KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

அறிமுகம் : தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் இன்றைய தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் சாதவாகனர் ஒரு வலுவான அரசை நிறுவினர். இதற்கும் தெற்கே தமிழகத்தின் வளமான பகுதிகளை ஆண்டு வந்த, தமிழ் அரச மரபினரான சேர, சோழ பாண்டியர்கள் சாதவாகனரின் சம காலத்தவர் ஆவர். ஆனால் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டுகளில் மூவேந்தரைப் பற்றியக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளதின் அடிப்படையில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழக அரசர்கள் தங்கள் அரசுகளை நிறுவி விட்டதை அறிய முடிகிறது. இவ்விரு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் முறை மற்றும் சமூகங்களிடையே பல பொதுவான அம்சங்கள் இருந்தன. வேறுபாடுகளும் நிலவின.


சான்றுகள் :


தொல்பொருள்கள் :


• தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்

• அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் கட்டட இடிபாட்டுத் தடயங்களைக் கொண்டுள்ளன, துறைமுகங்கள் தலைநகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.

• ஆந்திரா, கர்நாடகப் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும் சைத்தியங்களும் கூடிய பெளத்தத்தலங்கள் (அமராவதி, நாகார்ஜுனகொண்டா முதலானவை)


ஸ்தூபிகள் :


ஸ்தூபி என்பது புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். இறந்தோரை எரித்த சாம்பல் இங்கு வைக்கப்படும். தொடக்கத்தில் புத்தரின் அஸ்தி எட்டு ஸ்தூபிகளில் வைக்கப்பட்டன. இவ்வாறு பௌத்தத்தின் புனிதக் கட்டடக்கலை தோற்றம் பெற்றது. அரைக்கோள வடிவமுள்ள ஸ்தூபி பேரண்டத்தைக் குறிக்கின்றது. அத்துடன் புத்தர் ஆன்மீக உலகின் பேரரசர் என்பதையும் குறிக்கிறது. ஸ்தூபிகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டப் பாதையில் பக்தர்கள் வலம் வருவர்.


நாணயச் சான்றுகள் :


• ஆந்திர - கர்நாடகப்பகுதிகளின் சாதவாகனர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்.

• சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெளியிட்ட நாணயங்கள் 

• தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள் 


கல்வெட்டுகள் :


• ஆந்திர - கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்.

• தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் : மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை.

• ஆந்திரப் பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிற பெளத்த கல்வெட்டுகளும்.

• தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே , குவாசிர் அல் காதம் (எகிப்து).


இலக்கியச் சான்றுகள் :


• சங்க நூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்.

• பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரம்.

• ஆந்திரர் /சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்.

• மகாவம்சம் முதலான பெளத்த வரலாற்று நூல்கள்.

• சாதவாகன அரசர் ஹாலா பிராகிருத மொழியில் எழுதிய காஹாசப்தசதி.


தமிழ் செவ்வியல் இலக்கியம் :


தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது. சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் (பொ.ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.


வெளிநாட்டவரது குறிப்புகள் :


கீழ்க்காணும் கிரேக்க, லத்தீன் சான்றுகள் தொலைதூர வணிகம், பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

• பொ.ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூலான எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்

• பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் மூத்த பிளினி எழுதிய ‘இயற்கை வரலாறு’ (Natural History)

• பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி எழுதிய ஜியோகிரபி (புவியியல்)

• ரோமானியரின் நிலவரைபடமான பீயூட்டெஞ்செரியன் அட்டவணை (Peutingerian Table)


5.1 மௌரியர் காலத் தென்னிந்தியா :


அசோகருடைய கல்வெட்டுகளே (பொ.ஆ.மு. 270-30) தென்னிந்தியாவின் அரசியல் நிலை குறித்த முதல் சித்திரத்தை வழங்குகிறது. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் மௌரிய அரசின் எல்லைக்கப்பால் அமைந்த அண்டை அரசுகளானத் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச மரபுகளான சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்திய புத்திரர் ஆகியோரைக் குறிப்பிடுகின்றார். அப்பகுதிகளில் அசோகர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான இருவகைப்பட்ட மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தார் எனச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் மௌரியப் பேரரசு கர்நாடகா, ஆந்திராவின் வடபகுதிகளையும் கொண்டிருந்தது. தமிழக அரசுகள் சுதந்திரமான அண்டை நாடுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ 2400 பாடல்கள் கொண்ட இலக்கியக் கருவூலமாகும். மூன்று முதல் எண்ணூறு அடி அளவு கொண்ட இப்பாடல்கள் பாணர்களாலும் புலவர்களாலும் இயற்றப்பட்டவை.

எட்டுத்தொகையாவன : 1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு

பத்துப்பாட்டாவது : 1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. மதுரைக் காஞ்சி 7. நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு 9. பட்டினப்பாலை 10. மலைபடுகடாம்.

சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி பற்றியும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றியும் பேசுவனவாகும். திருக்குறளும் நாலடியாரும் இதில் முதன்மையானவை.

முதன்மையான காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பண்பாடு மற்றும் மதவரலாற்றுக்கு சிறந்த சான்றுகளாகப் பயன்படுபவை.


சங்க காலப் பெண்பாற் புலவர் : சங்கப் பாடல்களின் தொகுப்பிற்கு பங்களித்த 450க்கும் மேற்பட்ட புலவர்களில் முப்பது பெண்பாற் புலவரும் அடங்குவர். அவர்கள் 150க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளனர். அவர்களுள் ஒளவையார், அல்லூர்நன்முல்லையார், காக்கைப்பாடினியார், காவற்பெண்டு, நல்வெளியார், ஒக்கூர் மாசாத்தியார், பாரிமகளிர் ஆகியோர் மிகமுக்கியப் பெண்பாற் புலவர்களாவர்.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், சாதவாகனர் எழுச்சிக்கு முன்னரும் பல சிற்றரசுகள் தோன்றியுள்ளன. அவற்றின் அரசர்களைப் பற்றி போதுமான செய்திகள் கிடைக்கவில்லை. எனினும் அவர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் சிறுபகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.


5.2 சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா :


சாதவாகனர்கள் பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டில் தக்காணப் பகுதியில் தோன்றினர். மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு சில பகுதிகளை அவர்கள் ஆண்டனர். அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளின்படி தெலங்கானா பகுதிகளில் ஆட்சியைத் தொடங்கிய சாதவாகனர் மகாராஷ்டிரப் பகுதிகளுக்கு நகர்ந்து, கோதாவரி நதித் தீரத்தில் பிரதிஸ்தான் (மகாராஷ்டிராவில் பைத்தன்) என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தினர். பிளினியின் நூல் ஆந்திர நாட்டிலிருந்த கோட்டைகளுடன் கூடிய 30 நகரங்கள், ஒரு பெரும்படை, குதிரைப் படை, யானைப் படை ஆகியன குறித்து பேசுகிறது. சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சதகர்னி பெரும் அரசராவார். சாகஅரசர் ‘நாகபனா’வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார். அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேத யாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

கௌதமிபுத்ர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற வசிஷ்டபுத்ர புலுமாயி, சாதவாகன நாட்டின் எல்லைகளை விரிவடையச் செய்தார். மற்றொரு புகழ்பெற்ற அரசரான யக்னஸ்ரீ சதகர்னி, தனது ஆட்சியின் வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் கப்பலின்வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார். 

சாதவாகன அரசர் ஹாலா 700 காதற் பாடல்களைக் கொண்ட காஹாசப்தசதி என்ற நூலை இயற்றினார். மகாராஷ்டிரப் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் கருப்பொருள் சங்க இலக்கியத்தின் அகப் பொருளை ஒத்துள்ளன.

பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டையொட்டி சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அவர்களைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் இக்சவாகுவும் அதனைத் தொடர்ந்து பல்லவர்களும், வட கர்நாடகப் பகுதிகளில் கடம்பர்களும் ஆட்சி புரிந்தனர்.

சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் : நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காணமுடிகிறது. நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது. இது காலப் போக்கில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலைகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.

முதன்முதலாகத் தக்காணத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரிய அரசு நிறுவப்பட்டது. பௌத்த சங்கங்களுக்கு என்றே பல குடைவரைக் குகைகள் உருவாக்கப்பட்டன. அவை உள்நாட்டுப் பகுதிகளையும் கொங்கணக் கடற்கரைப் பகுதியையும், உள்நாட்டு வணிகப் பாதைகளையும் இணைக்கும் புள்ளிகளாக அமைக்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகளை இவை கொண்டுள்ளன. இக்காலத்தில் இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே விறுவிறுப்பான வணிகம் நடைபெற்றது.


5.3 சங்க காலம் :


பொது ஆண்டுக்கு முந்தைய இறுதி மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, பொது ஆண்டிற்கு பின்னர் தொடங்கும் முதல் மூன்று நூற்றாண்டுகள் வரையிலான காலம் சங்க காலம் என பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இக்காலம் பற்றிய செய்திகள் பெருமளவில் சங்க இலக்கியங்களிலிருந்தே பெறப்படுகின்றன. இலக்கியச் சான்றுகள் தவிரத் தெளிவான கல்வெட்டுச் சான்றுகள், தொல் பொருள் சான்றுகள் கிடைக்கப் பெறுவதால் இக்காலக் கட்டம் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தொடங்குகிறது எனக் கூறலாம். ஆகவே இக்கால கட்டத்தைத் தொடக்க வரலாற்றுக் காலம் என அழைப்பதே பொருத்தமாகும்.

மூவேந்தர் : பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தின் மூன்று அரச மரபுகள் குறித்து அசோகர் அறிந்திருந்தாலும், பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு மற்றும் அதற்கு பின் வந்த காலத்தைச் சேர்ந்த சங்க இலக்கியத்தின் மூலமே அவ்வரசர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடிகிறது. மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடிசூடிய அரசர்களான சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெருவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அசோகர் கல்வெட்டுகளில் மேற்சொல்லப்பட்ட மூவேந்தரோடு இடம் பெற்றுள்ள சத்யபுத்ர (அதியமான்) என்பது சங்கப் பாடல்களில் இடம் பெறும் வேளிரைக் குறிப்பதாக உள்ளது.

சோழர் : தமிழகத்தின் மத்திய, வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர். அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும். இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்பட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும். (திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது). மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கியத் துறைமுகமாகவும் அரச குடும்பத்தின் மாற்று வாழ்விடமாகவும் திகழ்ந்தது. சோழரின் சின்னம் புலி ஆகும். காவிரிப்பூம்பட்டினம் இந்துமா கடலின் பல பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களைத் தன்பால் ஈர்த்தது. கரிகாலனின் ஆட்சியின் போது இங்கு நடைபெற்ற ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் விரிவாக விளக்குகிறார். இளஞ்சேட்சென்னியின் மகனான கரிகாலன் சங்ககால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். பட்டினப்பாலை அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது வெண்ணி போர்க்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும். காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் வேளாண்மையை வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார். பெருநற்கிள்ளி எனும் பெயருடைய மற்றொரு அரசன் வேத வேள்வியான ராஜசூய யாகத்தை நடத்தியுள்ளார். கரிகாலனின் மறைவைத் தொடர்ந்து உறையூர் மற்றும் புகார் அரச குடும்பத்தினரிடையே வாரிசுரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டிருக்கிறது.

சேரர் : மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ் நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர். வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுபாட்டில் இருந்தன. வஞ்சி இன்றைய தமிழகத்தின், கரூர் என்று அடையாளம் காணப்படுகிறது. அதேசமயம் சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங் காண்கின்றனர். சேர அரச குடும்பத்தில் இரு கிளைகள் இருந்ததெனவும், பொறையர் என்னும் கிளையினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர் எனவும் பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள் குறித்தும் பதிற்றுப்பத்து பேசுகிறது. கரூர் நகருக்கு அருகேயுள்ள புகளூரிலுள்ள கல்வெட்டு, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களில் ஒருவரான சேரல் இரும்பொறை தன் பெயரில் நாணயங்கள் வெளியிட்டுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் முக்கியச் சேர அரசர்கள் ஆவர். பல குறுநில மன்னர்களைச் செங்குட்டுவன் வெற்றி கொண்டுள்ளார். கடற்கொள்ளையர்களை அடக்கியதன் மூலம் முக்கியத் துறைமுகமான முசிறியின் பாதுகாப்பை உறுதிபடுத்தினார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் செங்குட்டுவனின் மாபெரும் வட இந்தியப் படையெடுப்பு சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. இவர் ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் வைதீக, அவைதீக மதங்களை ஆதரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. செப்பு, ஈய நாணங்களைச் சேர அரசர் வெளியிட்டுள்ளார். தமிழ் பிராமியில் புராணக் குறிப்புகளைக் கொண்டுள்ள அவை, ரோம நாணயத்தைப் போலுள்ளன. எழுத்துக்கள் எவையும் இல்லாமல் சேரர்களின் வில் அம்புச் சின்னங்களைத் தாங்கிய சேர நாணயங்களும் கிடைத்துள்ளன.

பாண்டியர் : மதுரையிலிருந்து ஆண்டனர். தாமிரபரணி நதி வங்காளவிரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியத் துறைமுகமாகும். இது முத்துக்குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகும். கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியரின் சின்னம் மீன். அவர்களின் நாணயங்களில் ஒருபுறம் யானையின் வடிவமும் மற்றொரு புறம், புதிய பாணியில் மீனின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் கேரளத்தின் தெற்குப் பகுதிகளின் மீது போர் தொடுத்து கோட்டயத்துக்கு அருகேயுள்ள நெல்கிண்டா துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர். சங்கப் பாடல்கள் பாண்டிய அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. ஆனால் அவர்கள் எப்போது அரச பதவி ஏற்றார்கள், அவர்கள் ஆண்ட கால அளவு என்ன, என்பன போன்ற விவரங்கள் தெளிவாக இல்லை.மாங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டு பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய அரசன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது. மதுரைக் காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது. முதுகுடுமிப் பெருவழுதி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேள்விக்குடிச் செப்பேடுகளில், பிராமணர்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார் எனக் குறிக்கப்படுகிறார். தான் செய்த வேத வேள்விச் சடங்குகளின் நினைவாகப் பெருவழுதி என்ற பெயரில் புராண கதைப் பொறிப்புகளைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ளார். நெடுஞ் செழியன், சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன், எழினி, எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்) ஆகியோரின் கூட்டுப்படைகளைத் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார். மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும். கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.


5.4 தமிழ் திணைப் பகுதிகளில் சமூக உருவாக்கம் :


அக்காலத்தில் சமூக உருவாக்கத்தை நாம் புரிந்துகொள்ளச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. திணைக் கோட்பாட்டின் பின்புலத்தில் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் தெய்வம், மக்கள், சூழல் சார்ந்த பண்பாட்டு வாழ்க்கை எனத் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தது. 

குறிஞ்சி மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும். இங்கு வேட்டையாடுதலும், உணவு சேகரித்தலும் வழக்கமாக இருந்தது.

முல்லை காடும் காடு சார்ந்த இடமுமான இங்கு, கால்நடை மேய்ப்பதும், அத்துடன் மாற்றிட வேளாண்மை செய்வதும் தொழிலாக இருந்தது.

மருதம் வயலும் வயல் சாந்த இடமுமான இங்கு நீர்பாசனத்தின் மூலம் கலப்பைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வது தொழிலாகும்.

நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமுமான இங்கு மீன்பிடித்தலும் உப்பு உற்பத்தியுமே முக்கியத் தொழில்களாகும்.

பாலை மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலப்பகுதியான இங்கு வேளாண்மை சாத்தியமில்லை என்பதால் மக்கள் கால்நடைத் திருட்டையும் கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டனர்.


5.5 தமிழ் அரசமைப்பு :


ஒருவகையில் இத்திணைசார் பாகுபாடு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் நிலவிய சமச்சீரற்ற வளர்ச்சியை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அரசியல் வடிவங்களிலும் அந்நிலை காணப்பட்டது. ஆட்சியாளர்களில் மூன்று வகைப்பட்ட தலைமைத்துவம் கொண்டவர்களைக் காண முடிகிறது. 1) கிழார் 2) வேளிர் 3) வேந்தன். கிழார் என் போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர். வேந்தர் எனப்பட்டோர் மிகப் பெரும் வளமான நிலப் பகுதியை கட்டுப்படுத்திய அரசர்களாவர்.

எண்ணிக்கையில் அதிகமாக இருந்த வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுபாட்டில் கொண்டிருந்தனர். அதியமான், பாரி, ஆய், இருங்கோ போன்ற குறுநில மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென இயற்கை வளமிக்க ஒரு பகுதியை ஆண்டனர். அவர்கள் பெருந்தன்மை கொண்ட புரவலர்களாகப் புலவர்களையும் ஆடல் பாடல் கலைஞர்களையும் ஆதரித்தனர். இவர்கள் படை வலிமை பெற்றிருந்தனர். ஆநிரை கவர்தல் காரணமாக இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன. பல நேரங்களில் இவர்கள் இணைந்து மூவேந்தர்களில் யாராவது ஒருவரை எதிர்த்தனர்.

சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும் அறிஞர்களிடையே பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. தொடக்க காலத்தைச் சேர்ந்ததும் பெரும்பான்மையோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்தும் யாதெனில் சங்க காலச் சமுதாயமானது நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு சமூகம் என்பதாகும். சிலர் இதனை மறுக்கின்றனர். சேர, சோழ, பாண்டியரின் அரசியல் முறையானது, அரசு உருவாக்கத்திற்கு முன்பான குடிமைத் தலைமை முறையைச் சேர்ந்தது என்பது இவர்களின் கருத்தாகும். அவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கும் வாதங்கள் வருமாறு

1. சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை .

2. எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையிருந்தது.

3. ஒரு அரசின் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் வேளாண் வளர்ச்சியும் வேளாண் உபரியும் நாசம் ஏற்படுத்தும் போர்களால் தடுக்கப்பட்டன.

4. வட இந்திய அரசுகளைப் போல வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.

மேற்சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டாளர்கள் கீழ்க்காணும் வாதங்களை முன்வைக்கப்படுகின்றனர்.

• சங்க இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தோமேயானால் மருத நிலப் பகுதி வாழ் சமுகத்தில் வேற்றுமைகள் தோன்றிவிட்டதை அறியலாம்.

• தங்கள் நிலத்தின் மீது மூவேந்தர் கொண்டிருந்த பற்றையும் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க - ரோமானிய நூல்கள் துணைச் சான்றுகளாய் உறுதிப்படுத்துகின்றன.

• ஆட்சிப்பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களே புறத்திணை இலக்கியங்களின் முக்கியப் பாடுபொருளாக இருக்கின்றன.

• வணிகப் பெரு வழிகளிலும், காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்திலும் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. மலையகப் பகுதிகளிலிருந்தும், முசிறி துறைமுகத்திலிருந்துமே சேர அரசர் வரி பெற்றனர் என அறிய முடிகின்றது.

• பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை வணிகம் மிகப் பெரும் பங்கை வகித்துள்ளது.


வேந்தரின் அரசியல் எழுச்சி : இரும்புக்காலகட்டத்தில் (பொ.ஆ.மு 1100 - 300) தோன்றிய தலைவர்களிலிருந்து தொடக்க வரலாற்று கால வேந்தர்கள் உருவாயினர். தலைவர்களில் ஒரு சிலர் மேய்ச்சல் நிலங்களின் மீதும், வேளாண் நிலங்களின் மீதும் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டை வைத்ததன் மூலம் உயர்நிலையை (வேந்தர்) அடைந்தனர். மற்றவர்கள் தலைவர்களாகவே (வேளிர்) நீடித்தனர். எடுத்துக்காட்டாக, அசோகர் கல்வெட்டுகளில் சத்யபுத்ரா என்று குறிப்பிட்டுள்ள அதியமான் நாளடைவில் வலிமை குன்றியதால் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் போல அரசன் என்ற நிலையை அடைய இயலவில்லை.கிழார்களையும், வேளிர் குலத்தலைவர்களையும் வேந்தர்கள் அடிபணியச் செய்ததோடு தங்களுக்குள்ளும் போரிட்டுக்கொண்டனர். இதன் பொருட்டு தங்களுக்கெனப் படை வீரர்களை அணி திரட்டியதோடு, சில வேளிர்குலத் தலைவர்களின் உதவியையும் பெற்றனர். சங்க காலத்தைச் சேர்ந்த வேந்தர்கள் தங்களது வலிமையைப் பறை சாற்றிக் கொள்வதற்காகச் சிறப்புப் பட்டங்களைச் சூடிக் கொண்டனர். கடுங்கோ, இமயவரம்பன், வானவரம்பன், பெருவழுதி போன்ற பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டதன் மூலம் தங்களை ஏனைய மக்களிடமிருந்தும் வேளிர்குலத் தலைவர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.இவ்வேந்தர்கள் புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரித்து அவர்களை தங்களது அரசவையில் (அவையம்) அமர வைத்துக் கொண்டது ஒரு வகையில் தங்களையும், தங்கள் நாட்டையும் புகழ்ந்து பாடுவதற்காக இருக்கலாம். எடுத்துக்காட்டாக சோழ அரசன் கரிகாலன் பட்டினப்பாலையை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பெருமளவில் பொன் நாணயங்களைப் பரிசாக அளித்துள்ளார்.


5.6 சமூகமும் பொருளாதாரமும் :


சங்ககாலத்தில் வேந்தர்கள் மேற்கொண்ட போர்கள் எதிரிகளின் பகுதிகளைக் கைப்பற்றி அதன் மூலம் தங்களது ஆட்சி எல்லைப் பரப்பினை விரிவாக்குவதற்காக அமைந்தன. முடிவில்லாத போர்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் உருவாவதற்கு காரணமாய் அமைந்திருக்கலாம். சடங்குகள் நடைபெற்ற இடங்களில் போர்க் கைதிகள் பணியாற்றியதற்கான பதிவுகள் காணப்படுகின்றன. அடிமைகள் பற்றிய சில குறிப்புகளும் காணப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியில் பெண்களும், செயலூக்கத்துடன் பங்கெடுத்துள்ளனர். சங்க காலத்தில் பல பெண்பாற் புலவர்களும் இருந்துள்ளனர்.கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க அணிகலன் செய்தல், சங்கு வளையல், அணிகலன் செய்தல் கண்ணாடி, இரும்பு வேலை, மட்பாண்டம் செய்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து சான்றுகள் உள்ளன. நகர மையங்களான அரிக்கமேடு, உறையூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை, கேரளத்தில் பட்டணம் ஆகிய இடங்களில் இது போன்ற கைவினைப் பொருள் உற்பத்தி வளமையாக நடந்துள்ளன. மதுரைக்காஞ்சி பகல் மற்றும் இரவு நேரக் கடைவீதிகளையும் (நாளங்காடி, அல்லங்காடி) அங்கு விற்பனையாகும் பலவகைப்பட்ட கைவினைப் பொருள்கள் பற்றியும் பேசுகிறது. பல்வேறு வகைப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கவில்லை. சிலர் விலையுயர்ந்த ஆபரணக் கற்களையும், ஓரளவு மதிப்புள்ள ஆபரணக் கற்களையும் பண்டமாற்றாகக் கொடுத்து மூலப் பொருள்களைப் பெற்றனர். அம்மூலப் பொருள்கள் தொழிற்கூடங்களைச் சென்றடைந்து பல்வேறு பொருள்களாகத் தயார் செய்யப்பட்டு, பின்னர் வேறு சில பொருள்களுக்காகப் பண்டமாற்று செய்யப்பட்டன.மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ் மொழி பேசாத ஏனைய மக்கள், பெரும்பாலும் வணிகர்கள் நகரங்களிலும் தொழில் மையங்களிலும் இருந்ததைத் தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். மகதக் கைவினைஞர்கள், மாளவ உலோகப் பணியாளர்கள், மராத்திய எந்திரப் பொறியாளர்கள் போன்றோர் தமிழகக் கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக மணிமேகலை குறிப்பிடுகின்றது. தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. உப்பு வணிகர்கள் உமணர் என்றழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாத்து என்னும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களைக் குறிப்பதாகும். 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கையின் சிறப்பம்சங்கள்: 

கீழடியில் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டன. இவற்றில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம மாதிரிகளின் காலம் கி.மு.(பொ.ஆ.மு.) 580 என ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தறிவு : கீழடியில் தமிழ் - பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கி.மு. 580 காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் - பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடும் அடங்கும். இதிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததை அறிய முடிகிறது. 

வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு : கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், புனேவின் தக்காண கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்த உடைந்த எலும்பு துண்டுகள் பகுப்பாய்வு அறிக்கையின்படி, வகைப்படுத்தப்பட்டதில் திமிலுள்ள பசு / காளை, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

கட்டடத் தொழில்நுட்பம் : தமிழகத்தில் சங்ககாலத்தைச் சார்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல் இங்கு கிடைத்துள்ள செங்கற்கள் 1:4:6 என்ற விகிதாச்சார அளவிலேயே காணப்படுவதால் அக்காலகட்டம் கட்டுமானத் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியது தெரிகிறது. 

நெசவுத் தொழில் : அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள நூல் நூற்கப் பயன்படும் 180 - க்கும் மேற்பட்ட தக்களிகள், துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் (வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ) எலும்பினாலான கூரிய முனைகள் கொண்ட தூரிகைகள் (20), கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட தறியில் தொங்கவிடும் குண்டு, செம்பினாலான ஊசி போன்ற தொல்பொருள்கள் இப்பகுதியில் நிலவியிருந்த நெசவுத் தொழிலின் நூல் நூற்றல், பாவு அமைத்தல், தறியிலமைத்தல், நெசவு அதன்பின் சாயமிடல் நிலைகளை உறுதி செய்கின்றன. 

வணிகம் : கீழடி அகழாய்வுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அகேட், கார்னீலியன் போன்ற மணிகள் செய்வதற்கான மூலப்பொருள்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து மகாராஷ்டிரம், குஜராத் வழியாக கொண்டு வரப்பட்டிருக்கலாம்.கீழடியில் சிவப்பு வண்ண பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை பானைகள் கி.மு.2ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த தனித்தன்மை வாய்ந்த அரிட்டைன் வகையாகும். 

அணிகலன்கள் மற்றும் மணிகள் : தங்கத்தினாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்களின் சிறிய துண்டுகள், மதிப்புமிக்க மணிகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட வளையல்கள், சீப்புகள் ஆகிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய மதிப்புறு அணிகலன்களும், ஏனைய அணிகலன்களும் சங்ககாலச் சமூகம் வளமையுடன் இருந்ததற்கான சான்றுகளாகும். மேலும், கண்ணாடி, படிகம், குவார்ட்ஸ், வண்ணம் தீட்டப்பட்ட மண்ணாலான மணிகள், அகேட், கார்னீலியன் மற்றும் சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட மணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இரும்பு பொருள்கள் : அகழாய்வில் இரும்பு ஆணிகள் மற்றும் கத்திகளின் பாகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

சுடுமண் உருவங்கள் : சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 600க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 28 காதணிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள் : தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பகடைக்காய், வட்டச்சில்லுகள் மற்றும் ஆட்டக்காய்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், பொழுது போக்கு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. அகழாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை சுடுமண்ணால் ஆனவை.தட்டையான வடிவில் உள்ள பானை ஓட்டின் விளிம்புகள் நன்கு தேய்க்கப்பட்டு வட்ட வடிவத்தைக் கொண்டிருக்கும் விளையாட்டுப் பொருள் ‘சில்லு’ என்றழைக்கப்படுகிறது. இவ்வகை சில்லுகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டன. 

வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது. ரோம் தங்க வெள்ளி நாணயங்களும் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. ரோமப் பேரரசு தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற தொலைதூரத்தில் அமைந்துள்ள நாடுகளோடும் வணிகத் தொடர்புகள் மேற்கொண்டதைத் தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியாவின் தென் பகுதியில் கடற்கரைகளை எளிதாகச் சென்றடைய முடியும் என்ற சூழல் இருந்ததாலும், கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் கடல் வழிப் பாதையில் அமைந்திருந்த காரணத்தினாலும் கடல் கடந்த தொடர்புகளில் முக்கியப் பங்கு வகித்தது. தொடக்க வரலாற்றுக்கால துறைமுகங்கள் பலவற்றில் கிடைத்துள்ள அம்போரா என்னும் ரோம நாட்டு ஜாடிகள், கண்ணாடிப் பொருள்கள், கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் சுட்டுகின்றன. ரோமானியர்களால் கொண்டுவரப்பட்ட செல்வம் அயல்நாட்டு வணிகர்களின் வருகை ஆகியவை குறித்து தொல்பொருள் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ரோமானியத் தங்க, வெள்ளி நாணயக் குவியல்கள் கோயம்புத்தூர் பகுதியிலும் தென்னிந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.


5.7 கருத்தியலும் மதமும் :


முறைபடுத்தப்பட்ட மத நடவடிக்கைகளின் தோற்றம் அசோகர் காலத்திலிருந்து தென்படத் தொடங்குகிறது. இக்காலகட்டத்தில்தான் பௌத்த மதம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது. அசோகரின் மகள் போதிமரத்தை இலங்கைக்குக் கொண்டு சென்றதாகக் கருதப்படுகின்றது. அசோகருக்கு முன்னதாக சந்திரகுப்த மௌரியர் கர்நாடகத்திற்கு வருகை தந்ததாகவும் பழங்கதை ஒன்று உள்ளது. சாதவாகனர்களும், சங்க காலத்து அரசர்களும், இக்சவாகுக்களும் வேதவேள்விகளை ஆதரித்தனர். பிராமணருடைய வருகை குறித்தும் வேதச் சடங்குகள் நடைபெற்றமைக்கும் சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் ‘வர்ணாசிரமம்’ என்னும் கருத்தியல் தமிழ்ப் பகுதிகளில் வேரூன்றவில்லை.பௌத்த மதம் தொடர்பான சான்றுகள் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் கழிமுகப் பகுதிகள் பல பெளத்த மையங்களைக் கொண்டுள்ளன. பௌத்த மதம் எந்த அளவிற்கு ஆழமாக வேறூன்றியிருந்தது என்பதை அமராவதி, நாகர்ஜுனகொண்டா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் பௌத்த ஸ்தூபிகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சமண மதத்தோடு ஒப்பிடுகையில் பௌத்த மதத்திற்கான சான்றுகள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன. தமிழகத்தில் காணப்படும் தமிழ் - பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய எண்ணற்ற குகை உறைவிடங்கள் பௌத்த மதத்தைக் காட்டிலும் சமண மதம் செல்வாக்குடன் விளங்கியதைப் பறை சாற்றுகின்றன. பொதுமக்களின் மீது இம்மதங்கள் கொண்டிருந்த செல்வாக்கை அறிந்துகொள்ள இயலவில்லை என்றாலும், வணிகர்களும் சாதாரண மக்களும் சமணத் துறவிகளுக்குப் பாறை மறைவுகளில் படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர், காணிக்கை செலுத்தினர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய சேவை செய்துள்ளனர்.


5.8 களப்பிரர்களின் காலம் - சங்கம் மருவிய காலம் :


சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ.ஆ. 300-600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது. இவ்விடைவெளியில் போர்க்குணம் மிக்க களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித், தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளான மூவேந்தர்களையும் தோற்கடித்ததால் இக்காலமானது களப்பிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர். ஒருவேளை இவ்விடைப்பட்ட காலத்தில் தான் முந்தைய தமிழ்ப் பண்பாட்டின் பல தனிக்கூறு மறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இக்கருத்தை சரியானது என ஏற்பதிற்கில்லை.ஆனால் தமிழ்ப் பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் இக்காலத்தில்தான் தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென் கீழ்க் கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே. இக்காலத்தில் அவைதீக மதங்களான சமணமும் பெளத்தமும் பெரும் செல்வாக்குப் பெற்றமையால், வைதீக வேதபுராண கருத்துக்களைக் கொண்டிருந்த அறிஞர்கள், ஆட்சி புரிகின்ற களப்பிரர்கள் தீயவர்கள் என்ற கருத்துத் தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

இக்கால கட்டம் பற்றி அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட புதிய விளக்கத்தின் படி இக்காலகட்டம் ஒரு பெறும் மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்ற மாறுதல் காலமாகும். இந்த மாறுதல்களின் விளைவாகவே, பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது என்று அண்மைக்கால வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். தொடக்கத்தில் இந்நாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ - வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர். ஆனால் இம்மதங்கள் பக்தி இயக்க அடியார்களின் வெறுப்பைத் தூண்டும் வகையில் பொது மக்களிடையே சமண பௌத்த மதங்கள் பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தன.சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.


பாடச் சுருக்கம் :


• தமிழை எழுதுவதற்காக எழுத்துமுறை பயன்பாட்டில் இருந்தமை, மேலும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் ஆகிய எழுத்துவடிவச் சான்றுகள் கிடைப்பதால், தென் இந்தியாவின் வரலாற்றை பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தெளிவாக அறிய முடிகிறது.

• இரும்புக் காலத்தில் தலைமை உரிமை கொண்டவர்களாக இருந்த சேர, சோழ, பாண்டியர் சங்க காலத்தில் வேந்தர் என்னும் பட்டப் பெயரோடு அரசர்களாயினர்.

• ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரப் பகுதிகளை ஆட்சி செய்த சாதவாகனர்கள் மூவேந்தர்களின் சமகாலத்தவர்.

• தென்னிந்தியாவில் பௌத்தமும் சமணமும் வலுவான நிலையிலிருந்தன. ஆளும் வர்க்கத்தினரிடையே வேதக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின.

• இந்தியப் பெருங்கடல் பகுதிகளோடும் ரோமானிய உலகத்தோடும் கடல் சார் வணிகம் வளர்ந்தது.

• முன்பிருந்ததைப் போலவே களப்பிரர் காலத்திலும் பண்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றது.


Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...