தில்) ஒதுக்கி வைக்கப்பட்டனர். செல்வப் பெண்கள் மூடு பல்லக்கில் பயணம் செய்தனர்.
பர்தா அணிந்திருந்தபோதிலும் சில விஷயங்களில் இஸ்லாமியப் பெண்களுக்கு, பெரும்பாலான இந்துப் பெண்களைக் காட்டிலும் ஒப்பிட்டளவில் சமூகத்தில் உயர்ந்த தகுதியும் அதிக சுதந்திரமும் இருந்தன. அவர்கள் தங்களின் பெற்றோரிடமிருந்து சொத்துரிமை பெறவும், மண விலக்கு பெறவும் உரிமை இருந்தது; இந்தச் உரிமைகள் இந்துப் பெண்களுக்கு இல்லை. ராஜபுத்திரர்களிடையே இருந்ததைப் போல், பல இந்து சமுதாயங்களில் பெண் குழந்தை பிறப்பது, ஒரு கெடுவாய்ப்பாகக் கருதப்பட்டது. இஸ்லாமிய மரபில், விதவைகள் உடன்கட்டை ஏறும் (சதி) வழக்கம் அறியப்பட்டிருக்கவில்லை. பெண்கள் படிக்கவும் எழுதவும் கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. அதே நேரத்தில் அது பலதார மணத்திற்கு ஏற்பளித்தது.
கலப்புப் பண்பாட்டின் பரிணாமம்
இந்தியருடனான துருக்கியரின் பரஸ்பரத் தொடர்பு, கட்டடக்கலையிலும் நுண்கலையிலும் இலக்கியத்திலும் அதன் தாக்கத்தைக் ஏற்படுத்தியது.
சுல்தான் ஃபெரோஸ் துக்ளக், 1,80,000 அடிமைகள் வைத்திருந்ததற்காகப்புகழ்பெற்றவர். இதில் 12,000 பேர் கைவினைஞர்களாகப் பணிபுரிந்தனர். அவரது முதன்மை அமைச்சர் கான் ஜஹன் மக்பூல் 2000த்துக்கும் அதிகமான பெண் அடிமைகளை வைத்திருந்தார்.
கட்டடக் கலை
வளைவு, கவிகை, நிலவறைகள், சுண்ணாம்புக் கலவைப் பயன்பாடு, சாராசெனிய அம்சங்கள் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாயின. பளிங்குக்கல், சிகப்பு, சாம்பல் மஞ்சள் நிற மணற்கல் பயன்பாடு கட்டடங்களுக்குப் பேரழகூட்டின. சுல்தான்கள், ஏற்கெனவே இருந்த கட்டடங்களைத் தம் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டனர். இதற்கு, தில்லியில் குதுப் மினாருக்குப் பக்கத்தில் அமைந்துள்ள குத்புதீன் ஐபக்கின் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியும் அஜ்மீரிலுள்ள அத்ஹை- தின்-க ஜோப்ராவும் சிறப்பான எடுத்துக்காட்டுகள். ஒரு சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவில், குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியாக மாற்றி அமைக்கப்பட்டது; ஒரு மசூதியாக மாற்றப்படுவதற்கு முன்பு அத்ஹை-தின்-க-ஜோப்ரா, ஒரு சமண மடாலயமாக இருந்திருக்கிறது.
இல்துமிஷ் கட்டி முடித்த போது 72.5 மீட்டர் உயரமிருந்த குதுப் மினார், ஃபெரோஸ் ஷா துக்ளக் மேற்கொண்ட பழுதுநீக்கும் பணிகளால் 74 மீட்டராக உயர்ந்தது. 379 படிகள் கொண்ட மினார், அதன் உயரத்துக்காகவும், -மாடிகளை அடையாளப்படுத்துகிற துருத்தி நிற்கிற உப்பரிகைகளுக்காகவும், படிப்படியான கோபுரச் சரிவுக்காகவும், கோபுரத்தைச் சுற்றிலுமுள்ள சரிவான விளிம்பு அலங்கரிப்புகள் ஒரு வளைவு தோற்றத்தைத் தருவதற்காகவும் சிறப்புடையது.
மேற்காசியாவிலிருந்து கைவினைஞர்கள் வந்து சேர்ந்ததும் வளைவுகளும் கவிகைகளும் துல்லியமும் முழுமையும் அடைந்தன. படிப்படியாக உள்ளூர் கைவினைஞர்களும் இதில் பயிற்சி பெற்றனர். முதல் மெய்யான வளைவால் அலங்கரிக்கப்பட்டது பால்பனின் கல்லறை. குவ்வாத் உல் இஸ்லாம் மசூதிக்கு ஒரு நுழைவாயிலாக அலாவுதீன் கில்ஜி கட்டிய அலாய் தர்வாஸா, முதல் உண்மையான கவிகையாகும். கியாசுதீன் துக்ளக்கும், முகமது பின் துக்ளக்கும் தலைநகர் தில்லியின் துக்ளகாபாத்தில் யமுனை நதியைத் தடுத்து செயற்கை ஏரி ஒன்றை உருவாக்கி அதன் நடுவில் அமைந்திருந்த கோட்டை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கியாசுதீன் துக்ளகின் கல்லறை, ஓர் உயர்ந்த மேடையின் மீது கவிகைகளைக் கொண்ட சாய்வுச் சுவர் அமைப்பை அறிமுகப்படுத்தியது. ஃபெரோஸ் துக்ளகின் கட்டடங்கள், குறிப்பாக அவரது உல்லாச விடுதியான ஹவுஸ் காஸ், இந்திய, சாராசெனிய அம்சங்களை ஒன்று விட்டு ஒன்றான அடுக்குகளில் இணைத்திருப்பது, ஓர் ஒருங்கிணைப்பு உணர்வைக் காட்டுகிறது.
சிற்பமும் ஓவியமும்
கட்டடங்களை விலங்கு மற்றும் மனிதச் சித்திரங்கள் கொண்டு அலங்கரிப்பது இஸ்லாமிய விரோதம் என்று மரபான இஸ்லாமிய இறையியல் கருதியது. எனவே இஸ்லாத்துக்கு முந்தைய கட்டடங்களில் காணப்பட்ட நன்கு செதுக்கப்பட்ட உயிரோட்டம் கொண்ட உருவங்களுக்குப் பதிலாக பூ மற்றும் இதர வடிவ வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. தனிச்சிறப்பான கையெழுத்துப் பாணியில் பொறிக்கப்பட்ட குர்ஆன் வாசகங்களைக் கொண்டு கட்டடங்களை அழகுப்படுத்தும் கலையான அரபிய சித்திர எழுத்து வேலை, கட்டடங்களுக்கு எழிலூட்டியது.
இசையும் நடனமும்
இசை என்பது கூட்டிணைவுப் போக்குகள் தெளிவாக வெளிப்படுகிற ஒரு துறையாகும். ரபாப், சாரங்கி போன்ற இசைக்கருவிகளை இஸ்லாமியர் கொண்டுவந்தனர். இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார். சூஃபிகளின் மனனப்பயிற்சி, இசையோடு சேர்ந்து காதல் கவிதைகளைப் பாடுதல் போன்றவை இசையைப் பரவலாக்க உதவியது. சூஃபி துறவி பிர் போதன் இக்காலத்தின் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார். இசையின் வளர்ச்சிக்கு அரச ஆதரவும் இருந்தது. ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக்தர்பன் என்ற இந்திய சமஸ்கிருத இசை நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்ததன் மூலம் ஒத்திசைவுக்கு இட்டுச்சென்றது. நடனமும் அரசவையில் ஒரு உந்துதலைப் பெற்றது. இசைஞர் நுஸ்ரத் காட்டன் நடனக்காரர் மிர் அஃப்ரோஸ், ஜலாலுதீன் கில்ஜி அரசவையில் இருந்ததை ஜியாவுத்தீன் பரனி பட்டியலிடுகிறார்.
இலக்கியம்
பாரசீக உரைநடையிலும் கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர் குஸ்ரு. தமது “ஒன்பது வானங்கள்” (Nu Siphr) நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக்கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார். இந்நூலில், அவர் இந்தியாவின் வானிலையை, அதன் மொழிகளை குறிப்பாக சமஸ்கிருதத்தை; அதன் கலைகளை, அதன் இசையை, அதன் மக்களை, அதன் விலங்குகளையும் கூடப் போற்றுகிறார். இஸ்லாமிய சூஃபி துறவிகள், இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தினர். சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களைக் கொண்ட "ஃபவாய் துல் ஃபவாத்" என்ற ஒரு நூலை அமிர் ஹாஸ்ஸன் தொகுத்தார். ஜியவுத்தீன் பரனி, சம்சுதீன் சிராஜ் அஃபிஃப், அப்துல் மாலிக் இஸ்லாமி ஆகியோரின் எழுத்துக்களுடன் சேர்ந்து ஒரு வலுவான வரலாறு எழுதுகிற சிந்தனைப் போக்கு உதித்தது. பாரசீக உரைநடையின் ஆசானாக ஜியாவுத்தீன் பரனி தோன்றினார். ஃபுதூ உஸ் சலாதின் என்ற தனது கவிதைத் தொகுப்பில் அப்துல் மாலிக் இஸ்லாமி, கஜனவிய காலம் தொடங்கி முகமது-பின்-துக்ளக் ஆட்சி வரையிலுமான இஸ்லாமியர் ஆட்சியின் வரலாற்றைப் பதிவு செய்தார்.
சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் பாரசீக இலக்கியம் வளமடைந்தது. பாரசீகச் சொற்களுக்கு நிகரான ஹிந்தாவி சொற்களைக் கொண்ட அகராதிகள் தொகுக்கப்பட்டன. இவற்றுள் மிகவும் முக்கியமானவை: ஃபக்ருத்தின் கவ்வாஸ் இயற்றிய ஃபரங்-இ-கவாஸ் முகம்மத் ஷதியாபடி இயற்றிய மிஃப்தஜூ-உல்-ஃபுவாஜாலா ஆகியனவாகும். கிளி நூல் எனும் துதிநமஹ என்பது ஜியா நக்ஷபி, பாரசீக மொழியில் மொழிபெயர்த்த சமஸ்கிருதக் கதைகளின் தொகுப்பாகும். மகாபாரதமும் ராஜதரங்கிணியும் கூடப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
சமஸ்கிருத இலக்கியத்தின் முன்னேற்றத்தை தில்லி சுல்தானிய ஆட்சி தடுக்கவில்லை. உயர் அறிவுபூர்வ சிந்தனை மொழியாக சமஸ்கிருதம் தொடர்ந்தது. பேரரசின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சமஸ்கிருதப் பள்ளிகளும் கல்வி நிலையங்களும் தொடர்ந்து செழித்தன. தில்லியிலுள்ள 1276ஆம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு (பாலம் பவோலி), சுல்தான் பால்பனின் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணு பகவான், எந்தக் கவலைகளுமின்றிப் பாற்கடலில் துயில்கிறார் என்கிறது. சமஸ்கிருத இலக்கியத்தில் அரபு, பாரசீக மொழிகளின் தாக்கத்தை, மொழிபெயர்ப்புகள் வழி உணரலாம். ஸ்ரீவரா, கதாகௌடுக என்ற தமது நூலில், யூசுஃப் ஜுலைகாவின் கதையை ஒரு சமஸ்கிருதக் காதல் பாடலாகச் சேர்த்திருக்கிறார். காஷ்மீர அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார, ஷா நாமா எனும் ஃபிர்தௌசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளார்.
பாடச் சுருக்கம் :
- பொ.ஆ. 712 இல் சிந்துப் பிரதேசத்தின் மீது முகமது-பின்-காஸிம் படையெடுப்பு
- 11ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகள், கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட கஜினி மாமுதுவின் தாக்குதல்களைக் கண்டது.
- 12ஆம் நூற்றாண்டில் முடிவில் நிகழ்ந்த முகமது கோரியின் படையெடுப்பு, 1206இல் குத்புதீன் ஐபக்கின் கீழ் தில்லி சுல்தானிய ஆட்சி நிறுவப்படுவதற்கு இட்டுச்சென்றது.
- சுல்தான்களின் மேம்பட்ட இராணுவ உத்திகளால், 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜபுத்திர அரசர்கள் தங்களின் மேலாதிக்கத்தை இழந்தனர்.
- தில்லி சுல்தானியம் ஐந்து வம்சாவளிகள் கொண்டது. இப்பாடத்தில் மூன்று முக்கிய சுல்தானிய வம்சங்களான அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம் ஆகியனவற்றுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டுள்ளது.
- அலாவுதீன் கில்ஜியின் முற்போக்கான பல இராணுவ, சந்தைச் சீர்திருத்தங்கள்
- முகமது-பின்-துக்ளக்கின் புதுமையான நடவடிக்கைகள் அவரது காலத்திற்கு மிகவும் முக்கியமற்றவை என்பதோடு அவருடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
- ஃபெரோஸ் துக்ளக்கின் சீர்திருத்தங்களும் நடவடிக்கைகளும் அவருக்கு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுத்தந்தன.
- ஒரு பண்பாட்டுக் கலப்பும் இலக்கியம், கலை, இசை கட்டடக் கலைத் துறைகளில் பரஸ்பரத் தாக்கமும் ஏற்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக